Tamil Nadu Government :ஸ்விக்கி, ஜொமேட்டோ, டன்சோ உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இயங்கும் இணையம் சார்ந்த கிக் (Gig) தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் அவர்களை உறுப்பினர்களாக இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சினேகா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த முகாம்கள் மூலம் தொழிலாளர்கள் அரசின் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைப் பெற முடியும்.
இச்சிறப்பு முகாம் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறும். காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் இந்த முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன. மேலும், தொழிலாளர்கள் எவ்வித கட்டணமுமின்றி tnuwwb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவும் நேரடியாகப் பதிவு செய்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 044-29593177 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்யும் கிக் தொழிலாளர்களுக்குப் பின்வரும் நிதிப்பயன்கள் வழங்கப்படுகின்றன:
விபத்து மரண உதவித்தொகை: பணியின் போதோ அல்லது விபத்திலோ மரணம் சம்பவித்தால், குடும்பத்திற்கு ரூ. 5,00,000 வரை நிதி உதவி அளிக்கப்படுகிறது.
இயற்கை மரண உதவித்தொகை & ஈமச்சடங்கு நிதி: இயற்கை மரணமடையும் தொழிலாளரின் குடும்பத்திற்கு ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்குச் செலவுத் தொகையாக ரூ. 5,000 வழங்கப்படுகிறது.
மாதாந்திர ஓய்வூதியம்: நலவாரிய உறுப்பினராகத் தொடர்ந்து இருந்து 60 வயதை நிறைவு செய்யும் தொழிலாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதம் ரூ. 1,000 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.
திருமண நிதியுதவி: ஆண் தொழிலாளரின் திருமணத்திற்கு ரூ. 3,000 மற்றும் பெண் தொழிலாளரின் திருமணத்திற்கு ரூ. 5,000 வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
மகப்பேறு உதவி: பெண் தொழிலாளர்களுக்கு பேறுகால உதவியாக ரூ. 6,000 வரை வழங்கப்படுகிறது.
குழந்தைகள் கல்வி நிதியுதவி: பள்ளிப் படிப்பு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு ரூ. 1,000 முதல் ரூ. 1,500 வரையிலும், ஐடிஐ, பாலிடெக்னிக், பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி பயிலும் பிள்ளைகளுக்கு ஆண்டிற்கு ரூ. 1,500 முதல் ரூ. 12,000 வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கண் கண்ணாடி உதவி: பார்வை குறைபாடு உள்ள தொழிலாளர்களுக்குக் கண் பரிசோதனைக்குப் பின் கண் கண்ணாடி வாங்க ரூ. 500 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.
விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், வயதுச் சான்றிதழ், சம்பந்தப்பட்ட கிக் நிறுவனத்தில் (Swiggy, Zomato, Dunzo போன்றவை) பணிபுரிவதற்கான ஐடி கார்டு அல்லது செயலியில் உள்ள விவரங்கள்
உங்கள் மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு இந்த உதவித்தொகை பெறுவதற்கான ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.