2027 உலகக் கோப்பையில் கோலி, ரோகித் இல்லை? கம்பீர் எச்சரிக்கை! Explained
நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, 2027 உலகக் கோப்பை அணியில் கில் மற்றும் பும்ரா தவிர்த்து விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட யாருடைய இடமும் உறுதியாகவில்லை என தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரின் எதிர்காலம் குறித்து மீண்டும் விவாதம் எழுந்துள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி சந்தித்த படுதோல்வியை தொடர்ந்து தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் வீரர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக 2027 ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியின் சில வீரர்களின் இடம் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவுக்கு வரலாற்று தோல்வி
நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது. மூன்றாவது போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த சூழலில், நடைபெற்ற நான்காவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 333 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. இதையடுத்து 334 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், இந்திய அணி 26.4 ஓவர்களில் வெறும் 89 ரன்களுக்கு சுருண்டது. இதனால் 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த தோல்வி இந்திய அணியின் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்றாக அமைந்தது. இதற்கு முன்பு 2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்திய அணி 245 ரன்கள் விட்த்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது.
கம்பீர் கடுமையான எச்சரிக்கை
இந்த தோல்விக்கு பிறகு நடைபெற்ற அணி ஆலோசனை கூட்டத்தில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 89 ரன்களுக்கு ஆட்டமிழந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் ஆட்டமிழந்ததை சாதாரணமாக கருத முடியாது என்றும் அவர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகிய இருவரின் இடங்கள் மட்டுமே தற்போது உறுதியாக இருப்பதாகவும், மற்ற வீரர்கள் தங்களது இடத்தை செயல்பாட்டின் மூலம் நிரூபிக்க வேண்டும் என்றும் கம்பீர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலி, ரோகித்துக்கு சிக்கலா?
இந்திய அணியின் முக்கிய தூண்களாக விளங்கும் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் அனுபவம் மற்றும் சாதனைகளில் முன்னிலையில் உள்ளனர். இருப்பினும், உலகக் கோப்பை அணித் தேர்வில் கடந்தகால சாதனைகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தற்போதைய செயல்பாடுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்ற நிலைப்பாட்டை கம்பீர் எடுத்துள்ளதாக தெரிகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் இருவரும் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஒரு போட்டியின் தோல்வியை மட்டும் வைத்து அவர்களது எதிர்காலத்தை முடிவு செய்ய முடியாது. அடுத்தடுத்த போட்டிகளில் அவர்கள் வெளிப்படுத்தும் ஆட்டமும், அணியின் தேவைக்கு ஏற்ப அவர்களது பங்களிப்பும் முக்கியமாக இருக்கும்.
இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள் வருமா?
2027 ஒருநாள் உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள ஆடுகளங்களும் நியூசிலாந்து ஆடுகளங்களும் ஏறக்குறைய ஒரே மாதிரியான தன்மையை கொண்டிருக்கும் என கம்பீர் கருதுவதாக கூறப்படுகிறது. எனவே, நியூசிலாந்து தொடரில் இந்திய பேட்டர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
மேலும், டாஸ் வென்ற பிறகு தொடர்ந்து பந்துவீச்சை தேர்வு செய்வது குறித்தும் பிசிசிஐ தரப்பில் அதிருப்தி நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் பேட்டிங் செய்யும் சவாலை எதிர்கொள்ளாமல், இலக்கை துரத்தும்போது ஏற்படும் தோல்விகளுக்கு பேட்டர்களே பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகிறது என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது.
மொத்தத்தில், நியூசிலாந்துக்கு எதிரான இந்தத் தோல்வி இந்திய அணிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. 2027 உலகக் கோப்பையை இலக்காக கொண்டுள்ள கம்பீர், வீரர்களின் பெயர்களைவிட அவர்களது செயல்பாடுகளுக்கே முக்கியத்துவம் அளிக்க விரும்புவதாக தெரிகிறது. இதனால், அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.