SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

முடிந்தது ஹர்திக் பாண்டியா டிரேட்? பதிலுக்கு 2 வீரர்களை தரும் ஐபிஎல் அணி! முழு விவரம்

Hardik Pandya Trade Latest Update: 2027 ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியாவை அணியில் இருந்து மாற்றுவது தொடர்பாக முன்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங் மற்றும் விஷ்ணு வினோத் ஆகிய இரு வீரர்களை வழங்க பஞ்சாப் கிங்ஸ் முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Written By R Balaji
Published: Nov 03, 2026, 01:20 PM IST | Updated: Nov 03, 2026, 01:23 PM IST
Join

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ஹர்திக் பாண்டியா, அடுத்த சீசனின் வேறு அணிக்கு செல்ல விரும்புவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதையடுத்து, அவரை தங்கள் அணியில் இணைக்க பல்வேறு ஐபிஎல் அணிகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவை மும்பை இந்தியன்ஸ் கேட்டதாகவும், அவரை கொடுக்க சிஎஸ்கே நிர்வாகம் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் இல்லாமல் முடிவுக்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த அணிகளும் தங்களிடம் உள்ள முக்கிய வீரர்களை டிரேடிங் மூலம் விடுவிக்க தயக்கம் காட்டியதால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கு ஆர்வம் காட்டியதாக கூறப்படுகிறது. இதற்காக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மாற்றாக வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூடுதலாக மற்றொரு வீரரையும் மும்பை இந்தியன்ஸ் கேட்டதால் இந்த முயற்சி முடிவுக்கு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் கிங்ஸ் போட்ட டிரேடிங் கணக்கு

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் பஞ்சாப் கிங்ஸ் அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்டர் தேவைப்படுவதாக கூறப்படும் நிலையில், அதற்கு ஏற்ற வகையில், அர்ஷ்தீப் சிங் மற்றும் விஷ்ணு வினோத் ஆகிய இருவரையும் வழங்க பஞ்சாப் கிங்ஸ் முன்வந்துள்ளதாக தாக்வல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரு வீரர்களின் வருகை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால், டிரேடிங் தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஷ்தீப் சிங்: மும்பை இந்தியன்ஸுக்கு லாபமா?

பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐபிஎல் 2026 சீசனில் அர்ஷ்தீப் சிங் 14 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்களை கைபற்றினார். இருப்பினும் அவரது எகானமி ரேட் 10.20 ஆக இருந்தது.

அர்ஷ்தீப் சிங்கின் முக்கிய பலம் பவர் பிளே ஓவர்களில் பந்துவீசுவதுதான். ஆரம்ப ஓவர்களில் விக்கெட்டுகளை கைப்பற்றும் திறன் கொண்ட அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே ஜஸ்பிரித் பும்ரா இருப்பதால் அவருடன் அர்ஷ்தீப் சிங் இணைந்து பந்துவீசுவது என்பது அணிக்கு கூடுதல் பலத்தை கொடுக்கும். குறிப்பாக, பவர் பிளேவில் அர்ஷ்தீப் சிங்கையும், கடைசி ஓவர்களில் பும்ராவையும் பயன்படுத்துவதன் மூலம் எதிரணியின் ரன்களை கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பு உள்ளது.

விஷ்ணு வினோத் வருகை.. விக்கெட் கீப்பர் பிரச்சனைக்கு தீர்வா?

கேரளாவை சேர்ந்த விஷ்ணு வினோத், விக்கெட் கீப்பர் பேட்டராக செயல்பட்டு வருகிறார். 32 வயதாகும் அவர், உள்ளூர் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பான அனுபவம் கொண்டவர். இதுவரை 75க்கும் அதிகமான டி20 போட்டிகளில் விளையாடியுள்ள விஷ்ணு வினோத், 32.50 சராசரியில் 140 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 1,750 ரன்களை எடுத்துள்ளார். இதில் 9 அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் அடங்கும்.  

மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்யக்கூடிய அவர், அணிக்கு தேவையான நேரத்தில் அதிரடியாக ரன்களை சேர்க்கும் திறன் கொண்டவர். மேலும், விக்கெட் கீப்பிங் செய்வதற்கான வாய்ப்பும் இருப்பதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கூடுதல் தேர்வாக இருக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே குவின்டன் டி காக், ரியான் ரிகில்டன் மற்றும் ராபின் மின்ஸ் போன்ற விக்கெட் கீப்பர் பேட்டர்கள் உள்ளனர்.

இதனால், விஷ்ணு வினோத் அணிக்கு வந்தால், விக்கெட் கீப்பர் இடத்திற்கான போட்டி அதிகரிக்கலாம். குறிப்பாக, இந்திய விக்கெட் கீப்பர் பேட்டராக அவரை பயன்படுத்துவதன் மூலம் அணியின் வீரர் தேர்வில் கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கலாம்.

ஹர்திக் பாண்டியா டிரேடிங்.. மும்பைக்கு என்ன பலன்?

ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய ஆல்ரவுண்டராகவும், கேப்டனாகவும் இருந்து வருகிறார். அவரது இடத்தை நிரப்புவது அணிக்கு எளிதான விஷயமாக இருக்காது. ஆனால், அர்ஷ்தீப் சிங் போன்ற இந்திய வேகப்பந்து வீச்சாளரும், விஷ்ணு வினோத் போன்ற விக்கெட் கீப்பர் பேட்டரும் அணிக்கு கிடைத்தால், இரண்டு முக்கிய இடங்களை நிரப்ப முடியும் என்ற கணக்கு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சாதகமாக இருக்கலாம்.

மறுபுறம், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கிடைத்தால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் அனுபவம் வாய்ந்த ஆல்ரவுண்டர் கிடைப்பார். மேலும், கேப்டனாக செயல்படும் வாய்ப்பும் அவருக்கு கிடைக்கலாம். இதனால், இரு அணிகளுக்கும் இந்த டிரேடிங் ஒப்பந்தம் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES