அதிருப்தியில் அபிஷேக் சர்மா.. SRHல் இருந்து MI செல்கிறாரா? ரூ. 30 கோடிக்கு டிரேட்?
ஐபிஎல் 2027ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இஷான் கிஷன் நியமிக்கப்படலாம் என்ற தகவலால் அதிருப்தியடைந்துள்ள அபிஷேக் சர்மா, பஞ்சாப் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் 2027 சீசனுக்கான மினி ஏலம் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அணிகளும் தங்களது அணியை வலுபடுத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. வீரர்களை தக்கவைப்பது விடுவிப்பது மட்டுமின்றி, கேப்டன்சி உள்ளிட்ட முக்கிய முடிவுகளையும் அணிகள் பரிசீலித்து வருகின்றன.
அந்த வகையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன்சி விவகாரம் தற்போது கவனம் பெற்றுள்ளது. அணியின் தற்போதைய கேடன் பாட் கம்மின்ஸ் அடுத்த சீசனில் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆஷஸ் தொடர் மற்றும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை என அடுத்தடுத்து சர்வதேச தொடர்கள் இருப்பதால், ஐபிஎல் 2027ல் இருந்து விலக அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இஷான் கிஷனுக்கு கேப்டன் பதவியா?
கம்மின்ஸ் விலகும் பட்சத்தில் புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயம் சன்ரைசர்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில், இஷான் கிஷனை அணியின் அடுத்த கேப்டனாக நியமிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இஷான் கிஷனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் தகவல், அணியின் முக்கிய வீரரான அயிஷேக் சர்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபிஷேக் சர்மா அதிருப்திக்கு காரணம் என்ன?
அபிஷேக் சர்மா எதிர்காலத்தில் கேப்டனாக செயல்பட வேண்டும் என்ற விருப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அணியின் கேப்டன் பொறுப்பு கிடைத்தால், இந்திய அணியிலும் தனது முக்கியத்துவத்தை அதிகரித்துக்கொள்ள முடியும் என்றும், நட்சத்திர வீரர் என்ற அந்தஸ்தை தக்கவைக்க உதவும் என்றும் அவர் கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், சன்ரைசர்ஸ் நிர்வாகம் இஷான் கிஷனை கேப்டனாக தேர்வு செய்ய முடிவு செய்தால், அடுத்த சில ஆண்டுகளுக்கு அணியில் வீரராக மட்டுமே தொடர வேண்டிய நிலை ஏற்படும் என அபிஷேக் சர்மா கருதுவதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ்?
இதன் காரணமாக எதிர்காலத்தில் கேப்டன்சி வாய்ப்பு கிடைக்கும் அணிக்கு செல்ல அபிஷேக் சர்மா விரும்புவதாக தகவலகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் அவரது விருப்பப் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது.
பஞ்சாப் அணிக்கு சென்றால் வரும் காலங்களில் கேப்டன் பொறுப்பை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சென்றால் அடுத்த சீசனிலேயே அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணி அபிஷேக் சர்மாவின் சொந்த மாநில அணியாக இருப்பதும், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக இருப்பதும் அவரது தேர்வுக்கு காரணமாக இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அபிஷேக்கை சமாதானப்படுத்த முயற்சிக்கும் சன்ரைசர்ஸ்
அபிஷேக் சர்மாவின் அதிருப்தியை தொடர்ந்து, அவரை அணியிலேயே தக்கவைத்துக்கொள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிர்வாகம் பேச்சுவார்ஹ்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவர் பஞ்சாப் கிங்ஸ் அல்லது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு செல்லும் முடிவில் இருப்பதாகவும் சன்ரைசர்ஸ் நிர்வாகத்தின் சமாதான முயற்சிகளுக்கு அவர் சாதகமாக பதிலளிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறுபுறம் இஷான் கிஷனை கேப்டனாக நியமிக்கும் முடிவில் சன்ரைசர்ஸ் நிர்வாகம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர் - பேட்டர் என்பதால் அணியின் பேட்டிங் மற்றும் கள நிர்வாகம் ஆகிய இரண்டிலும் அவர் முக்கிய பங்காற்ற முடியும் என நிர்வாகம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏலத்தில் ரூ. 30ன் கோடி?
ஒருவேளை அபிஷேக் சர்மா மினி ஏலத்திற்கு வந்தால், அவரை வாங்குவதற்கு பல அணிகள் கடும் போட்டியில் இறங்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவரது திறமை மற்றும் எதிர்கால வாய்ப்புகளை கருத்தில் கொண்டு ரூ. 30 கோடி வரையிலும் செலவு செய்ய அணிகள் தயாராக இருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.
அதேசமயம் அவர் ஏலத்திற்கு வராமல் டிரேடிங் மூலம் வேறு அணிக்கு செல்ல விரும்பினால், அவருக்கு மாற்றாக தரமான வீரரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேட்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அபிஷேக் சர்மாவின் எதிர்காலம் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் தேர்வு மற்றும் அவர் வேறு அணிக்கு செல்கிறாரா என்பது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.