SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

முதல் போட்டியிலேயே ரெட் கார்டு.. கடைசியில் உலக கோப்பை! மெஸ்ஸியின் 21 ஆண்டுகால பயணம்

39 வயதில் சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த மெஸ்ஸி, அர்ஜென்டினாவுக்காக 21 ஆண்டுகளில் 207 போட்டிகள், 125 கோல்கள் மற்றும் உலகக் கோப்பை, 2 கோபா அமெரிக்கா பட்டங்களுடன் தனது மகத்தான பயணத்தை முடித்துள்ளார்.

Written By R Balaji
Published: Sep 01, 2026, 20:40 IST | Updated: Sep 01, 2026, 20:43 IST
Join

உலக கால்பந்து ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்று நினைத்த ஒரு அறிவிப்பு தற்போது வந்துவிட்டது. லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 39 வயதில் இந்த முடிவை எடுத்துள்ள மெஸ்ஸி, அர்ஜென்டினா அணிக்காக 21 ஆண்டுகள் விளையாடிய பிறகு சர்வதேச கால்பந்தில் இருந்து விடைபெறுகிறார்.

மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை எந்தவிதமான செய்தியாளர் சந்திப்பிலும் அறிவிக்கவில்லை. மாறாக, தனது ஓய்வு முடிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இந்த தகவலை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். “இந்த முடிவு என்னை ஆழமாக காயப்படுத்தியது. ஆனால் இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது” என்பதே அவரது பதிவின் முக்கியமான வரியாக இருந்தது.

உலகக் கோப்பை தோல்விக்கு பிறகு எடுத்த முடிவு

2026 உலகக் கோப்பைதான் மெஸ்ஸியின் சர்வதேச கால்பந்து பயணத்தின் கடைசி அத்தியாயமாக அமைந்துள்ளது. தனது ஆறாவது உலகக் கோப்பையில் விளையாடிய மெஸ்ஸி, அர்ஜென்டினாவை மீண்டும் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார். ஆனால் இறுதிப் போட்டியில் ஸ்பெயினிடம் 1-0 என்ற கணக்கில் தோல்வியடைந்ததால் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.

அந்த தோல்வி மெஸ்ஸிக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. போட்டிக்குப் பிறகு தனது மனதில் இருந்த வலியை வெளிப்படையாக பேசியிருந்த அவர், இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு நீண்ட நாட்கள் யோசித்ததாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி ஆகஸ்ட் 8ஆம் தேதி உயிரிழந்தார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினையால் சிகிச்சை பெற்று வந்த அவரது தந்தையின் நிலை, உலகக் கோப்பை காலத்திலும் மெஸ்ஸியை மனதளவில் பாதித்திருந்தது. தனது ஓய்வு முடிவு குறித்து வெளியிட்டுள்ள பதிவிலும் தந்தையைப் பற்றி மெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.

முதல் போட்டியிலேயே ரெட் கார்டு

அர்ஜென்டினா அணிக்காக மெஸ்ஸியின் பயணம் இவ்வளவு பெரிய உயரத்தை அடையும் என்று அவரது முதல் போட்டியை பார்த்தவர்கள் கூட நினைத்திருக்க முடியாது. 2005ஆம் ஆண்டு ஹங்கேரிக்கு எதிரான நட்புப் போட்டியில் 18 வயதில் சர்வதேச கால்பந்தில் அறிமுகமானார்.

ஆனால் அந்த போட்டியில் எதிரணி வீரரை முழங்கையால் தாக்கியதாக கூறி ரெட் கார்டு பெற்று வெளியேறினார். சர்ச்சையுடன் தொடங்கிய அந்த பயணம்தான் பின்னர் அர்ஜென்டினா கால்பந்து வரலாற்றின் மிகப்பெரிய கதையாக மாறியது.

21 ஆண்டுகளில் அர்ஜென்டினாவுக்காக 207 போட்டிகளில் விளையாடியுள்ள மெஸ்ஸி 125 கோல்களை அடித்துள்ளார். இதன்மூலம் அந்த அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் மற்றும் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார்.

29 வயதிலேயே ஓய்வு பெற முடிவு

மெஸ்ஸியின் சர்வதேச வாழ்க்கை ஆரம்பத்தில் அவ்வளவு இனிமையாக இருக்கவில்லை. 2014 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் தோல்வி, 2015 மற்றும் 2016 கோபா அமெரிக்கா இறுதிப் போட்டிகளில் தோல்வி என தொடர்ந்து பெரிய ஏமாற்றங்களை சந்தித்தார்.

2016ல் சிலியிடம் கோபா அமெரிக்கா இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு, சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவித்தார். அப்போது அவருக்கு 29 வயதுதான். ஆனால் அர்ஜென்டினா ரசிகர்கள் அவரை மீண்டும் அணிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இறுதியில் தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் தேசிய அணிக்காக விளையாடத் தொடங்கினார். அந்த முடிவுதான் மெஸ்ஸியின் சர்வதேச வாழ்க்கையை முழுமையாக மாற்றியது.

2021ல் பிரேசிலில் நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரில் அர்ஜென்டினா சாம்பியன் ஆனது. இதன் மூலம் அந்த அணியின் 28 ஆண்டுகால கோப்பை வறட்சிக்கு மெஸ்ஸி முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்பிறகு 2022ல் கத்தாரில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தனது மிகப்பெரிய கனவை நிறைவேற்றினார். இறுதிப் போட்டியில் பிரான்ஸுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்து, பெனால்டி ஷூட் அவுட்டிலும் வெற்றி பெற்று அர்ஜென்டினாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.

2024ல் மீண்டும் கோபா அமெரிக்கா கோப்பையை வென்றதன் மூலம், அர்ஜென்டினா அணியுடன் தனது முக்கியமான சர்வதேச கோப்பைகள் அனைத்தையும் மெஸ்ஸி வென்றுவிட்டார்.

இனி என்ன செய்யப் போகிறார்?

மெஸ்ஸி சர்வதேச கால்பந்தில் இருந்து மட்டுமே ஓய்வு பெற்றுள்ளார். கிளப் கால்பந்தில் அவரது பயணம் இன்னும் தொடர்கிறது. அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்காக தொடர்ந்து விளையாட உள்ளார்.

அர்ஜென்டினா அணிக்காக ஒரு காலத்தில் கோப்பை வெல்ல முடியாத வீரர் என்ற விமர்சனத்தை எதிர்கொண்ட மெஸ்ஸி, இறுதியில் உலகக் கோப்பை, இரண்டு கோபா அமெரிக்கா கோப்பைகள் என மிகப்பெரிய சாதனைகளுடன் விடைபெறுகிறார். ஒரு காலத்தில் மரடோனாவுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்ட அதே மெஸ்ஸிதான், இன்று அர்ஜென்டினா ரசிகர்களின் மனதில் மறக்க முடியாத நாயகனாக மாறியுள்ளார்.

21 ஆண்டுகள்.. 207 போட்டிகள்.. 125 கோல்கள்.. ஒரு உலகக் கோப்பை. இரண்டு கோபா அமெரிக்கா பட்டங்கள். இவை அனைத்தையும் தாண்டி, பல தோல்விகளுக்கு பிறகும் தொடர்ந்து முயற்சி செய்து இறுதியில் தனது நாட்டுக்காக எல்லாவற்றையும் வென்ற வீரராக மெஸ்ஸி சர்வதேச கால்பந்தில் இருந்து வெளியேறுகிறார்.

அவர் களத்தை விட்டு வெளியேறலாம். ஆனால் அர்ஜென்டினா ரசிகர்களின் மனதில் இருந்து மெஸ்ஸி அவ்வளவு எளிதாக வெளியேறிவிட முடியாது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES