இந்திய டெஸ்ட் அணியில் சமீப காலமாக எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர முழுமையாக இழந்ததுடன், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.
இதையடுத்து டெஸ்ட் அணியில் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளுக்காக முழுநேர பேட்டர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய டெஸ்ட் அணியில் இரண்டு முழுநேர பேட்டர்களுக்கு வாய்ப்பு வழங்க தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு இடம் தேவ்தத் படிக்கலுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு இடத்துக்கு சர்பராஸ் கான் அல்லது புதிய வீரரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில், 23 வயதான ஸ்மரன் ரவிச்சந்திரன் கம்பீரின் கவனத்தை ஈர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாடும் திறன் கொண்ட இவர், எதிர்காலத்தில் இந்திய அணியில் முக்கியமான டெஸ்ட் பேட்டராக பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
தற்போது இரானி கோப்பையில் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்காக ஸ்மரன் ரவிச்சந்திரன் விளையாடி வருகிறார். முதல் இன்னிங்ஸில் 6வது இடத்தில் களமிறங்கிய அவர், 83 பந்துகளில் 8 பவுண்டரி ஒரு சிக்ஸர் என 68 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் தனது அதிரடியை மேலும் வெளிப்படுத்திய ஸ்மரன், 153 பந்துகளில் 16 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் விளாசினார்.
இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் சிறப்பாக செயல்பட்டது ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியின் வலுவான ஸ்கோருக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளது.
ஸ்மரன் ரவிச்சந்திரனின் முதல்தர கிரிக்கெட் புள்ளிவிவரங்களும் கவனிக்கத்தக்க வகையில் உள்ளன. இதுவரை 19 முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 29 இன்னிங்ஸ்களில் 70.30 என்ற சராசரியில் 1,617 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 227 ரன்கள் எடுத்துள்ளார். நீண்ட இன்னிங்ஸ்களை விளையாடும் திறன் கொண்ட பேட்டர் என்பதால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இவர் பொருத்தமானவராக பார்க்கப்படுகிறார்.
டெஸ்ட் போன்ற முதல்தர போட்டிகளை தாண்டியும் ஸ்மரன் தனது திறமையை நிரூபித்துள்ளார். லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 18 போட்டிகளில் 14 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 50.33 சராசரியில் 604 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 101 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் லோயர் மிடில் ஆர்டரில் பேட்டிங் திறன் கொண்ட வீரர்களை தேர்வு செய்வது முக்கியமானதாக உள்ளது. ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் விக்கெட் கீப்பர் பேட்டர்களாக இருப்பதால், அவர்களின் பேட்டிங் வரிசையையும் அணியின் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது.
இந்த நிலையில், ஸ்மரன் ரவிச்சந்திரன் அணிக்குள் வந்தால் 5வது இடத்தில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம் என கருதப்படுகிறது. தேவைக்கு ஏற்ப நிதானமாக இன்னிங்ஸை கட்டமைப்பதுடன், சூழல் மாறும்போது அதிரடியாகவும் விளையாடும் திறன் அவருக்கு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
முதல்தர கிரிக்கெட்டில் ஏற்கனவே சிறப்பான சாதனைகளை படைத்துள்ள ஸ்மரன் ரவிச்சந்திரனுக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைத்து, அதிலும் சிறப்பாக செயல்பட்டால் அடுத்தக்கட்ட வாய்ப்புகளும் உருவாகலாம். குறிப்பாக 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு ஒருநாள் அணியிலும் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி, டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பிரத்யேக பேட்டராக ஸ்மரனை உருவாக்கும் திட்டம் கம்பீரின் பார்வையில் இருப்பதாக கருதப்படுகிறது.