“நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்” முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் 4 நறுக் கேள்விகள்!
தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்கள் முடிந்திருக்கும் நிலையில் முதல்வர் விஜய்க்கு, மு.க.ஸ்டாலின் நான்கு கேள்விகளை கேட்டுள்ளார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து, ஆட்சியில் இருக்கும் தவெக, ஆட்சியிழந்த திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போதைய முதல்வரும் தவெக தலைவருமான விஜய்க்கு நான்கு கேள்விகளை கேட்டிருக்கிறார். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
மு.க.ஸ்டாலின் முன்வைக்கும் கேள்விகள்:
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் ட்வீட்டில்,
“நாடு சிரிக்கும் நான்கு மாதங்கள்! இந்த நான்கு கேள்விகளுக்குப் பதிலுண்டா…?
1. பெண்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டச் செயலாளர்களாகவும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் பெண் பாதுகாவலர் போல வேடம் போடலாமா?
2. அறிவிக்கப்படாத மின்வெட்டில் இருந்து, இனி தினமும் அறிவித்துவிட்டு 8 மணிநேரம் மின்வெட்டு என்பதை நோக்கித் தமிழ்நாடு நகரவுள்ளதாக வரும் செய்திகள் உங்கள் செவிகளை எட்டவில்லையா?
3. அசையாத மரமொன்று விழுந்தது கீழே என்ற கதையாக, இடைத்தேர்தல் தோல்வியைத் தவிர்க்க நீங்கள் மணிக்கணக்கில் தெருவலம் போவது போதாமல், டிபன் கேரியரில் பணமும் போகிறதாமே? ஒரு தெருவுக்கு இவ்வளவு என வாக்குகள் விலைபேசப்படுவதாக உங்கள் ஆட்சி அமைய ஆதரவு தெரிவித்த கட்சிகளே குற்றம்சாட்டுவதற்குப் பதில் என்ன?
4. இத்தோடு, குதிரைவேக குதிரை பேரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா? அல்லது, இனியும் TVK Horse Trading-இன் அடுத்த Season தொடருமா?
தூயசக்தி எனத் தம்பட்டம் அடித்த உங்களது ரீல் இப்படி நான்கே மாதங்களில் அறுந்து தொங்கிவிட்டதே” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு!
மு.க.ஸ்டாலின், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டதை தொடர்ந்து, அப்போது அதிமுகவில் இருந்து ராஜிநாமா செய்து விட்டு, தவெகவில் இணைந்த மதுராந்தக எம்.எல்.ஏ சத்தியபாமா குறித்து பேசினார். அப்போது, “அவருக்கு சத்ய பாமா என பெயர் வைப்பதற்கு, பல்டி பாமா என பெயர் வைக்கலாம். இந்த உடம்பை வைத்துக்கொண்டு எப்படி பல்டி அடிக்கிறார் என தெரியவில்லை” என்று கூறினார். இவர், இப்படி ஒரு வேட்பாளரை உருவ கேலி செய்து பேசியது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு, தவெக தலைவர் விஜய், அமைச்சர ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட பலர், ஸ்டாலின் ஆபாசமாக பேசியதாக கூறி கண்டனம் தெரிவித்தனர்.