SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கனும்.. இபிஎஸ் ஆவேசம்!

Maduranthakam Dharapuram Byelection: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வடைய உள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களுக்கு சில வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Written By Umabarkavi K
Published: Oct 04, 2026, 04:42 PM IST | Updated: Oct 04, 2026, 05:14 PM IST
Join

Maduranthakam Dharapuram Byelection: தமிழகத்தில் அக்டோபர் 6ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த ஒரு மாதமாக இரு தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் நடந்து வந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

இதுகுறித்து அதிமுக பொதுச் செலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பின்படி, "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில், த.வெ.க. பல்வேறு தகிடுதத்தங்களை செய்து, ஆட்சி அமைப்பதற்கு போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையிலும், பிற கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. த.வெ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு ரீல்ஸ் மற்றும் சினிமா காட்சிகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரங்கேற்றிக் கொண்டிருப்பதை மக்கள் அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சட்டமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களிடம் குறுக்கு வழியில் குதிரை பேரத்தை நடத்தி, வாக்களித்த 'விரல் மை' காய்வதற்குள் ஒருசில துரோகிகள், ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி, தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு தற்போது இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா ஆகியோருக்கும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், வாக்களித்த மக்களுக்கும் மாபெரும் துரோகத்தை இழைத்தவர்களே, தற்போது த.வெ.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். இவர்கள் சிறிதும் வெட்கம் இல்லாமல் மீண்டும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்பதை சகித்துக்கொள்ள முடியாத மக்கள், துரோகிகளுக்கு தொகுதி முழுவதும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை வலைதளங்களிலும், ஊடகங்களிலும் நாம் அனைவரும் கண்கூடாகப் பார்த்து வருகிறோம்.

வாக்காளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

த.வெ.க-வினர் தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தைகளைச் சொல்லியும், தவறான வழியில் ஈடுபட்டும், வாக்காளப் பெருமக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதை மக்கள் நன்கு அறிவார்கள். கழகத்தின் வெற்றிக்கு துரோகம் இழைத்து, த.வெ.க. சார்பில் போட்டியிடும் இவ்விரு வேட்பாளர்களுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

த.வெ.க. மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி அரசாக மாற்ற வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு, குறுக்கு வழிகளில் நடத்தப்பட்ட திரைமறைவு செயல்களுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டத் தயாராக உள்ளனர். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இவ்விரு சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களிடம், கழக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டி நான் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டபோது, அவர்கள் தன்னெழுச்சியாகத் திரண்டு வந்து அளித்த வரவேற்பையும், நல்லாதரவையும் பார்க்கும்போது, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டதை, கண்கூடாகக் காண முடிந்தது.

விசுவாசத்திற்கு மூடுவிழா நடத்தி, துரோகத்திற்குப் பெயர்போன, த.வெ.க. சார்பில் மீண்டும் போட்டியிடும் துரோகிகளுக்கு சவுக்கடி கொடுக்கின்ற வகையில், வருகின்ற 6.10.2026 அன்று நடைபெற உள்ள இடைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் கணிதா சம்பத் அவர்களுக்கும், தாராபுரம் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடும் அன்புச் சகோதரி பானுமதிக்கும், கழகத்தின் வெற்றிச் சின்னமாம் 'இரட்டை இலை' சின்னத்தில் உங்களது பொன்னான வாக்குகளை அளித்து, த.வெ.க, தி.மு.க. வேட்பாளர்களைத் தோற்கடித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் இருவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்திடுமாறு, வாக்காளப் பெருமக்களாகிய உங்கள் அனைவரையும் இருகரம் கூப்பி அன்போடு வேண்டி விரும்பிக் கேட்டுக்கொள்கிறேன்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்கள், துரோகத்திற்கும்-அதிகார துஷ்பிரயோகத்திற்கும், இனி யாருக்கும் துரோக சிந்தனை வராத வகையில் தக்க பதிலடி கொடுத்தார்கள்" என்ற வரலாற்று நிகழ்வைப் படைத்திட வேண்டும் என்று, வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என்றார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES