Explained: சேவாக், டிராவிட் மகன்களுக்கு சான்ஸ்... வைபவ் சூர்யவன்ஷி ஒதுக்கப்பட்டது ஏன்?
ஆஸ்திரேலியா U19 அணிக்கு எதிரான தொடர்களில் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியின் தேர்வுக்குழு தேர்வு செய்யாதது ஏன்? இதன் பின்னணியில் உள்ள முக்கிய விதி என்ன? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்தியா U19 - ஆஸ்திரேலியா U19 அணிகள் விளையாட இருக்கின்றன.
இந்தச் சூழலில், பிசிசிஐயின் ஜூனியர் தேர்வுக்குழு இந்தியா U19 ஸ்குவாடை அறிவித்தது. இதில் இந்திய மூத்த வீரர்கள் விரேந்திர சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோரின் மகன்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 16 வயதான வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்படவில்லை.
அந்த வகையில், வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்படாதது ஏன்...? என்பதை இங்கு விரிவாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு முன் இந்தியா U19 - ஆஸ்திரேலியா U19 தொடர் குறித்தும் இங்கு காணலாம்.
இந்தியா U19 - ஆஸ்திரேலியா U19 தொடர் அட்டவணை
| போட்டி | தேதி | நகரம் |
| முதல் ஒருநாள் போட்டி | செப்டம்பர் 18 | ராஜ்கோட் (குஜராத்) |
| 2வது ஒருநாள் போட்டி | செப்டம்பர் 21 | ராஜ்கோட் (குஜராத்) |
| 3வது ஒருநாள் போட்டி | செப்டம்பர் 23 | ராஜ்கோட் (குஜராத்) |
| முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி | செப்டம்பர் 27 - செப்டம்பர் 30 | ராஜ்கோட் (குஜராத்) |
| 2வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி | அக்டோபர் 5 - அக்டோபர் 8 | அகமதாபாத் (குஜராத்) |
இந்திய U19 அணி ஸ்குவாட்
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய U19 அணி
லக்ஷ்ய ராய்சந்தனி (கேப்டன்), யஷ்பர்தன் சௌகான் (துணை கேப்டன்), ரஜத் பாகேல் (விக்கெட் கீப்பர்), ஆர்யவிர் சேவாக், V.K. வினீத், குஷாக்ரா ஓஜா, அர்ஜுன் ராஜ்புத், மணால் சவுகான், அன்வே டிராவிட் (விக்கெட் கீப்பர்), வி. யஷ்வீர், ரோஹித் யாதவ், ஷவின் வினோத், மோஹித் உல்வா, சிகுருபதி வெங்கடா, காவ்யா படேல்.
அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய U19 அணி
யஷ்பர்தன் சௌகான் (கேப்டன்), லக்ஷ்ய ராய்சந்தனி (துணை கேப்டன்), சாகர் விர்க், குஷாக்ரா ஓஜா, மணல் சௌகான், குஷ் படேல், மானவ் கிருஷ்ணா (விக்கெட் கீப்பர்), அபிப்ராய் சிங் பிஸ்வாஸ் (விக்கெட் கீப்பர்), ரோஹித் யாதவ், பிரயான் ஓம், அயன் அக்ரம், பிரணவ் ராகவேந்திரா, பிரியன்ஷு சிங், மோஹித் உல்வா, ஆர்யன் யாதவ்.
இரண்டு தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு
இதில் சேவாக் மகன் ஆர்யவிர் மற்றும் டிராவிட் மகன் அன்வே ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான ஸ்குவாடில் மட்டும் இடம்பிடித்துள்ளனர். மேலும், ஒருநாள் அணியில் இடம்பிடித்துள்ள வி.கே. வினீத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை U19 அணிக்கு எதிராக சதம் அடித்த கவனம் ஈர்த்தவர். அதேபோல், அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் ஸ்குவாடில் இடம்பெற்ற பிரணவ் ராகவேந்திராவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
வைபவ் சூர்யவன்ஷி ஏன் இல்லை...?
இந்நிலையில், இரண்டு ஸ்குவாடிலும் வைபவ் சூர்யவன்ஷி இல்லாதது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் பிசிசிஐயை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வாரிசுகளுக்கு முக்கியத்துவமா...?
சேவாக், டிராவிட் மகன்களுக்கு மட்டும் வாய்ப்பளித்துவிட்டது சூர்யவன்ஷியை ஒதுக்குவதாக சிலர் வாதிடுகின்றனர். ஆனால், இதில் உண்மை இல்லை. பிசிசிஐயின் முக்கிய விதி ஒன்றின் காரணமாகவே வைபவ் சூர்யவன்ஷி தேர்வு செய்யப்படவில்லை. அந்த விதியை விரிவாக காணலாம்.
பிசிசிஐ விதி சொல்வது என்ன?
- 2016ஆம் ஆண்டில் பிசிசிஐ புதிய விதி ஒன்றை கொண்டுவந்தது. அதாவது, ஒரு இளம் வீரர், 19 வயதுக்கு குறைவாக இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட உலகக் கோப்பை தொடர்களில் விளையாட முடியாது என அந்த விதி கூறுகிறது.
- இதனாலேயே 2016ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், 19 வயதுக்கு குறைவாக இருந்தும் 2018ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடவில்லை.
- வாஷிங்டன் சுந்தரை போல் பிசிசிஐயின் விதியின் கீழ் சர்ஃபராஸ் கான், சந்தீப் சர்மா, விஜய் சோல் ஆகியோரும் ஒன்றுக்கும் மேற்பட்ட U19 உலகக் கோப்பையில் விளையாடவில்லை.
- அந்த வகையில், 2026 U19 உலகக் கோப்பை தொடரில் சூர்யவன்ஷி விளையாடிவிட்டதால் அவரை ஒருநாள் அணிக்கு ஜூனியர் தேர்வுக்குழு தற்போது தேர்வு செய்யவில்லை. அவருக்கு பதில் மற்றொரு வீரருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.
பிசிசிஐயின் முடிவு
அதேநேரத்தில், வைபவ் சூர்யவன்ஷி சீனியர் லெவலிலேயே தனது திறமையை நிரூபித்துவிட்டார் என்பதால், அவரை மீண்டும் ஜூனியர் அணியில் தேர்வு செய்யும் திட்டமும் பிசிசிஐயிடம் இல்லை. இதனாலேயே அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரிலும் அவர் சேர்க்கப்படவில்லை.
சர்வதேச கிரிக்கெட்டில் வைபவ் சூர்யவன்ஷி
- வைபவ் சூர்யவன்ஷி அயர்லாந்து, இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய டி20ஐ அணியில் சேர்க்கப்பட்டார். அயர்லாந்து தொடரில் விளையாடாத அவர் இங்கிலாந்து தொடரில் விளையாடினார்.
- இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி20ஐ போட்டிகளில் முறையே 14, 13, 15 ரன்களை அடித்தார், வைபவ் சூர்யவன்ஷி. அடுத்து ஜூலை மாதம் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் மூன்று டி20ஐ போட்டிகளில் விளையாடி முறையே 50, 20, 81 ரன்களை குவித்து தொடர் நாயகன் விருதையும் வென்றார்.
- அடுத்து வரும் செப்டம்பர் 13ஆம் தேதி தொடங்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் சூர்யவன்ஷி விளையாட இருக்கிறார்.
- அதேபோல், செப்டம்பர் இறுதியில் ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் இந்திய அணி பங்கேற்கிறது. இந்திய அணி நேரடியாக காலிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில், அதன் ஸ்குவாடில் சூர்யவன்ஷி இடம்பெற்றுள்ளார்.
- வைபவ் சூர்யவன்ஷி தற்போது துலீப் டிராபி தொடரில் கிழக்கு மண்டல அணிக்காக விளையாடி வருகிறார். காலிறுதியில் வடகிழக்கு அணிக்கு எதிராக பந்துவீசி 2 விக்கெட்டை எடுத்தார்.
- செப்டம்பர் 30ஆம் தேதி அரையிறுதி சுற்றில் கிழக்கு மண்டலம் அணி, மத்திய மண்டலம் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அதில் சூர்யவன்ஷி விளையாடுவார்.