SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

சஞ்சு சாம்சன் அவுட்.. இஷான் கிஷன் இன்? CSK - SRH இடையே மெகா டிரேடிங் பேச்சுவார்த்தை!

Chennai Super Kings Latest Trade Update: ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சஞ்சு சாம்சனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அனுப்பிவிட்டு, அவருக்கு பதிலாக தலா ரூ. 18 கோடி மதிப்பில் இஷான் கிஷனை டிரேடிங் மூலம் அணியில் எடுக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written By R Balaji
Published: Nov 17, 2026, 08:39 IST | Updated: Nov 17, 2026, 08:54 IST
Join

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிரடியான மாற்றங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக சஞ்சு சாம்சனை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அனுப்பிவிட்டு, அவருக்கு பதிலாக இஷான் கிஷனை அணிக்குகள் கொண்டுவர சிஎஸ்கே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இரு வீரர்களையும் தலா ரூ. 18 கோடிக்கு மாற்றிக்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

2027 ஐபிஎல் சீசனுக்கான வீரர்கள் டிரேடிங் நடவடிக்கைகளை நவம்பர் 17 ஆம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வைத்துக்கொண்டு, தேவையில்லாத வீரர்களை டிரேடிங் மூலம்  வெளியேற்றுவதிலும் கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் இடையிலான இந்த டிரேடிங் பேச்சுவார்த்தை கிரிக்கெட் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

சஞ்சு சாம்சன் அதிருப்தி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் 2027 தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் நீடிப்பார் என தலைமை பயிற்சியாளர் ஜாகீ கான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கேப்டன் பொறுப்பை எதிர்பார்த்திருந்த சஞ்சு சாம்சன் அதிருப்தியில் இருப்பதாகவும், இதன் காரனமாகவே அணியில் இருந்து வெளியேற விரும்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இழலில், சாம்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அனுப்புவது குறித்து ஜாகீர் கான் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக இஷான் கிஷனை சிஎஸ்கே அணிக்கு கொண்டுவருவதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இரு வீரர்களின் ஒப்பந்த தொகையும் ரூ. 18 கோடியாக இருப்பதால், தலா ரூ. 18 கோடி மதிப்பில் இந்த பரிமாற்றத்தை மேற்கொள்ள ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

சஞ்சு சாம்சனுக்கு கேப்டன் பதவி கொடுக்க விரும்பும் சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை, அடுத்த சீசனில் புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய கேப்டன் பாட் கம்மின்ஸ், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நிறைந்த அட்டவணை காரணமாக ஐபிஎல் 2027 தொடரில் விளையாடுவது சந்தேகமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அணியில் உள்ள அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் ஆகியோருக்கு கேப்டன்சி அனுபவம் போதுமான அளவில் இல்லை என நிர்வாகம் கருதுவதாக கூறப்படுகிறது. எனவே, அனுபவம் வாய்ந்த சாம்சனை அணிக்குள் கொண்டுவந்து அவரிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்க சன்ரைசர்ஸ் விரும்புவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே இஷான் கிஷனை விட்டுக்கொடுத்து சாம்சனை பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இஷான் கிஷன் வந்தால் சிஎஸ்கே பேட்டிங் வரிசை பலமாகுமா?

மறுபுறம், சென்னை அணிக்கும் இஷான் கிஷன் வருகை சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, டாப் ஆர்டரில் இடது கை பேட்டர் ஒருவரின் தேவை சிஎஸ்கே அணிக்கு இருப்பதாக கூறப்படுகிறது. அந்த இடத்தை இஷான் கிஷனால் சிறப்பாக நிரப்ப முடியும்.

இஷான் கிஷனை அணியில் சேர்த்தால், தொடக்க வீரர்களாக ஆயுஷ் மாத்ரே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கலாம். மூன்றாவது வீரராக இஷான் கிஷனை பயன்படுத்த சிஎஸ்கே திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்திய போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், தொடக்கத்தில் நிதானமாக விளையாடி பின்னர் அதிரடிக்கு மாறும் திறனையும் கொண்டுள்ளார். எனவே, இந்தப் பரிமாற்றம் கைகூடினால் சிஎஸ்கேவின் டாப் ஆர்டர் பேட்டிங் வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்த டிரேடிங் திட்டத்துக்கு ஜாகீர் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உயர் நிர்வாகிகள் இறுதி முடிவை எடுக்க வேண்டியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் விடுவிப்பு?

இதற்கிடையே, ஐபிஎல் 2027 மெகா ஏலத்துக்கு தயாராகும் வகையில் கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் ஆகிய இருவரையும் விடுவிக்க சிஎஸ்கே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரூ.28.40 கோடி தொகையை சேமித்து, ஏலத்தில் அதிக தொகையுடன் களமிறங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை அதிக தொகைக்கு ஏலம் எடுக்கவும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரனாவை ஏலத்தில் மீண்டும் வாங்கவும் சிஎஸ்கே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், சஞ்சு சாம்சன் - இஷான் கிஷன் இடையிலான டிரேடிங் ஒப்பந்தம் மற்றும் வீரர்கள் விடுவிப்பு தொடர்பான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. சிஎஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் நிர்வாகங்களின் இறுதி முடிவைப் பொறுத்தே இந்த மாற்றங்கள் நடைபெறுமா என்பது தெரியவரும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES