Explained: பரந்தூருக்கு நோ! 2வது ஏர்போர்ட் கிடைக்க 10 வருஷம் ஆகும்.. தமிழ்நாடு வளர்ச்சிக்கு அடி!
Parandhur Airport Explained: பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதோடு, மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதனால் ஏற்படும் பாதகம் குறித்து பார்ப்போம்.
Parandhur Airport Explained: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு பரந்தூர் மக்கள் பெரும் வரவேற்ப்பை அளித்துள்ளனர். இருந்தாலும், தமிழகத்திற்கு இரண்டாவது விமான நிலையம் என்பது மிகவும் அவசியமாக கருதப்படும் நிலையில், முதல்வர் விஜய் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டது பேசும் பொருளாக மாறியுள்ளது. இதனால், சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் வருவது பல வருடங்கள் ஆகும் என்பது திட்டவட்டமாக தெரிகிறது.
பரந்தூர் விமான நிலைய திட்டம்
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது 25 ஆண்டு காலமாக பேசப்பட்டு வருகிறது. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் என்பது அதிமுக, திமுக என இருபெரும் கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
இதற்கான நடவடிக்கையை 2021ஆம் ஆண்டு திமுக தொடங்கியது. அதாவது, பரந்தூரில் இரண்டாவது விமான நிலைய திட்டத்தை திமுக தொடங்கியது. அதாவது, 4,9790 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் விமான நிலைய அமைக்கும் பணிகள் நடந்து வந்தன. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.
பரந்தூர் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. விமான நிலைத்திற்காக 5,747.18 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த இருந்தது. இதற்கென 1,822.45 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கான அரசாணை 2023ஆம் ஆண்டு வெளியானது. பரந்தூர் விமான நிலையம் அமைக்க பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், சிறுவள்ளூர் தண்டலம், தோடூர், வளத்தூர், குணகர பாக்கம், மகாதேவி மங்கலம், பொடவூர் உள்ளிட்ட பல கிராமங்களில் 3,774 ஏக்கர் தனியார் பட்டா நிலம் உட்பட 5,746 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.
மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில், இத்திட்டத்திற்காக இதுவரை 12 கிராமங்களில் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, இத்திட்டத்திற்கான இட அனுமதி மற்றும் கொள்கை ரீதியான ஒப்புதல் பெறப்பட்டது. கிட்டதட்ட 50 சதவீத பணிகள் முடிவடைந்து இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தான், தவெக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட்டுள்ளது.
கடந்து வந்த பாதை
| ஆகட் 2022 | சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்திற்கான இடமாக, பன்னூருக்குப் பதிலாக பரந்தூரை மாநில அரசு இறுதி செய்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. |
| ஆகஸ்ட் 2022 | நிலம் கையகப்படுத்தும் பணிகளை தமிழக அரசு தொடங்கியது. |
| செப்டம்பர் 2024 | தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் (TIDCO), விமான நிலையத்திற்கான பல கட்ட செயல்திட்டம் உள்ளிட்ட ஒரு விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது |
| செப்டம்பர் 2024 | முதல் கட்ட மேம்பாட்டுப் பணிகளுக்கு ரூ.10,500 கோடி மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அது கணித்துள்ளது.
|
| ஜனவரி 2025 | மத்திய பசுமைவெளி விமான நிலையக் கொள்கையின் (GFA) கீழ் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடங்குகிறது
|
| மார்ச் 2025 | இத்திட்டம், ஒப்புதலுக்காக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு அதிகாரப்பூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டது |
| ஏப்ரல் 2025 | 5,746 ஏக்கர் பரப்பளவுள்ள அந்த இடத்திற்கான நில ஒருங்கிணைப்பு, பெ ஏலப் பணிகளைத் தொடங்குவதற்கு, TIDCO நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் (MoCA) கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது.
|
| மார்ச் 2026 | தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தை ஒரு “சிறப்புத் திட்டமாக” அறிவிக்கிறது.
|
| ஆகஸ்ட் 2026 | பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்டது.
|
தாமதமாகும் 2வது விமான நிலையம்
ஒருவேளை திட்டமிட்டபடி பரந்தூர் விமான நிலையத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், வரும் 2028-2029-க்குள் சென்னைக்கு இரண்டாவது புதிய சர்வதேச விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்திருக்கும். ஆனால் தற்போது இத்திட்டம் முழுமையாகக் கைவிடப்பட்டுள்ள நிலையில், மாற்று இடத்தை புதிதாகத் தேர்வு செய்து, ஆரம்பத்திலிருந்தே (from scratch) நில ஆய்வு, நிலக் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் மத்திய அரசின் அனுமதிகள் என ஒவ்வொரு கட்டப் பணிகளையும் தொடங்க வேண்டியிருக்கும்.
இந்த நிர்வாக நடைமுறைகள் முடிந்து புதிய விமான நிலையம் பயன்பாட்டிற்கு வர இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ என்ற மிகப்பெரிய கேள்விக்குறி தற்போது எழுந்துள்ளது. குறைந்தது புதிய விமான நிலையம் அமைய 7 முதல் 10 ஆண்டுகள் ஆகலாம்.
2வது விமான நிலையம் எங்கு?
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. ஏனென்றால், அண்டை மாநிலங்களில் பெங்களூரு, ஹைதரபாத் விமான நிலையங்கள் பெரிய அளவில் சர்வதேச தரத்துக்கு கட்டுப்பட்டுள்ளன. ஆனால், சென்னையில் விமான நிலையம் என்பது சிறியதாக தான் இருக்கிறது.
சென்னையில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் ஆட்டோமொபைல், மின்னணுவியல், செமிகண்டக்டர், ஜவுளி, தொழில்கள், வர்த்தக பயனர்கள் மற்றும் ஏற்றுமதிக்காக விமானப் போக்குவரத்தை பெரிதும் சார்ந்துள்ளன.
எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்தவும், புதிய முதலீடுகளை ஈர்க்கவும் விமான நிலைய கட்டமைப்பை விரிவுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாக இருக்கும் என தொழில் வல்லுநர்கள் கருதுகின்றனர். பரந்துரை விமான நிலைய திட்டத்தை கைவிட்ட தவெக அரசு, புதிய விமான நிலையம் எங்கு அமையும் என்பதை கூறவில்லை.
துறை சார்ந்த வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஆகியோர்களிடம் கலந்தாலோசித்து விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பொருத்தமான சில மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவ்விடங்களின் தொழில்நுட்ப ரீதியான சாத்தியக்கூறுகளை சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் விரிவான ஆய்வு மேற்கொண்டு புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஓர் இடமும் பரிசீலிக்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மீனம்பாக்கம் விரிவாக்கம்
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை மேலும் விரிவாக்கம் செய்து, அதன் வடமேற்குப் பகுதியில் ஆண்டுக்கு கூடுதலாக 20 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடிய Terminal-5 என்ற புதிய பயணிகள் முனையம் அமைக்க, Airports Authority of India உடன் இணைந்து, அணுகுசாலை மற்றும் மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தற்போது நடைபெற்று வரும் Terminal-3 பயணிகள் முனையம் கட்டுமானப் பணிகள் முடிவுற்றபின் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இருக்கும். மேலும், புதிய Terminal-5 பயணிகள் முனையம் செயலாக்கத்திற்குப் பிறகு, ஆண்டுக்கு மொத்தம் 55 மில்லியன் பயணிகளைக் கையாளக்கூடியதாக இவ்விமானநிலையம் இருக்கும்.
இதன்மூலம். சென்னை விமான நிலையத்தின் சேவைகள் மேம்படுத்தப்படுவதோடு. பயணிகளின் போக்குவரத்துத் தேவை புதிய விமான நிலையம் அமைக்கப்படும்வரை பூர்த்தி செய்யப்படும்.
சென்னைக்கு 2வது விமான நிலையம் ஏன் அவசியம்?
சென்னையில் உள்ள தற்போதைய விமான நிலையம், இன்றைய தரநிலைகளின்படி கூட போதுமானதாக இல்லை. சென்னையின் விமான நிலையம் 1,300 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது; ஆனால் ஹைதராபாத் விமான நிலையம் சுமார் 5,500 ஏக்கர், பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கர், மும்பை விமான நிலையம் 2,866 ஏக்கர் மற்றும் டெல்லி விமான நிலையம் 5,100 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளன. இவ்வளவு குறைவான இடவசதியை மீனம்பாக்கம் விமான நிலையம் கொண்டுள்ளது.
ஒரு காலத்தில் சென்னை தென்னிந்தியாவின் நுழைவாயிலாக இருந்தது. இன்று, சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளும் திறனுடன், மொத்தப் பயணிகளைக் கையாளும் திறனில் 5-வது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகியவை சென்னைக்கு மேலே உள்ளன.
மேலும், சென்னை விமான நிலையத்தில் போதுமான டாக்ஸிவேக்கள் மற்றும் ஏர்பிரிட்ஜ்கள் இல்லாத காரணத்தால், பெரிய விமானங்களைக் கையாளும் திறன் கொண்ட Code F விமான நிலையமாக சென்னை விமான நிலையம் வகைப்படுத்தப்படவில்லை.
இதனால் A380 போன்ற மிகப்பெரிய விமானங்கள் தரையிறங்க, சென்னை விமான நிலையம் ஏற்றதாக இல்லை. தென்னிந்தியாவில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்கள் பெரிய விமானங்களை கையாளும் Code F விமான நிலையங்களாக உள்ளன. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல் என சகல துறைகளிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டின் தலைநகரில் உலகத் தரத்திலான ஒரு விமான நிலையம் அமைவது மிக மிக அவசியமானது.
பரந்தூர் குறித்து எதிர்க்கட்சிகள் கூறுவது
பரந்தூர் திட்டம் கைவிடப்படுவதால் ஏற்படக்கூடிய முக்கியப் பிரச்சனைகளாக தங்கம் தென்னரசு பல்வேறு எச்சரிக்கைகளை முன்வைத்துள்ளார். இத்திட்டம் நிறுத்தப்படுவதன் மூலம், தமிழ்நாட்டிற்கு வரவிருந்த பல நூறு கோடி மதிப்பிலான புதிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்திற்கு இடம்பெயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஓசூர் விமான நிலையத் திட்டத்தில் ஏற்பட்ட சுணக்கத்தைப் போல, பரந்தூரைக் கைவிடுவதால் சர்வதேச சரக்குப் போக்குவரத்து, ஏற்றுமதி வணிகம் மற்றும் விமானப் போக்குவரத்து வர்த்தகம் பக்கத்து மாநிலங்களை நோக்கித் திரும்பும் சூழல் உருவாகும்.
மேலும், ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட நோக்கத்திற்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தைக் கைவிடுவது சட்ட மற்றும் நிர்வாக ரீதியான குழப்பங்களையும் இழப்புகளையும் உருவாக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்தூர் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ள நிலையில், அந்த 1,700 ஏக்கர் நிலத்தை தமிழ்நாடு அரசு இனி என்ன செய்யப் போகிறது? எனவும் திமுக, பாஜக கேள்வி எழுப்புகிறது.
மூத்த பத்திரிகையாளர் கருத்து
மூத்த பத்திரிகையாளர் டி.ராமகிருஷ்ணன் கூறுகையில், "பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை கைவிடுகிறோம் என்கிற முதல்வர் விஜய் அவர்களின் அறிவிப்பு தமிழகத்தை பொருளாதார ரீதியில் பின்னோக்கி தள்ளும். ஏற்கெனவே, பெங்களூரும் ஹைதராபாத்தும் சென்னை விமானநிலையத்தை பின்னோக்கி தள்ளிவிட்டன.
விவசாயிகளின் நலனிற்காக செய்வதாக நினைத்துக்கொண்டு செய்கின்ற இந்தமுடிவு விவசாயிகள் உட்பட பலரையும் பாதிக்க்கின்ற செயலாக போய்விடும் என்பது எனது அச்சம். அதுமட்டுமின்றி, தமிழகத்திற்கு முதலீடு செய்யமுனைபவர்கள் மத்தியில் இம்மாநிலத்தில் கட்டுமானத்துறையில் எடுக்கப்படுகின்ற முடிவுகளில் தொடர்ச்சி இருக்காது என்கிற எண்ணத்தை உருவாக்கிவிடும். அது தமிழகத்திற்கு உகந்ததல்ல.
எதிர்ப்பு இல்லாத திட்டங்களே இல்லை. சென்னைக்கு உகந்த இடத்தில் மற்றொரு இடத்த்தை கண்டறிந்துவிட்டு பரந்தூர் திட்டத்தை கைவிடுகிறோம் என்று கூறியிருந்தால் கூட இந்த அரசின் முடிவில் ஏதோ சாதகபாதகங்களை அலசிவிட்டு முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று கருதியிருக்கலாம்" என்றார்.
தீர்வு என்ன?
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் அரசின் மக்கள் நல முடிவாக இது ஒருபுறம் பார்க்கப்பட்டாலும், மாற்று இடம் தேர்வு செய்வதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் புதிய உள்கட்டமைப்பு முடக்கம் ஆகியவை தமிழ்நாட்டின் தொழில் போட்டித்தன்மையை வெகுவாகக் குறைக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அரசு உடனடியாக மாற்று இடத்தை அடையாளம் கண்டு புதிய திட்டத்தைத் துரிதப்படுத்தாவிட்டால், தலைநகர் சென்னையின் சர்வதேச வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் தேக்கநிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது