இனி EB ரீடிங் எடுக்க ஆள் வரத் தேவையில்லை: தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் Explained
Tamil Nadu EB New Update : தமிழ்நாட்டில் வீடு வீடாக மின் கணக்கீடு எடுக்கும் நடைமுறையில் முக்கிய மாற்றம். உங்கள் மொபைல் மூலமாக நீங்களே மீட்டர் ரீடிங் எடுத்து பில் போடும் புதிய வசதி குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu EB New Update : தமிழ்நாட்டில் வீட்டு உபயோக மின் நுகர்வோரின் இருமாத மின்கட்டணக் கணக்கீட்டு முறையில் ஒரு மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றத்தைத் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் முன்னெடுக்கவுள்ளது. மின் வாரிய ஊழியர்களின் வருகைக்காகக் காத்திருக்காமல், நுகர்வோரே தங்களின் ஸ்மார்ட்போன் வழியாக மின் மீட்டரை புகைப்படம் எடுத்துப் பதிவேற்றி, உடனடியாக மின் கட்டண ரசீதை உருவாக்கும் "சுய மதிப்பீடு" என்ற புதிய வசதியை அறிமுகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மொபைல் ஆப் மூலம் பில் எடுப்பது எப்படி? எளிய வழிமுறைகள்
நுகர்வோர் இந்தச் சேவையைப் மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் மின் பகிர்மானக் கழகத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன:
1. ஸ்மார்ட்போனில் உள்ள TNPDCL மொபைல் செயலியைத் திறந்து, அதில் உள்ள 'Self-Assessment' என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. நுகர்வோர் தங்களின் மின் இணைப்பு எண்ணை உள்ளிட வேண்டும்.
3. அதனைத் தொடர்ந்து திரையில் தோன்றும் கேமரா திரையைக் கொண்டு, மின் மீட்டரில் உள்ள டிஜிட்டல் திரையைத் துல்லியமாகப் படம்பிடிக்க வேண்டும்.
4. மீட்டரின் திரையில் kWh ரீடிங் காட்டப்படும்போது, கேமரா அந்த எண்களைத் தானாகவே படம் பிடித்துக் கொள்ளும். பின்னர் சமர்ப்பி என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.
5. இந்தத் தகவல் பதிவேற்றப்பட்டதும், மின் கட்டண மென்பொருள் முந்தைய ரீடிங்குடன் ஒப்பிட்டுப் பார்த்து, சம்பந்தப்பட்ட இரண்டு மாதங்களுக்கான மின் நுகர்வைக் கணக்கிட்டு உடனடியாக பில் தயாரித்து வழங்கும்.
6. இந்த மின் கட்டண ரசீது நுகர்வோரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வாட்ஸ்அப் மற்றும் எஸ்.எம்.எஸ். வழியாக உடனடியாக அனுப்பி வைக்கப்படும். வழக்கம்போல கவுண்ட்டர்களிலோ அல்லது ஆன்லைன் வழியிலோ கட்டணத்தைச் செலுத்தலாம்.
முந்தைய கட்டணத்தை விட அசாதாரணமாக அதிக அல்லது குறைந்த வேறுபாடுகள் இருந்தால், மென்பொருள் அதைச் சுட்டிக்காட்டும்; அத்தகைய இணைப்புகளுக்கு மின் கணக்கீட்டாளர்கள் நேரில் வந்து மறு ஆய்வு செய்வார்கள். மேலும், ஒரே நுகர்வோர் சரியான இணைப்பு எண்களைப் பயன்படுத்தி ஒன்றுக்கும் மேற்பட்ட மீட்டர்களின் ரீடிங்கையும் இந்த முறையில் பதிவேற்ற முடியும்.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்தத் திட்டம் தற்போது சோதனை ஓட்டத்தில் உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முதற்கட்டமாக சில குறிப்பிட்ட பகுதிகளில் இந்த வசதி சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் மாதத்திற்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் இந்தச் சுய மதிப்பீட்டு வசதி படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நுகர்வோருக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?
மின் கணக்கீட்டாளர்கள் குறித்த நேரத்தில் வராததால் மின் கணக்கீடு தாமதமாவது, சில நேரங்களில் கூடுதல் நாட்கள் ரீடிங் எடுப்பதால் மின் நுகர்வு அடுத்த கட்டண அடுக்கிற்கு சென்று கட்டணம் கணிசமாக உயர்வது போன்ற புகார்கள் பல பகுதிகளில் நிலவி வருகின்றன. இப்புதிய முறையில், இருமாத சுழற்சி முடிந்த பிறகு நுகர்வோர் இரண்டு நாட்கள் வரை தாங்களாகவே ரீடிங் எடுத்துப் பதிவேற்ற கால அவகாசம் அளிக்கப்படும். இதன் மூலம் தாமதத்தால் மின் கட்டண அடுக்கு மாறி கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சுமை நுகர்வோருக்குத் தவிர்க்கப்படும்.
உண்மையான தீர்வா?
மின் கணக்கீட்டாளர்களின் பற்றாக்குறை, தவறான கணக்கீடுகள் மற்றும் கட்டணக் குளறுபடிகளுக்கு இது ஒரு தற்காலிகத் தீர்வாக அமைந்தாலும், இதற்கு நுகர்வோர் ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்துள்ளது. மின் பயன்பாட்டுக் கட்டணத்திலேயே மின் கணக்கீட்டிற்கான செலவுகளும் நுகர்வோரிடம் இருந்தே வசூலிக்கப்படும் சூழலில், வாரியத்தின் பொறுப்பை 2.5 கோடி நுகர்வோர்கள் மீது திணிப்பது ஏற்புடையதல்ல என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஸ்மார்ட் மீட்டர்கள் முழுமையாகப் பொருத்தப்படுவதற்குப் பல ஆண்டுகள் ஆகும் என்பதால், மின் கட்டணத்தில் ஏற்படும் குளறுபடிகளுக்கு நிரந்தரத் தீர்வாகத் தகுந்த எண்ணிக்கையில் கணக்கீட்டாளர்களைப் பணியமர்த்துவதே முறையான தீர்வாக இருக்கும் என்றும், நுகர்வோருக்கு கூடுதல் பணிச் சுமையை ஏற்படுத்தக் கூடாது என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்