அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்
Tamil Nadu government new rules : அரசு ஊழியர்களுக்குத் திருமண முன்பணம் ரூ.5 லட்சம் பெற விண்ணப்பிக்கும் கால வரம்பில் அதிரடி தளர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகளின் திருமணச் செலவுகளுக்கு உதவும் வகையில் வழங்கப்படும் திருமண முன்பண நடைமுறையில் மிக முக்கியமான தளர்வை ஏற்படுத்தித் தமிழக அரசு அதிகாரப்பூர்வ ஆணையைப் பிறப்பித்துள்ளது. அரசுப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் மகன்கள் அல்லது மகள்களின் திருமணத்திற்கு வழங்கப்படும் முன்பணத் தொகையை ஏற்கனவே பல மடங்கு உயர்த்தி அதிகபட்சமாக ரூ.5,00,000/- வரை வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த முன்பணத் தொகையைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பழைய நடைமுறையும் அதில் இருந்த சிக்கல்களும்
முன்னர் நடைமுறையில் இருந்த அரசாணையின்படி, திருமணம் நடைபெறவிருக்கும் நாளுக்கு ஆறு மாதங்களுக்கு, அதாவது 180 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பிக்கக் கூடாது என்றும், திருமணத் தேதிக்கு முன்னதாக மட்டுமே விண்ணப்பங்களை அளிக்க வேண்டும் என்றும் கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக, குடும்பச் சூழல், அலுவலகப் பணிச்சுமை அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் திருமணத்திற்கு முன்பு குறிப்பிட்ட காலத்திற்குள் விண்ணப்பிக்கத் தவறிய பல அரசு ஊழியர்கள், இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாமல் தவித்து வந்தனர்.
சட்டமன்ற பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து புதிய தளர்வு
இந்த நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கும் வகையில், சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பைச் செயல்படுத்தும் விதமாக இந்தத் திருத்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, திருமண முன்பணம் கோரும் விதிகளில் விண்ணப்பிக்கும் கால வரம்பு பின்வருமாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது:
புதிய கால வரம்பு: அரசு ஊழியர்கள் தங்களின் திருமணத் தேதிக்கு 180 நாட்களுக்கு முன்பிருந்தும், திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து 60 நாட்கள் வரையிலும் கூடத் திருமண முன்பணத்திற்குத் தாராளமாக விண்ணப்பிக்கலாம்.
ஊழியர்களுக்குக் கிடைக்கும் நேரடிப் பயன்கள்
இந்த புதிய நடைமுறை மாற்றத்தின் மூலம், திருமணத்திற்கு முன்னரே நிதியைப் பெற விரும்புவோர் 6 மாதங்களுக்கு முன்பிருந்தே விண்ணப்பித்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில், திருமண அவசரத்திலோ அல்லது எதிர்பாராத குடும்பச் சூழ்நிலைகளாலோ முன்கூட்டியே விண்ணப்பிக்க முடியாமல் போனாலும், திருமணம் முடிந்த பிறகு 2 மாதங்கள் (60 நாட்கள்) வரை விண்ணப்பித்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளும் கூடுதல் வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் எந்தவொரு தகுதியுள்ள அரசுப் பணியாளரும் நிர்வாகத் தாமதம் அல்லது காலக்கெடு முடிந்துவிட்டது என்ற காரணத்திற்காக இந்த நிதிப் பயனை இழக்க வேண்டிய நிலை இனி ஏற்படாது. இந்த உத்தரவு வெளியான நாள் முதல் நடைபெறும் திருமணங்களுக்கு இப்புதிய கால வரம்பு தளர்வு முழுமையாகப் பொருந்தும் என்றும், இது தொடர்பான நிதி விதித் தொகுப்பில் தேவையான திருத்தங்கள் தனியாக வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.