இந்திய அணியின் மோசமான டெத் பௌலிங்... கில் - கம்பீர் செய்ய வேண்டியது என்ன? Explained
இந்திய ஓடிஐ அணியின் பந்துவீச்சில் பெரும் ஓட்டை இருக்கிறது. அதை 2027 உலகக் கோப்பை தொடருக்கு முன் அடைத்து, பிரச்னையை தீர்க்க வேண்டும். அந்த வகையில், இந்திய அணி செய்ய வேண்டிய விஷயங்கள் என்பதை இங்கு விரிவாக அலசலாம்.
Team India Bowling Concerns Explained: 2027 உலகக் கோப்பை அட்டவணை அறிவிக்கப்பட்டுவிட்டது. அனைத்து அணிகளுக்கும் உலகக் கோப்பை தொடருக்கு தயாராக இன்னும் சரியாக ஓராண்டு காலம் இருக்கிறது.
கடந்த 2023 உலகக் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை வந்து, சாம்பியன்ஷிப்பை தவறவிட்ட இந்திய அணி நிச்சயம் இந்த முறை கப் அடிக்க துடியாய் துடிக்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் அதற்காகவே தவமாய் தவமிருக்கின்றனர்.
மேலும் படிக்க | ICC புதிய விதிகள்: ஓடிஐ, டி20ஐ, டெஸ்ட் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள்? Explained
2003, 2023 உலகக் கோப்பையின் காயம்
2023 மட்டுமின்றி 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத வலிகளை கொடுத்த போட்டியாகும். அந்த போட்டியும் தென்னாப்பிரிக்காவிலேயே நடந்தது.
சுமார் 24 ஆண்டுகளுக்கு பின் அதே மண்ணில் இந்திய அணி உலகக் கோப்பை வென்றால் 2003இல் கோப்பையை தவறவிட்டதால் ஏற்பட்ட காயத்திற்கும் மருந்து போட்டுக்கொள்ள முடியும். ஆனால், இந்திய அணி வீழ்த்த முடியாத அணியாக திகழ்கிறதா என்றால் அது இல்லை என்றுதான் கூறியாக வேண்டும்.
இந்திய அணி வீழ்த்த முடியாத அணியா?
அந்த வகையில், 2027 உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணி சரியான பாதையில் பயணித்தாலும், இன்னும் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன என்பதை இதில் விரிவாக காணலாம்.
பேட்டிங் ஆர்டர் எப்படி இருக்கு?
இந்திய அணியை பொருத்தவரை பேட்டிங்கில் எவ்வித பிரச்னையும் இல்லை எனலாம். ஓபனிங்கில் அனுபவமும் அதிரடியும் கலந்த இணை இருக்கிறது. ரோஹித் - கில் காம்போ கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாகவே செயலாற்றி உள்ளது. பேக்-அப்பிற்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருப்பதால் ஓபனிங் குறித்த கவலைப்பட ஒன்றுமில்லை.
மிடில் ஆர்டரிலும் விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் என்ற அனுபவ வீரர்கள் நிரம்பியிருக்கிறார். 2023 உலகக் கோப்பையிலும் இதே மிடில் ஆர்டர்தான் இந்திய அணியை பல போட்டிகளில் காப்பாற்றியது. தற்போது வெளிநாட்டு சூழல் என்றாலும் இந்த இணைக்கு போதிய அனுபவம் இருப்பது கவனிக்கத்தக்கது.
டாப் ஆர்டரின் ஒரே பிரச்னை
மிடில் ஆர்டரில் பேக்-அப்பாக ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார். விக்கெட் கீப்பர் பேக்-அப்பாக துருவ் ஜூரேல் இருப்பார். ரிஷப் பண்ட் கூட ஒருவகையில் நல்ல பேக்-அப் ஆப்ஷன். எனவே, டாப் ஆர்டர் - மிடில் ஆர்டரில் சிக்கல் இல்லை.
இருக்கும் ஒரே பிரச்னை இவர்களில் யாரும் பார்ட் டைம் பௌலர் இல்லை என்பது மட்டும். 2011 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் போன்று பந்துவீசக் கூடிய ஆல்-ரவுண்டர் தறபோதைய இந்திய அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்துவீச்சு ஆல்-ரவுண்டர்
டாப் 6 பேட்டர்கள் பந்துவீச மாட்டார்கள் எனும்போது நிச்சயம் இரண்டு ஆல்-ரவுண்டர்கள் பிளேயிங் லெவனில் தேவை. ஹர்திக் பாண்டியா உடற்தகுதியுடன் இருக்கும்பட்சத்தில் அவர்தான் முதல் ஆப்ஷன். காயத்தில் இருந்து குணமடைந்து நியூசிலாந்து தொடரில் அவர் விளையாடுவதை பார்க்க ஒட்டுமொத்த நாடே காத்திருக்கிறது.
இவருக்கு பேக்-அப் ஆப்ஷனாக நிதிஷ் குமார் ரெட்டியை பிசிசிஐ தற்போதே முயர்சித்து பார்க்கிறது. அவரும் கடந்து வர வேண்டிய பாதை நெடுந்தூரம் இருக்கிறது. இன்னும் அவரது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு திறனை வளப்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஸ்பின் ஆல்-ரவுண்டர்கள்
அதேபோல், சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக யாரை எடுக்கப் போகிறார்கள் என்பதும் பெரும் விவாதமாக இருக்கும். அக்சர் பட்டேல் - ஜடேஜா ஆகியோருக்கு இடையில் கடும் போட்டி இருக்கும். அதேபோல், நமன் திர் - வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு இடையிலும் கடும் போட்டி நிலவும்.
மேலும் படிக்க | 2027 ஐசிசி உலகக் கோப்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா பிளான் என்ன? Explained
குல்தீப் யாதவ் விளையாடுவாரா... இல்லையா...
பிரீமியம் ஸ்பின்னராக குல்தீப் யாதவ் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்பது அஸ்வின் உள்பட பல மூத்த வீரர்களின் கருத்தாக உள்ளது. கம்பீரும் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பளிப்பார் என்றே தெரிகிறது. ஆனால், கில் மனதில் என்ன இருக்கிறது என்பது அவருக்கே வெளிச்சம்.
குல்தீப் யாதவ் இருக்கிறாரா இல்லையா என்பதை வைத்துதான் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை தேர்வு செய்ய முடியும். குல்தீப் யாதவ் இல்லை என்றால் இந்திய அணி நமன் திர் அல்லது வாஷிங்டன் சுந்தர் என ஒரு ஆப் ஸ்பின் ஆல்-ரவுண்டர் ஆப்ஷன் உடனும், ஜடேஜா அல்லது அக்சர் பட்டேல் என இடது கை ஸ்பின் ஆல்-ரவுண்டர் ஆப்ஷன் உடனும் செல்லலாம்.
அதாவது 2 ஸ்பின் ஆல்-ரவுண்டர்களை பிளேயிங் லெவனில் வைத்துக்கொள்ளலாம். இதன்மூலம், மூன்று பிரீமியம் வேகப்பந்துவீச்சாளர்களை கூட இந்திய அணி தனது காம்பினேஷனில் பயன்படுத்திக்கொள்ள முடியும். ஒருவேளை குல்தீப் யாதவ் விளையாடினால் ஒரே ஸ்பின் ஆல்-ரவுண்டருடன் இந்திய அணி செல்ல வேண்டும்.
இந்திய அணியின் முக்கிய சிக்கல்
இவை அனைத்தும் இந்திய அணியால் தீர்த்துக்கொள்ளக் கூடிய பிரச்னைகள்தான். இந்திய அணிக்கு பெரிய தலைவலியாய் இருக்கப்போவது வேகப்பந்துவீச்சாளர்களின் தேர்வுதான். தற்போதைக்கு இந்திய அணி ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரர், ஆகிப் நபி, அன்சுல் கம்போஜ் என பல வேகப்பந்துவீச்சு ஆப்ஷன்களை வைத்திருக்கிறது.
வேகப்பந்துவீச்சாளர்களிடம் என்ன பிரச்னை?
ஆனால், இதில் 2-3 பேர்தான் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பார்கள். பும்ரா உடற்தகுதியுடன் இருந்தால் நிச்சயம் பிளேயிங் லெவனில் வந்துவிடுவார். அவருக்கு துணையாக யார் என்பதே அடுத்த பெரிய கேள்வி. சிராஜ் முதல் ஆப்ஷனாக தெரிந்தாலும் தென்னாப்பிரிக்காவில் அவரால் மிடில் ஓவர்களில் என்ன வெரைட்டியை அளிக்க முடியும் என்ற கேள்வி நீடிக்கிறது.
அவர் இன்னும் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். பிரசித் கிருஷ்ணா அனைத்து கட்டத்திலும் விக்கெட் எடுக்கிறார் என்றாலும் அதிகம் ரன்களை கசிய விடுகிறார், அதாவது மோசமான பந்துகளை சற்று அதிகமாக வீசுகிறார் எனலாம். குர்னூர் பிரரும் ஏறத்தாழ அதே கதைதான். பிரசித்தை விட அனுபவம் குறைவு என்பதும் உள்ளது. அவரால் தென்னாப்பிரிக்க சூழலில் ஜொலிக்க முடியுமா என்ற கேள்வி இருக்கிறது.
ஹர்ஷித் ராணாவின் முக்கியத்துவம்
ஹர்ஷித் ராணாவை கம்பீர் மலை போல் நம்பி உள்ளார். அவர் உடற்தகுதியுடன் வந்துவிட்டால் அவர்தான் நம்பர் 8 அல்லது நம்பர் 9 பேட்டர். குல்தீப் யாதவ் இடத்திற்கும் இவர் ஆப்பு வைக்க வாய்ப்புள்ளது. இவரை எடுத்தால் இந்திய அணி காம்பினேஷனில் சமநிலை உருவாகவும் வாய்ப்புள்ளது.
வேறு ஆப்ஷன்கள் இருக்கா?
ஆகிப் நபி, அன்சுல் கம்போஜ் ஆகியோருக்கு பெரியளவில் வாய்ப்பில்லை. அதேபோல், முகமது ஷமி, புவனேஷ்வர் குமாரை இந்திய அணி கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் நேற்றைய மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான தோல்விக்கு பின் பலரும் ஷமி, புவி குறித்த பேச்சுகளை அதிகப்படுத்தி உள்ளனர். நடப்பு ஓடிஐ தொடரில், போட்டியின் மூன்று கட்டத்திலும் இந்திய வேகப்பந்துவீச்சு படை சொதப்பி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த பாரத்தை பும்ரா மீது வைப்பதும் சரியாக இருக்காது. மேலும் இளம் வீரர்களுக்கு நெருக்கடியை கையாளும் திறனை வளர்த்தெடுப்பதிலும் இந்திய அணி முயற்சிக்க வேண்டும். நேற்றைய இந்திய அணியின் டெத் ஓவர் பந்துவீச்சு பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி இல்லை. கேப்டனாக சுப்மான் கில்லும் வளர வேண்டிய தேவையை நேற்றைய போட்டி சுட்டிக்காட்டியது எனலாம்.
கில் சுட்டிக்காட்டிய 2 பிரச்னைகள்
சுப்மான் கில் போட்டி முடிந்ததும் இந்திய அணியில் இருக்கும் 2 முக்கிய பிரச்னைகளை சுட்டிக்காட்டினார். அவர் கூறியதாவது:
- எங்கள் பீல்டிங் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். நாங்கள் சுமார் 6-7 கேட்ச்களை தவறவிட்டோம். உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இது நல்ல அறிகுறி அல்ல.
- நாங்கள் டெத் ஓவர் பந்துவீச்சில் கவனம் செலுத்த வேண்டும். டெத் ஓவர்களில் பந்துவீசும்போது நாங்கள் தாக்குதல் தொடுக்கிறோமா அல்லது தடுப்பாட்டத்தை மேற்கொள்கிறோமா என்பதில் எங்களுக்கே ஒரு தெளிவில்லை.
- ஒருநாள் அப்படிப்பட்ட ஒரு போட்டியில் எதிரணி 5-6 விக்கெட்டை இழந்திருந்தால், என்ன பீல்ட் செட்அப் அமைப்பது, டெத் ஓவர்களை விரைவாக வீசுகிறோமா அல்லது மிடில் ஓவர்களை போலவே பந்துவீசுகிறோமா என்பதில் ஒருபோதும் உறுதியாக தெரியவில்லை. நிச்சயமாக நாங்கள் மேம்படுத்த வேண்டிய சில பகுதிகள் இவை என நினைக்கிறேன்.
முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
இவ்வாறு சுப்மான் கில் பேசியிருந்தார். பீல்டிங் ஒருபுறம் இருக்கட்டும். டெத் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசவும், அதிக அழுத்தத்தை கையாளவும் ஜஸ்பிரித் பும்ரா உடன் அனுபவம் வாய்ந்த வீரர் தேவை.
எனவே, தொடர் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் முகமது ஷமிக்கு இந்திய அணி ஒரு வாய்ப்பு கொடுக்கலாம். தற்போது தேர்வுக்குழு தலைவர் மாறும் நிலையில், தேர்வுக்குழுவின் மனநிலையும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகக் கோப்பைக்கு முன் வரை 20 ஓடிஐ போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. எனவே, ஒவ்வொரு தொடரிலும் இந்திய அணி முன்னேற்றம் காண வேண்டும்.
இந்திய அணி செய்ய வேண்டியது
அந்த வகையில், அடுத்து நவம்பரில் நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் 5 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் முகமது ஷமிக்கு வாய்ப்பளிக்கலாம். நிச்சயம் அது இந்திய அணிக்கு ஒரு தெளிவை கொடுக்கும். அடுத்தாண்டு உலகக் கோப்பைக்கு முன் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று இந்திய அணி ஓடிஐ தொடரில் விளையாட இருக்கிறது. எனவே அந்த தொடருக்கு முன்னர் இந்திய அணி அதன் காம்பினேஷனை கண்டறிவது அவசியம். இவற்றை இந்திய அணி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.