நள்ளிரவில் கரையை கடக்கும் 'முரசு' புயல்.. சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!
Tamil Nadu Weather Latest Update: ‘முரசு’ தீவிர புயலாக வலுவடைந்துள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் நவம்பர் 7ஆம் தேதி வரை கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான முரசு புயல் தீவிர புயலாக வலுவடைந்து ஆந்திரக் கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, இன்று (நவம்பர் 2) சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 7ஆம் தேதி வரை தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்பது குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
வானிலை அறிவிப்பு
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று (நவம்பர் 01) தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய புயல் ("முரசு") (Cyclonic Storm) வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவம்பர் 02) அதிகாலை 02:30 மணிஅளவில் தீவிர புயலாக (severe cyclonic storm) வலுவடைந்து அதே பகுதிகளில் நிலவியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே, ஓங்கோலுக்கு தெற்கே தீவிர புயலாக இன்று நள்ளிரவு 23:30 மணி முதல் நாளை (நவம்பர் 03) அதிகாலை 04:00 மணிக்குள் கரையைக்கடக்கக்கூடும்.
சென்னை, திருவள்ளூரில் மிக கனமழைக்கு வாய்ப்பு
சுமார் 3.1 கிமீ உயரத்தில் தெற்கு கேரள பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (நவம்பர் 02) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.
சூறாவளி காற்று வீசக்கூடும்
பலத்த/சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் வீசக்கூடும். ஏனைய வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
நாளை (நவம்பர் 03) நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
நவம்பர் 04 ஆம் தேதியன்று, உள் தமிழக மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
நவம்பர் 05ஆம் தேதி தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். இதர தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
06-11-2026: தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன மழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், இதர தென் தமிழகம் மற்றும் வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
07-11-2026: ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் வானிலை
இன்று (02-11-2026): வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன/மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (03-11-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.