SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Test Twenty: புதிதாக அறிமுகமாகும் கிரிக்கெட் ஃபார்மெட்.. டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? Explained

டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட்டை தாண்டி டெஸ்ட் ட்வென்டி என்ற புது வடிவம் அறிமுகமாக உள்ளது. இத்தொடர் நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன? போட்டியின் அமைப்பு எப்படி? உள்ளிட்ட விவரங்களை இங்கு பார்க்கலாம்.

Written By R Balaji
Published: Oct 17, 2026, 08:33 PM IST | Updated: Oct 17, 2026, 08:45 PM IST
Join

கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள், டி20-ஐ தாண்டி நான்காவதாக ஒரு வடிவம் அறிமுகமாக உள்ளது. அதாவது ’டெஸ்ட் ட்வென்டி’ என்ற புதிய போட்டி அறிமுகமாகிறது. இதன் முதல் தொடர் நவம்பர் 14 முதல் 29 ஆம் தேதி வரை இலங்கையில் கொழும்புவில் நடைபெற உள்ளது.

டெஸ்ட் ட்வென்டி என்றால் என்ன?

இந்தப் போட்டியில் சிறுவர்களுக்கு ஒரு அணியும், சிறுமிகளுக்கு ஒரு அணியும் எனத் தனித்தனியாக விளையாடுவார்கள். இரு அணிகளிலும் உள்ள வீரர்கள் தங்கள் பிரிவைச் சேர்ந்த எதிரணியினருடன் மோதுவார்கள். இரண்டு போட்டிகளிலும் எடுக்கப்படும் ரன்கள் சேர்க்கப்பட்டு, அதிக ரன்கள் எடுக்கும் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

உதாரணமாக, சிறுவர்கள் பிரிவில் ஒரு அணி குறைவான ரன்கள் எடுத்தாலும், சிறுமிகள் பிரிவில் அதிக ரன்கள் எடுத்து அந்தக் குறையை ஈடுசெய்ய முடியும். அதேபோல், இரு பிரிவினரின் ஆட்டமும் சேர்த்தே இறுதி முடிவு கணக்கிடப்படும். இதனால் சிறுவர்கள், சிறுமிகள் இருவரின் பங்களிப்பும் அணியின் வெற்றிக்கு முக்கியமாக இருக்கும்.

இந்த முறைக்கு ‘பாரிட்டி ரூல்’ (Parity Rule) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு பிரிவில் எடுக்கப்படும் ரன்களும் மற்றொரு பிரிவின் ஆட்டத்துடன் இணைந்த ஒட்டுமொத்த முடிவில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

ஒரே நாளில் 80 ஓவர்கள்..

டெஸ்ட் ட்வென்டி போட்டியில் ஒரே நாளில் மொத்தம் 80 ஓவர்கள் வீசப்படும். முதல் 40 ஓவர்கள் பகல் நேரத்தில் சிவப்பு பந்தில் நடைபெறும். அப்போது வீரர்கள் வழக்கமான வெள்ளை நிற கிரிக்கெட் உடைகளை அணிவார்கள்.

அடுத்த 40 ஓவர்கள் இரவு நேரத்தில் வெள்ளை பந்தில் நடைபெறும். அப்போது, வீரர்கள் வண்ண உடைகளில் விளையாடுவார்கள். முதல் பகுதியில் எடுத்த ரன்களுடன் அடுத்த பகுதியின் ரன்களும் தொடர்ந்து சேர்க்கப்படும். இடையில் ஸ்கோர் மீண்டும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்காது.

டாஸ் வெல்லும் அணி, முதலில் பேட்டிங் செய்வது யார் என்பதை தீர்மானிப்பதுடன், சிறுவர்கள் அல்லது சிறுமிகள் பிரிவில் எந்த போட்டி முதலில் நடைபெற வேண்டும் என்பதையும் தேர்வு செய்யலாம்.

160 இளம் வீரர்கள் பங்கேற்பு

இந்தத் தொடரில் 13 முதல் 21 வயதுக்குட்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். ஐந்து கண்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளம் கிரிக்கெட் வீரர்கள் இதில் விளையாட ஆர்வம் தெரிவித்துள்ளனர். கடந்த 300 நாட்களாக நேரடி மற்றும் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 160 வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நான்கு கண்ட அணிகளாக பிரிக்கப்படும் ஒவ்வொரு அணியிலும் 20 சிறுவர்கள், 20 சிறுமிகள் என 40 பேர் இடம்பெறுவார்கள். இதன்படி, 80 சிறுவர்களும் 80 சிறுமிகளும் இந்தத் தொடரில் விளையாடுவார்கள்.

இந்தியாவின் முக்கிய கிரிக்கெட் பயிற்சியாளர்களில் ஒருவரான ராஜ்குமார் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு வீரர்களை தேர்வு செய்துள்ளது. இறுதிப் பட்டியல் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது.

எப்போது தொடங்குகிறது? எதில் பார்க்கலாம்?

டெஸ்ட் ட்வென்டியின் தொடக்க விழா நவம்பர் 14ஆம் தேதி கொழும்பில் உள்ள சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 29ஆம் தேதி நடைபெறும். இலங்கையின் வானிலை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டால், நவம்பர் 30ஆம் தேதி மாற்று நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடரின் அனைத்து போட்டிகளும் சோனி ஸ்போர்ட்ஸ் (Sony Sports) நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏபி டிவில்லியர்ஸ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் ஆதரவு

இந்த புதிய முயற்சிக்கு முன்னாள் தென்னாப்பிரிக்க கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ், முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன், முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சர் கிளைவ் லாயிட் ஆகியோர் அடங்கிய ஆலோசனை குழு ஆதரவு அளிக்கிறது. போட்டியின் செயல்பாடுகளை மைக் ஃபோர்ட்ஹாம் கவனித்து வருகிறார்.

டெஸ்ட் ட்வென்டியின் நிறுவனர் கவுரவ் பஹிர்வானி, இளம் வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதற்கான புதிய தளத்தை உருவாக்குவதே இந்தத் தொடரின் நோக்கம் என தெரிவித்துள்ளார். ஓராண்டுக்கு முன்பு தொடங்கிய இந்த யோசனை தற்போது போட்டி தொடராக உருவெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சிறுவர்கள், சிறுமிகள் இருவருக்கும் சமமான வாய்ப்பு அளிப்பது விளையாட்டில் மட்டுமல்லாமல், தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் பின்பற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களில் சிறுமிகளின் ஆட்டங்கள் முக்கிய நேரத்தில் ஒளிபரப்பாகும், மற்ற நாட்களில் சிறுவர்களின் ஆட்டங்கள் இடம்பெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அமைப்பும் சிங்களீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பும் இந்த தொடரை நடத்த ஆதரவு அளித்துள்ளன. கிரிக்கெட்டில் சிறுவர்களும் சிறுமிகளும் இணைந்து வெற்றியையும் தோல்வியையும் பகிர்ந்துகொள்ளும் புதிய முயற்சியாக டெஸ்ட் ட்வென்டி பார்க்கப்படுகிறது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES