Tamil Nadu Child Missing Case: தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக கொலை, வன்முறை, கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பெண்கள், சிறுமிகள் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தைகள், பள்ளி மாணவர்கள் மற்றும் வளரும் சிறுமிகள் சம்பந்தப்பட்ட காணாமல் போகும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலைக்குரிய விஷயமாகியுள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போகியுள்ளார். சிறுமியை கடந்த 15 நாட்களாக போலீசார் தேடி வருகின்றனர். முன்னதாக சிறுமியை தமிழக போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாறி உள்ளது. இந்த நிலையில் தான், தமிழகத்தில் சிறுமிகள் காணாமல் போவது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது.
2026 செப்டம்பர் 24ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை குறைந்தது 10 குழந்தைகள் காணாமல் போனதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி,
ராணிப்பேட்டை - செப்டம்பர் 25ஆம் தேதி ராணிப்பேட்டை மாவட்டத்தில் சாலையோரத்தில் தனது பெற்றோருடன் ஒரு வயது சிறுமி தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது, சிறுமி காணாமல் போனதாக பெற்றோரான சேகர் - பிரேமா புகார் அளித்தனர். இதனை காவல்துறையினர் நான்கு சிறப்புப் படைகளை அமைத்து காணாமல் போன சிறுமி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்திய தகவலின்படி, சிறுமி இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
செஞ்சி - விழுப்புரம் மாவட்டம், செஞ்சிக்கு அருகிலுள்ள நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி அக்டோபர் 12ஆம் தேதி காலை காணாமல் போனார். சிறுமி ஹேமலதா, தனது குடும்பத்தினருடன் பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களுக்குப் பிறகு காணாமல் போனார். 10 நாட்களுக்கு மேலாகியும் சிறுமி ஹேமலதாவை போலீசார் கண்டுபிடிக்கவில்லை. இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சய், அக்டோபர் 23 அன்று காணாமல் போனார். அவனது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சந்தேகிக்கப்படும் பாதையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அக்டோபர் 24 அன்று வெளியான அறிக்கைகளின்படி, சஞ்சய் இன்னும் காணாமல் போன நிலையிலேயே உள்ளார் என கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் - ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஸ்ரீபெரும்புதூர் அருகே அக்டோபர் 16ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், காணாமல் போனார். காவல்துறையினர் ஐந்து சிறப்புப் படைகளை அமைத்து, சிசிடிவி காட்சிகள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிறுமியை தேடினர். சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அக்டோபர் 20ஆம் தேதி சிறுமியை போலீசார் மீட்டனர்.
தூத்துக்குடி - அக்டோபர் 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதிகளில் 14,15 வயதில் உள்ள சிறுமிகளை கடத்தினர். சிறுமிகளை கடத்தி, தாய் மேரி விஜிலாவை கொலை செய்தனர். சிறுமிகளை கடத்திய சில மணி நேரங்களில் போலீசார் இரண்டு சிறுமிகளை மீட்டனர். சிறுமிகளில் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தனது இருப்பிடத்தைப் பகிர்ந்ததை அடுத்து, காவல்துறை அவர்களைக் கண்டுபிடித்தனர்.
சென்னை - சென்னை குரோம்பேட்டை, லட்சுமிபுரத்தைச் சேர்ந்த கே. தேவதர்ஷன் (12), டி. யுவனேஸ் (10), பூஜா (13) மற்றும் குஷி (13 ) ஆகிய நான்கு பள்ளிக்குழந்தைகள் அக்டோபர் 3 அன்று காணாமல் போயிருந்தனர். அவர்களது குடும்பத்தினர் மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இரவு முழுவதும் நடத்திய தேடுதலுக்குப் பிறகு, அக்டோபர் 4 ஆம் தேதி காலையில் திருநீர்மலை பெரிய ஏரியில் அவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நீரில் மூழ்கியதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.
முதல்வர் விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பே முக்கியம் என மேடைக்கு மேடை கூறி வருகிறார். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, குழந்தைகள் தொடர்ந்து மாயமாகி வருகின்றனர். இதற்கு தவெக என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையில், விழுப்புரம் சிறுமி மாயமாகி 15 நாட்கள் ஆகுகிறது. ஆனால், இதுவரை தமிழக காவல்துறை சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது காவல்துறையின் செயல்பாடு இருக்கிறது என எடுத்து காட்டுகிறது. காவல்துறை அலட்சியமாக செயல்படுகிறதா எனவும் எதிர்க்கட்சி கேள்வி எழுப்பி வருகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பே முக்கியம் என தெருக்கு தெரு ஓட்டு கேட்ட முதல்வர் விஜய், இப்போது செஞ்சி சிறுமி காணாமல் போன விஷயத்தில் ஏன் மௌனம் காத்து வருகிறார் எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.
சிறுமிகள் காணாமல் போனது குறித்து ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி கூறுகையில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து ஒரு குழந்தை திடீரென காணாமல் போனால், அந்தச் சம்பவம் தனித்து நடப்பதாக அர்த்தமல்ல. அப்பகுதியில் நிலவும் சில சூழ்நிலைகள் அல்லது அடிப்படைப் பிரச்சினைகள் அந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கலாம்.
காவல்துறை அந்தச் சூழ்நிலைகளை ஆராய வேண்டும். அவர்கள் பொதுமக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து தகவல்களைச் சேகரித்தால், எச்சரிக்கை அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய முடியும். இன்று பல காவலர்கள் பட்டதாரிகளாகவும் பொறியியல் பட்டதாரிகளாகவும் உள்ளனர், ஆனாலும் அவர்களின் திறமைகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை.
அவர்களுக்கு ரோந்துப் பணிகள் ஒதுக்கப்பட்டு, வழக்கமான அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு காவலருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட வேண்டும். அவர்கள் அந்தப் பகுதியில் உள்ள மக்களுடன் கலந்துரையாடி, தங்கள் பகுதிகளுக்குள் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
மேலும், கிரானைட் தொழிலதிபர் ஜெம் வீரமணி' சம்பந்தப்பட்ட போக்சோ வழக்குகளை, அதிகாரிகளின் தாமதமான தலையீடு உதாரணம் என கூறியுள்ளார். உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், இவ்விவகாரங்கள் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுப்பதைத் தடுத்திருக்க முடியும் என்றும் கூறினார். மேலும், "என் அனுமதியின்றி எதுவும் செய்யாதே போன்றே அறிவுறுத்தல்களால் காவலர்கள் கட்டுப்படுத்தப்படுகிறார்கள் எனவும் இதனால் அவர்கள் திறம்பட எதுவும் செய்யமுடியவில்லை எனவும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி கூறினார்.