SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு: ரூ.100-க்கு 10 காய்கறிகள் விற்பனை – கூட்டுறவுத்துறை அறிவிப்பு!

Tamil Nadu Government Diwali special vegetable package : தீபாவளி சிறப்பு காய்கறி தொகுப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 10 காய்கறிகள் அடங்கிய பை ரூ.100 மட்டுமே. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Nov 04, 2026, 07:29 AM IST | Updated: Nov 04, 2026, 07:37 AM IST
Join

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயனடையும் வகையில், மலிவு விலையில் காய்கறிகளை வழங்கும் அதிரடித் திட்டத்தை கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி, பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவையான 10 வகையான காய்கறிகள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு வெறும் ரூ.100 என்ற அரசு நிர்ணய விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. பண்டிகைக் காலத்தில் வெளிச்சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் குறைந்த செலவில் பண்டிகையைக் கொண்டாடவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க  | புது வீடு கட்டுபவர்கள் இனி இதை செய்யாவிட்டால் சிக்கல்! அரசின் புதிய விதிமுறைகள் Explained

என்னென்ன காய்கறிகள் விற்பனை?

இந்தச் சிறப்புத் தொகுப்பில் அன்றாட சமையலுக்குத் தேவையான 10 காய்கறிகள் குறிப்பிட்ட எடையில் வழங்கப்பட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது. இதில் பெரிய வெங்காயம் 500 கிராம், தக்காளி 500 கிராம், கத்தரிக்காய் 250 கிராம், உருளைக்கிழங்கு 250 கிராம், கேரட் 200 கிராம், பீன்ஸ் 200 கிராம், பச்சை மிளகாய் 100 கிராம், எலுமிச்சை 100 கிராம், இஞ்சி 50 கிராம் மற்றும் 400 முதல் 450 கிராம் எடையுள்ள தேங்காய் ஒன்று ஆகியவை அடங்கும். இந்தத் தொகுப்பின் மொத்த எடை 2550 கிராம் முதல் 2600 கிராம் (சுமார் 2.5 கிலோவுக்கு மேல்) வரை இருக்கும். காய்கறிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட எடையில் எவ்வித மாற்றமும் செய்யக்கூடாது எனவும், தேங்காய் 400 முதல் 450 கிராம் எடைக்குக் குறையாமல் இருக்க வேண்டும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.  

விலை நிர்ணயம் மற்றும் மானியம் குறித்து கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலில், நுகர்வோருக்கான அரசு நிர்ணய விற்பனை விலை ரூ.100 மட்டுமே எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தொகுப்புக்கு கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ பணம் வசூலிக்கக் கூடாது என்றும் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தக் காய்கறித் தொகுப்பு 15 x 12 அளவிலான பசுமை நெகிழிப்பையில் பொட்டலமிடப்பட வேண்டும், இதற்கான பொட்டலமிடுதல் கட்டணம் ரூ.2.50 ஆகும்.

கொள்முதல் மற்றும் விற்பனை விதிமுறை அறிவுறுத்தல்  

தொகுப்பிலுள்ள 10 காய்கறிகளின் கொள்முதல் விலையானது மாறுதலுக்கு உட்பட்டது. இதனை மண்டல இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை மற்றும் சரக துணைப்பதிவாளர் அடங்கிய குழு நிர்ணயிக்கும். கொள்முதல் விலைக்கும் நுகர்வோர் விற்பனை விலையான ரூ.100-க்கும் இடையே ஏற்படும் வித்தியாசத் தொகை மற்றும் பொட்டலமிடுதல் கட்டணமான ரூ.2.50 ஆகியவை, விற்பனை செய்யப்படும் தொகுப்புகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கணக்கிடப்பட்டு, கூட்டுறவு கல்வி நிதியிலிருந்து (CEF) சம்பந்தப்பட்ட பண்டகசாலைகளுக்கு மானியமாக ஈடு செய்யப்படும்.  

மேலும், விநியோகம் தொடர்பாகப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலைகளின் மேலாண்மை இயக்குநர்கள் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை தினந்தோறும் புதியதாக மட்டுமே வாங்க வேண்டும். விற்பனையின் தேவைக்கேற்ப மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டும். நுகர்வோருக்கு முறையாக விற்பனை செய்யப்பட்டு, பதிவேட்டில் அவர்களின் கையொப்பம் பெறப்பட்ட தொகுப்புகளுக்கு மட்டுமே மானியம் கோரப்பட வேண்டும் என்றும், இருப்பில் உள்ள அழுகிய அல்லது சேதமடைந்த காய்கறித் தொகுப்புகளுக்கு எக்காரணம் கொண்டும் மானியம் கோரக்கூடாது என்றும் கூட்டுறவுத்துறை கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.

 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES