A Raja Controversy Explained: தமிழகத்தின் அரசியலில் விமர்சனங்களுக்கு பஞ்சம் என்ற பேச்சுகே இடமில்லை. கட்சிகளின் கொள்கை, நிர்வாக, ஊழல் குற்றச்சாட்டு, அரசியல் எதிரிகள் போன்றவை குறித்து தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதன் அளவுகோல் என்பது மிகவும் முக்கியம். சமீப நாட்களாகவே அரசியலில் தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. பலரையும் முகம்சுழிக்கும் அளவுக்கும் தற்போதை அரசியல் கட்சியினரின் பேச்சுகள் இருந்து வருகிறது.
தற்போது திமுகவுக்கும், ஆளும் தவெகவுக்கும் இடையே தான் மோதல் நடந்து வருகிறது. சட்டப்பேரவை முதல் கட்சி கூட்டங்கள் வரை அனைத்து இடங்களிலும் இருகட்சிகளை மாறி மாறி விமர்சிப்பது மட்டுமில்லாமல், தனிநபர் தாக்குதல்கள் நிறைந்ததாக உள்ளன. அதுவும் தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில், திமுக துணை பொதுச்செயலாளரும், மக்களவை எம்பியுமான ஆ.ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பூதாகரமாக வெடித்துள்ளது.
சட்டப்பேரவையில் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அவசர நிலை காலத்தில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சூழ்நிலை குறித்து பேசியிருந்தார். ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டு அவர் பேசியிருந்தார்.
இந்த கருத்துகள் திமுகவினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து நேற்றுமுன்தினம் (செப்டம்பர் 12) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை திமுவினர் நடத்தினர். இதில் எம்.பி. ராசா அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் குறித்து தனிப்பட்ட தாக்குதல்களை நடத்தினார்.
அவர் பேசுகையில், "இப்போது ஒரு அமைச்சர் இதற்காக சிறைக்கு செல்லவில்லை. அதற்காக சிறைக்கு போகவில்லை எனப் பேசுகிறார். எனக்குக் கூட நீ யாருக்காகப் பிறந்ததாய் என்பதில் சந்தேகம் இருக்கிறது. நான் கேட்கலாமா? நீ என் தலைவரின் தியாகத்தை சந்தேகிக்கும் போது, நான் உன் பிறப்பைச் சந்தேகிக்றேன். வழக்கு போட்டுக் கொள்" என தரக்குறைவாக ஆ.ராசா பேசினார். இந்த பேச்சுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
ஆ.ராசா இதுபோன்ற பேசி வருவது திமுகவினருக்கு தலைவலியை கொடுத்து வருகிறது. ஆ.ராசா இப்படி பேசுவது முதல்முறையல்ல. 2021 தேர்தல் பிரச்சாரத்தில் ஆ.ராசா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை கிளப்பின.
2021 சட்டமன்ற தேர்தலின்போது ஆ.ராசாவின் பேச்சு பூதாகரமாக வெடித்தது. 2021ஆம் ஆண்டு ஆ.ராசா திமுக கூட்டம் ஒன்றில் பேசும்போது, திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருவரின் அரசியல் வளர்ச்சியை ஒப்பீட்டு பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.
ஆ.ராசா பேசுகையில், "ஜனநாயகத்தை காப்பாற்ற சிறையில் இருந்தவர் ஸ்டாலி்். மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர், மேயர், எம்எல்ஏ, துணை முதல்வர் என படிப்படியாக ஸ்டாலின் உயர்ந்தார். இப்போது முதல்வராக போகிறார். அவர் திணிக்கப்பட்டவர் இல்லை.
முறைப்படி பெண் பார்த்து, நிச்சம் செய்து, திருமணம் நடத்தி, சாந்தி முகூர்த்தம் நடத்தி 300 நாட்கள் கழித்து சுகப் பிரசவத்தில் பிறந்தவர். ஆனால், ஜெயலலிதா இறக்கும் வரை, எடப்பாடி பழனிசாமியை யாருக்கும் தெரியாது. இவர் ஊர்ந்துபோய் முதல்வரானார். அதிகாரத்தில் இருப்பதால் அவருக்கு புகழ் இருந்தது. ஓராண்டாக பத்திரிகைகள் மிகப்பெரிய தலைவரைப் போல சித்தரிக்கின்றன.
எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி, தியாகம் இருக்கிறது? பொதுவாழ்க்கையில் அவர் எட்டியிருக்கின்ற தொலைவு என்ன? ஒன்றும் கிடையாது. நல்ல உறவில் சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஸ்டாலின் என்றால், கள்ள உறவில் குறை பிரசவத்தில் பிறந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி" என ஆ.ராசா பேசியது சர்ச்சையானது.
ஆ.ராசாவின் பேச்சுக்கு 2021 சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்கலங்கினார். சென்னை திருவொற்றியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, தனது தாயாரை இழிவாகப் பேசியதாகக் குறிப்பிட்டு கண்கலங்கினார். சிறிது நேரம் பேச முடியாமல் தலை கவிழ்ந்து நின்ற அவர், பிறகு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசியதாவது, "நான் முதல்வராக இருக்கிறேன்.
இதை இங்கு பேசக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனால், இங்கு தாய்மார்களைப் பார்த்ததால் பேசுகிறேன். என் தாய்க்காக மட்டும் நான் இந்தப் பிரச்சினையைப் பார்க்கவில்லை. ஒரு குடும்பத்தில் ஒரு தாயாகப் பாருங்கள். எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். ஆக, ஒரு சாதாரண மனிதன் முதல்வராக இருந்தால் என்னென்னவெல்லாம் பேசுவார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு ஒரு முதல்வருக்கே இப்படிப்பட்ட நிலை என்றால் சாதாரண மக்களுக்கு யார் பாதுகாப்பு கொடுப்பது?" என பேசினார்.
ஆ.ராசாவின் இந்த பேச்சு தேர்தலில் பயங்கரமாக எதிரொலித்தது. குறிப்பாக, 10 ஆண்டுகால ஆட்சிக்கு பிறகும், அதிமுக கூட்டணி கணிசமான அளவில் வெற்றி பெற்று இருந்தது. முக்கியமான சொல்ல வேண்டுமென்றால், கொங்கு மண்டலத்தில் (சேலம், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, திருப்பூர்) மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து இருந்தது அதிமுக. அதற்கு முக்கிய காரணமாக ஆ.ராசாவின் பேச்சுகள் இருந்ததாக கூறப்படுகிறது.
கோவையில் உள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட திமுகவில் 2021 தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. சேலத்தில் 11 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. இந்தளவுக்கு ஆ.ராசாவின் பேச்சுகள் தேர்தலில் எதிரொலித்தது.
எடப்பாடி பழனிசாமியின் தாயார் குறித்து ஆ.ராசா தரக்குறைவாக பேசிவிட்டதாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்தனர். குறிப்பாக, ஆ.ராசா ஆதிதிராவிடர் சமூதாயத்தைச் சேர்ந்தவராக இருப்பதால், கொங்கு வெள்ளாலர் கவுண்டர் அதிகமாக வசிக்கும் கோவையிலும், சேலத்திலும், அது சாதிய பிரச்னையாக மாற்றப்பட்டு விட்டது. இதனால், கொங்கு மண்டலத்தில் திமுகவால் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.