SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பள்ளி வகுப்புகள் பாதிக்காமல் 7 வாரம் இறுதியில் பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Oct 24, 2026, 08:17 PM IST | Updated: Oct 24, 2026, 08:21 PM IST
Join

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வை வெற்றிகரமாக எதிர்கொள்ளப் பள்ளிக்கல்வித் துறை ஒரு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இந்தத் தேர்வு வரும் டிசம்பர் 2026-ல் நடத்தப்பட உள்ளது. தேர்வுக்குத் தயாராகும் ஆசிரியர்களுக்கு வழிகாட்டும் நோக்கில், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 7 வாரங்களுக்கு நேரடி வார இறுதிப் பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது.  

பள்ளி வகுப்புகளுக்கு இடையூறின்றி சனி, ஞாயிறுகளில் பயிற்சி

வழக்கமாக ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் வேலை நாட்களில் நடத்தப்படும்போது, பள்ளிகளில் மாணவர்களுக்கான பாடம் நடத்துவதில் சுணக்கம் ஏற்படும் சூழல் உருவாகும். இதனைத் தவிர்க்கும் வகையில், "பள்ளிப் பணிகள் பாதிக்காவண்ணம் ஆசிரியர்களின் வசதிக்கேற்ப" அரசு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே இந்தப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் காக்கப்படுவதுடன், ஆசிரியர்களும் எவ்வித பணிச்சுமை அழுத்தமுமின்றி விடுமுறை நாட்களில் தேர்வுக்கு முழு கவனத்துடன் தயாராக வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

பயிற்சி மையம் மற்றும் 7 வாரங்களுக்கான முழு அட்டவணை

இந்தப் பயிற்சி வகுப்புகள் வரும் அக்டோபர் 30, 2026 முதல் தொடங்குகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் அல்லது முதன்மைக் கல்வி அலுவலக வளாகங்களில் இந்த நேரடிப் பயிற்சிகள் நடைபெறும்.  

வாரம் 1: 31.10.2026 & 01.11.2026   
வாரம் 2: 07.11.2026 & 08.11.2026   
வாரம் 3: 14.11.2026 & 15.11.2026
வாரம் 4: 21.11.2026 & 22.11.2026
வாரம் 5: 28.11.2026 & 29.11.2026
வாரம் 6: 05.12.2026 & 06.12.2026 
வாரம் 7: 12.12.2026 & 13.12.2026  

பயிற்சியில் பங்கேற்க வேண்டியவர்கள் யார்? அதிகாரிகளுக்கு உத்தரவு

பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றி, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தவுள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் இந்தப் பயிற்சியில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.  

இதற்கான முன்னேற்பாடுகளை எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட DIET முதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்துத் தகுதியான ஆசிரியர்களையும் இப்பயிற்சியில் பங்குபெறச் செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பயிற்சி நிறைவடைந்தவுடன் அதன் விரிவான அறிக்கையை SCERT இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES