2027 ஐபிஎல் தொடருக்கான அணியை வலுப்படுத்தும் முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறர்து. அதன் முதற்கட்டமாகவே 18 ஆண்டுகளாக தனது வெற்றி தோல்விகளில் பயணித்த ஸ்டீபன் பிளேமிங்கை நீக்கிவிட்டு, புதிய தலைமை பயிற்சியாளராக ஜாகீர் கானை நியமித்தனர். இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் கலீல் அகமது மற்றும் நேதன் எல்லீஸை கொடுத்துவிட்டு லியாம் லிவிங்ஸ்டன், ஜாக் எட்வர்ட்ஸ் ஆகியோரை வாங்கினர். இந்த நிலையில், சிஎஸ்கே மற்றொரு டிரேட்டுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளுடன் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னிடம் இருக்கும் ஷிவம் துபேவை மும்பை அணியிடம் கொடுத்துவிட்டு, ஹர்திக் பாண்டியாவை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், தற்போது தீபக் சஹார் மற்றும் ஷர்தூல் தாகூர் ஆகிய இருவரையும் அணிக்கு கொண்டுவர சிஎஸ்கே விரும்புவதாக தெரிகிறது.
இந்த இரண்டு வீரர்களும் ஏற்கனவே சென்னை அணிக்காக விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். குறிப்பாக அணியின் வெற்றிகளில் இவர்களது பங்களிப்பு முக்கியமானதாக இருந்துள்ளது.
தீபக் சஹார் 2018 முதல் 2024ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காக 76 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். குறிப்பாக, பவர்பிளே ஓவர்களில் மட்டும் 57 விக்கெட்களை வீழ்த்தி தனது திறமையை நிரூபித்துள்ளார். 2021ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாகும். சிஎஸ்கே அணிக்காக விளையாடிய காலகட்டத்தில் அவரது பந்துவீச்சு எகானமி 7.64 ஆக இருந்தது.
மற்றொரு வீரரான ஷர்தூல் தாகூர், 2018 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலும், மீண்டும் 2024ஆம் ஆண்டிலும் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில் 57 போட்டிகளில் பங்கேற்று 60 விக்கெட்களை எடுத்துள்ளார். அவரது பந்துவீச்சு எகானமி 9.09 ஆகும். பேட்டிங்கிலும் ஓரளவுக்குப் பங்களித்துள்ள அவர், 12 இன்னிங்ஸ்களில் 67 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 17 ரன்கள் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது.
குறிப்பாக, ஷர்தூல் தாகூர் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த 2018 மற்றும் 2021 ஆகிய இரண்டு சீசன்களிலும் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. இதனால், மீண்டும் இந்த வீரர்களை அணிக்கு கொண்டுவர நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.
மும்பை அணியுடனான பேச்சுவார்த்தை ஒருபுறம் இருக்க, குஜராத் டைட்டன்ஸ் அணியுடனும் சிஎஸ்கே நிர்வாகம் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பாக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் வீரர் உர்வில் படேலை வழங்கிவிட்டு, குஜராத் அணியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோர் ஆகிய இருவரில் ஒருவரை பெறுவதற்கு சென்னை அணி முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த ஒப்பந்தத்தில் குஜராத் அணி சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறது. வாஷிங்டன் சுந்தர் அல்லது சாய் கிஷோருக்கு பதிலாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டை வழங்க வேண்டும் என அந்த அணி எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. ருதுராஜை ஒப்பந்தத்தில் சேர்த்தால், கூடுதலாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவையும் வழங்க தயாராக இருப்பதாக குஜராத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
இதனால் இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக தெரிகிறது. அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணியுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாத சூழலில் ஷிவம் துபேவை பெற மும்பை நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் நிர்வாகம் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நவம்பர் 17ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அறிவித்துள்ளதாக கூறப்படும் நிலையில், அடுத்த சில நாட்களில் சிஎஸ்கே அணியின் டிரேடிங் நடவடிக்கைகள் எந்த முடிவை எட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.