மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!
Tamil Nadu e Sevai : வெற்றி தமிழ்நாடு ஒருங்கிணைந்த இ-சேவை மூலம் AI தொழில்நுட்பத்தில் 1,000 அரசு சேவைகள் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.
Tamil Nadu e Sevai : தமிழக மக்களுக்கு அரசு சேவைகளை மிக எளிதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கொண்டு சேர்க்கும் நோக்கில், மின் ஆளுமைத் துறையில் ஒரு பிரம்மாண்ட டிஜிட்டல் புரட்சியைத் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் துணையுடன் இயங்கும் ‘வெற்றி தமிழ்நாடு ஒருங்கிணைந்த இ-சேவை 2.0’ (Vetri Tamil Nadu Integrated e-Sevai 2.0 Platform) என்ற அதிநவீன தளத்தை உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மிக முக்கியமான சிறப்பம்சமே மனுவே தேவையில்லை என்ற அணுகுமுறைதான். அதாவது, ஒரு குடிமகன் அரசு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பெறத் தனியாகப் படிவங்களை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அரசு தரவுத்தளங்களில் உள்ள தகவல்களை AI தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்து, குறிப்பிட்ட திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளை அரசே தானாகக் கண்டறிந்து உரிய சேவைகளை நேரடியாக வழங்கும் வகையில் இத்தளம் வடிவமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை உருவாக்க விருப்பமுள்ள தொழில்முறை நிறுவனங்களிடமிருந்து விருப்பக் கோரிக்கை கோரப்பட்டுள்ளது.
1,000 அரசு சேவைகள் மற்றும் துறைகள் இணைப்பு
தற்போது நடைமுறையில் உள்ள இ-சேவை முறையில் 38 துறைகளின் கீழ் சுமார் 275 சேவைகள் மட்டுமே 25,277 மையங்கள் வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், உருவாக்கப்படவுள்ள வெற்றி இ-சேவை 2.0 தளத்தில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட அரசு சேவைகள் முழுமையாக இணைக்கப்பட உள்ளன.
இதற்காக நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, காவல் துறை, நீதிமன்றங்கள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட முக்கிய அரசுத் துறை இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. மேலும், ஆதார், டிஜிலாக்கர் உள்ளிட்ட 18 தேசிய மற்றும் மாநில அளவிலான டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு வசதிகளுடன் இத்தளம் நேரடியாக இணைக்கப்படும். இதன்மூலம் பொதுமக்களின் குடிமக்கள் அணுகல் எண், ரேஷன் அட்டை மற்றும் அரசு அடையாள ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நகல் பதிவுகள் களையப்படும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேசும் AI சேவை:
பொதுமக்கள் தங்களின் தாய்மொழியிலேயே எளிதாக அரசுச் சேவைகளை அணுகும் வகையில், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உரையாடும் திறன் கொண்ட AI வசதி, குரல் வழி இடைமுகம் மற்றும் ஆவணப் பரிசீலனை தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெறவுள்ளன.
அதேபோல், அதிக பணிச்சுமை உள்ள நேரங்களிலும் எவ்விதத் தொழில்நுட்பத் தடங்கலும் இன்றி, நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1.5 லட்சம் சேவை கோரிக்கைகளை உடனுக்குடன் கையாளும் அளவுக்கு இதன் சேவையகத் திறன் கட்டமைக்கப்படவுள்ளது. முந்தைய இ-சேவை 1.0 மற்றும் இ-மாவட்ட திட்டங்களில் உள்ள சுமார் 110 TB அளவிலான பழைய தரவுகளும் புதிய தளத்திற்குப் பாதுகாப்பாக மாற்றப்பட உள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள், காலக்கெடு :
பொதுமக்களின் தனிநபர் தரவுப் பாதுகாப்புக்கு இத்தளத்தில் உச்சகட்ட முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு சேவைகள் மற்றும் குடிமக்களின் தகவல்கள் அனைத்தும் இந்தியாவின் எல்லைக்குள் உள்ள தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் சொந்த அரசு தரவு மையங்கள் மற்றும் கிளவுட் கட்டமைப்பிலேயே முழுமையாகப் பராமரிக்கப்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் மக்களின் தனிநபர் தரவுகள் அரசின் பாதுகாப்புக் கட்டமைப்பை விட்டு வெளியே செல்லாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அதிநவீன ‘வெற்றி இ-சேவை 2.0’ தளத்தை உருவாக்கி நிர்வகிப்பதற்கான தொழில்நுட்ப விருப்பக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க நிறுவனங்களுக்கு வரும் 2026 நவம்பர் 3-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முழு பயன்பாட்டுக்கு வரும்போது, பொதுமக்கள் அரசு அலுவலகங்களுக்கும் இ-சேவை மையங்களுக்கும் அலைவது முற்றிலும் தவிர்க்கப்பட்டு, அனைத்து அரசு உதவிகளும் மக்களின் விரல் நுனிக்கும் வீடு தேடியும் சென்றடையும்.