இந்திய அணியின் 6 இமாலய சாதனைகள்.. எந்த அணியாலும் முறியடிக்கவே முடியாது!
சச்சின், ரோகித், தோனி, கும்ப்ளே உள்ளிட்ட இந்திய வீரர்கள் மற்றும் அணியின் காலத்தால் அழியாத 6 இமாலய கிரிக்கெட் சாதனைகள் இங்கே.
உலகக் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி படைத்துள்ள சாதனைகள் ஏராளம். இருப்பினும், சில சாதனைகள் காலத்தை கடந்து, எந்தவொரு அணியாலும் அல்லது வீரராலும் முறியடிக்க முடியாத இமாலய சாதனைகளாக விளங்குகின்றன. அந்த வகையில், இந்திய கிரிக்கெட்டின் பொற்காலத்தை உலகிற்கு பறைசாற்றும் அந்த 6 முக்கிய சாதனைகளை குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
1. சச்சின் டெண்டுல்கரின் 100 சர்வதேச சதங்கள்
இந்திய அணியின் தலைசிறந்த வீரரான சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார். இதில் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும், ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களும் அடங்கும். இந்த சாதனை எவராலும் எட்ட முடியாத ஒன்றாக உள்ளது.
2. ரோகித் சர்மாவின் 264 ரன்கள் அதிரடி
கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய வீரர் ரோகித் சர்மா 264 ரன்கள் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் தனிநபர் அதிகபட்ச ரன் அடித்த உலக சாதனை இதுவாகும். இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 2015 உலகக்கோப்பையில் 237 ரன்கள் எடுத்ததே இரண்டாமிடத்தில் உள்ளது.
3. 20, 50 மற்றும் 60 ஓவர் உலகக்கோப்பைகளை வென்ற ஒரே அணி
உலகக் கிரிக்கெட் வரலாற்றில் 60 ஓவர், 50 ஓவர் மற்றும் 20 ஓவர் என அனைத்து வடிவ உலகக்கோப்பைகளையும் கைப்பற்றிய ஒரே அணியாக இந்தியா திகழ்கிறது. 1983 இல் 60 ஓவர் உலகக்கோப்பையையும், 2011 இல் எம்.எஸ். தோனி தலைமையில் 50 ஓவர் உலகக்கோப்பையையும் இந்தியா வென்றது. மேலும் 2007 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் டி20 உலகக்கோப்பையையும் கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது.
4. அதிக சர்வதேச ரன்கள் - சச்சின் டெண்டுல்கர்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 34,347 ரன்கள் குவித்து சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். ஒருநாள் போட்டிகளில் 18,000க்கும் அதிகமான ரன்களையும், டெஸ்ட் போட்டிகளில் 15,000க்கும் அதிகமான ரன்களையும் அவர் குவித்துள்ளார். இந்த சாதனையை எதிர்காலத்தில் எந்தவொரு வீரரும் முறியடிப்பது மிகவும் கடினம்.
5. எம்.எஸ். தோனியின் மூன்று தனித்துவ சாதனைகள்
அனைத்து வகையான ஐசிசி (ICC) கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை எம்.எஸ். தோனி வைத்துள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 2007 இல் டி20 உலகக்கோப்பை, 2011 இல் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 இல் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றையும் கைப்பற்றி வரலாறு படைத்தது.
6. அனில் கும்ப்ளேயின் 10 விக்கெட் சாதனை
கடந்த 1999 ஆம் ஆண்டு டெல்லி ஃபிரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்ஸில் 74 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் வீழ்த்தப்பட்ட இரண்டாவது சிறந்த பந்துவீச்சு இதுவாகும்.