ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்! தகுதியற்ற பயனாளிகள் பட்டியலைச் சரிபார்க்க மாநில அரசுகளுக்கு உத்தரவு
Ration Card Update : ரேஷன் கார்டு சலுகை பெறும் பயனாளிகளில் தகுதியற்றவர்களை கண்டுபிடித்து நீக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Ration Card Update : ஏழை மற்றும் எளிய மக்களின் பசியைப் போக்கும் நோக்கில் ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இலவச ரேஷன் திட்டத்தில், தகுதியற்ற நபர்களும் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டு இலவச உணவு தானியங்களைப் பெற்று வருவது ஒன்றிய உணவு அமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தகுதியற்ற பயனாளிகளைக் கண்டறிந்து பட்டியலிலிருந்து நீக்கும் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | உங்க வீட்டில் முதியோர் இருக்காங்களா? தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள சூப்பர் அப்டேட்
இலவச ரேஷன் திட்ட பயனாளிகள்
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், 'பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளுக்கு நபர் ஒருவருக்கு மாதம் 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதேபோல, 'அந்தியோதயா அன்ன யோஜனா' திட்டத்தின் கீழ் மிக வறிய நிலையில் உள்ள தகுதியான குடும்பத்திற்கு மாதம் 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் வாயிலாக நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
ஒன்றிய உணவு அமைச்சகத்தின் விரிவான ஆய்வு
இத்திட்டம் உண்மையான ஏழை மக்களுக்குச் சென்றடைகிறதா என்பதை அறிய, ஒன்றிய உணவு அமைச்சகம் நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் விரிவான கள ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவில், நாடு முழுவதும் சராசரியாக 13.2 சதவீதம் தகுதியற்ற பயனாளிகள் இலவச ரேஷன் திட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மாநில வாரியாகப் பார்க்கும்போது, மேற்கு வங்கம் 39.5 சதவீதத்துடன் முதலிடத்திலும், இரண்டாமிடத்தில் திரிபுரா 39.2 சதவீதம், தமிழ்நாடு 38.7 சதவீதங்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளன. மேலும், கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் தகுதியற்ற பயனாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் 12.5 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 15.6 சதவீதமாகவும் தகுதியற்ற பயனாளிகள் பதிவாகியுள்ளனர்.
யாரெல்லாம் தகுதியற்றவர்களாகக் கருதப்படுகிறார்கள்?
அரசு விதிமுறைகளை மீறி, வசதி படைத்த பலரும் இலவச உணவு தானியங்களைப் பெறுவது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. குறிப்பாக, சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், வீட்டில் ஏசி பயன்படுத்துபவர்கள், 3 அல்லது அதற்கு மேற்பட்ட அறைகளைக் கொண்ட கான்கிரீட் வீடு வைத்திருப்பவர்கள். குடும்பத்தில் அரசு ஊழியர்களைக் கொண்டவர்கள் எனப் பலரும் இலவச ரேஷன் பொருட்களைப் பெறுவது தெரியவந்துள்ளது.
வருமான வரி மற்றும் போக்குவரத்துத் துறை தரவுகளுடன் ஒப்பீடு
பல மாநிலங்களில் ரேஷன் பயனாளிகள் பட்டியல் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாகவே தொடர்கிறது. எனவே, தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, வருமான வரித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை ஆகியவற்றின் தரவுகளுடன் ரேஷன் கார்டு விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தகுதியற்றவர்களைக் கண்டறிந்து பட்டியலிலிருந்து நீக்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.