IPL 2027 மினி ஏலம்: 4 தரமான பவுலர்களை தட்டிதூக்க CSK பிளான்.. முஸ்தபிசுர் வேண்டாம்!
Chennai Super Kings Latest News: ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் ரூ. 28.05 கோடி கையிருப்புடன் களமிறங்கும் சிஎஸ்கே, பவர் பிளே மற்றும் டெத் ஓவர் பந்துவீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் அனுபவமிக்க இந்திய மிடில் ஆர்டர் பேட்டரை குறிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 2027 மினி ஏலத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது வீரர்கள் தேர்வு மற்றும் ஏல வியூகங்களை தீவிரமாக வகுத்து வருகிறது. குறிப்பாக அணியின் பந்துவீச்சு பலத்தை அதிகரிப்பதற்உ அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. டெத் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தக்கூடிய பந்துவீச்சாளர் மற்றும் பவர் பிளேவில் விக்கெட் வீழ்த்தும் திறன் கொண்ட வீரரை அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது.
கடந்த சீசனில் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்த நேதன் எல்லிஸ் தற்போது அணியில் இல்லாததால், டெத் ஓவர்களில் பந்துவீசுவதற்கான சரியான மாற்று வீரரை தேட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், போட்டியின் தொடக்க ஓவர்களில் எதிரணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தும் திறன் கொண்ட பந்துவீச்சாளரும் சிஎஸ்கேவுக்கு தேவைப்படுகிறார்.
நான்கு வீரர்களுக்கு குறி!
இந்த தேவைகளை கருத்தில் கொண்டு நான்கு வேகப்பந்துவீச்சாளர்களை சிஎஸ்கே நிர்வாகம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக செயல்படக்கூடிய டிரெண்ட் போல்ட் மற்றும் தீபக் சஹார் ஆகியாரில் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், டெத் ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மதீஷா அல்லது ஆவேஷ் கான் ஆகியோரில் ஒருவரை வாங்கவும் சிஎஸ்கே ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. தேவைப்பட்டால், இந்த நான்கு வீரர்களில் இரண்டு பேரையும் ஏலத்தில் எடுக்க முயற்சி செய்யலாம் என்ற திட்டமும் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரூ. 28.05 கோடியில் பல தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம்
ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் சிஎஸ்கேவின் கையிருப்பில் ரூ. 28.05 கோடி மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், ஏலத்தில் ஒவ்வொரு வீரரையும் தேர்வு செய்வதிலும் கவனமாக செயல்பட வேண்டியுள்ளது. குறிப்பாக போல்ட், சஹார், பதிரனா, ஆவேஷ் கான் போன்ற வீரர்களுக்கு மற்ற அணிகளும் போட்டியிட வாய்ப்புள்ளது இவர்களில் ஒருவரை வாங்குவதற்கே ரூ. 10 கோடி வரை செலவாகக்கூடும். அப்ப்டியானால், மீதமுள்ள தொகையில் இந்திய சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர், கூடுதல் சுழற்பந்து வீச்சாளர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர் ஆகிய தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும்.
முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர்க்கிறதா சிஎஸ்கே?
வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் தனது பெயரை ஏலத்திற்கு பதிவு செய்திருந்தாலும், அவரை வாங்குவதில் சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா - வங்கதேசம் இடையிலான அரசியல் சூழலில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டால், அது வீரரின் பங்கேற்பு தொடர்பான தேவையற்ற சிக்கல்களை உருவாக்கலாம் என அணி நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது.
முன்னதாக தலைமை பயிற்சியாளர் ஜாகீர் கான் முஸ்தபிசுரை அணியில் சேர்க்க விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அவருக்கு பதிலாக இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் பெற்றுள்ள மதீஷா பதிரனாவை தேர்வு செய்தால், நீண்ட காலத்திற்கும் அணிக்கு உதவியாக இருக்கும் என சிஎஸ்கே நிர்வாகம் கணக்கிடுவதாக தெரிகிறது.
மிடில் ஆர்டர் பேட்டிங்கிலும் மாற்றம் தேவை
சிஎஸ்கேவின் பேட்டிங் வரிசை பெரும்பாலும் உறுதியாகிவிட்டதாக கருதப்பட்டாலும், மிடில் ஆர்டரில் ஒரு இடத்திற்கு இன்னும் சரியான வீரர் கிடைக்கவில்லை. தற்போது அந்த பொறுப்பில் இருக்கும் கார்த்திக் சர்மா எதிர்பார்த்த அளவுக்கு அதிரடியாக விளையாட தவறினால், அணியின் ரன் வேகம் பாதிக்கப்படலாம்.
இதனால், மினி ஏலத்தில் அனுபவமும் அதிரடியாக விளையாடும் திறனும் கொண்ட இந்திய மிடில் ஆர்டர் பேட்டர் ஒருவரை தேர்வு செய்யவும் சிஎஸ்கே திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில், டிரேடிங் முறையில் சாய் கிஷோரை அணிக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே, ஐபிஎல் 2027 மினி ஏலத்தில் வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் தேவையான மாற்றங்களை செய்து வலுவான அணியை உருவாக்குவதே சிஎஸ்கேவின் முக்கிய இலக்காக இருக்கும்.