2026 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. புள்ளிப்பட்டியலில் 8 வது இடத்தையே பிடித்தது. சரியான பிளேயிங் லெவன் கூட்டணியை உருவாக்க முடியாமல் தடுமாறிய சிஎஸ்கே தொடர்ந்து மூன்றாவது சீசனாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற தவறியது. இதனால், அடுத்த சீசனுக்கு வலுவான அணியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே நிர்வாகம் உள்ளது.
2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியல் இன்று வெளியாக உள்ளது. இந்த நிலையில், சென்னை அணி சில முக்கிய மாற்றங்களை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புதிய தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கானின் கீழ் அணியின் வீரர்கள் தேர்வில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் ஜேக் எட்வர்ட்ஸ் ஆகியோர் சென்னை அணிக்கு வந்துள்ள நிலையில், ஏலத்திற்கு முன்பாக சில வீரர்களை விடுவிக்க நிர்வாகம் திட்டமிடலாம்.
சென்னை அணி விடுவிக்க வாய்ப்புள்ள வீரர்களின் பட்டியலில் முதன்மையான பெயராக பிரசாந்த் வீர் இடம்பெற்றுள்ளார். கடந்த ஏலத்தில் ரூ 14.20 கோடிக்கு அவரை வாங்கியிருந்தது சிஎஸ்கே. தற்போது ஏலத்திற்கான தொகையை அதிகரிக்கும் நோக்கில் அவரை விடுவிக்க நிர்வாகம் முடிவு செய்யலாம் என கூறப்படுகிறது.
ஒருவேளை பிரசாந்த் வீரை மீண்டும் அணியில் சேர்க்க விரும்பினால், ஏலத்தில் ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி குறைந்த தொகைக்கு வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால், அவரை விடுவிப்பதன் மூலம் பெரிய தொகையை ஏலத்திற்காக சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் போதிய வாய்ப்புகளை பெறாத ராகுல் சாஹரும் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது. இந்திய வீரர்களை பொறுத்தவரை குர்ஜப்னீத் சிங், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரும் வெளியேற வாய்ப்புள்ளது. வெளிநாட்டு வீரர்களில் மேத்யூ ஷார்ட், ஜேக் பால்க்ஸ், டியான் ஃபாரெஸ்டர் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் ஆகியோரின் பெயர்களும் உத்தேச விடுவிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து நீடிக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், எம்.எஸ். தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்பது குறித்த தெளிவான தகவல் இன்னும் வெளியாகவில்லை. இளம் வீரர்களான ஆயுஷ் மாத்ரே, கார்த்திக் சர்மா, உர்வில் படேல் ஆகியோருக்கு நிர்வாகம் தொடர்ந்து ஆதரவு அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக நூர் அகமது நீடிக்க வாய்ப்புள்ளது. சஞ்சு சாம்சன், சர்ஃபராஸ் கான், டெவால்ட் பிரேவிஸ், சிவம் துபே உள்ளிட்ட வீரர்களையும் தக்கவைக்க சிஎஸ்கே திட்டமிடலாம்.
இந்த பட்டியல் உத்தேசமானது மட்டுமே. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு பட்டியலுக்குப் பிறகே அணியின் உண்மையான மாற்றங்கள் குறித்த விவரங்கள் தெரியவரும்.