SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

நைட் வெடி போடறது கஷ்டம் போலயே.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

Rain Alert: தீபாவளி நாளில் சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு இரவு 10 மணி வரை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பட்டாசு புகையால் காற்று மாசும் அதிகரித்துள்ளது.

Written By R Balaji
Published: Nov 08, 2026, 08:14 PM IST | Updated: Nov 08, 2026, 08:17 PM IST
Join

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி கொண்டாட்டத்தில் மழை குறுக்கீடு

தமிழகம் முழுவதும் இன்று தீபாவளி பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், காலை முதலே பல மாவட்டங்களில் பெய்த மழை கொண்டாட்டங்களுக்கு இடையூறாக அமைந்தது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்தது. கடலோர பகுதிகள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மழைப்பொழிவு காணப்பட்டது.

சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்ததால், சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. அவ்வப்போது பெய்த மழையால் பட்டாசு வெடிக்க முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர். இருப்பினும், மழை ஓய்ந்த இடைவெளிகளில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.

14 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை

இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது இன்று இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், ராமநாதபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், கோவை, நாமக்கல், நீலகிரி, தேனி, சிவகங்கை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.

மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதுடன், சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னையில் பட்டாசு புகையால் காற்று மாசு அதிகரிப்பு

தீபாவளியை முன்னிட்டு இரவு 7 மணி முதல் 8 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை, வேலூர் உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து பண்டிகையை கொண்டாடினர்.

சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதால், வானம் வண்ணமயமாக காட்சியளித்தது. அதே சமயம், பட்டாசுகளிலிருந்து வெளியான புகை காரணமாக நகரின் காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES