SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

அரசுப் பள்ளிகளில் காலிப் பணியிடங்கள் கணக்கெடுப்பு தொடக்கம்! அரசு லேட்டஸ்ட் அப்டேட்

Tamil Nadu teacher vacancy : தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இது குறித்த முக்கிய அப்டேட்டை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

Written By Karthikeyan Sekar
Published: Oct 06, 2026, 08:16 PM IST | Updated: Oct 06, 2026, 08:23 PM IST
Join

Tamil Nadu teacher vacancy : தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2026 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் மற்றும் மாணவர் விகிதாச்சார அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களைத் தொடக்கக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 (RTE Act) மற்றும் அரசு விதிகளின்படி, பள்ளி மாதாந்திர அறிக்கை மற்றும் எமிஸ் இணையதளத்தில் உள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் எந்தவிதத் தவறும் இன்றி படிவங்கள் 1 முதல் 8 வரை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  

மாணவர் எண்ணிக்கை கணக்கீடு:

EMIS மற்றும் வருகைப் பதிவு: 01.08.2026 அன்றுள்ள பள்ளி வருகைப் பதிவேட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்து, எமிஸ் இணையதளத்தில் பதிவாகியுள்ள மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே படிவங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  

பயிற்றுமொழி வாரியாகப் பிரித்தல்: தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயிலும் மாணவர்களை அந்தந்த வகுப்புகளுக்குத் தனித்தனியாகக் கணக்கிட்டு வகுப்புவாரியாக விவரங்களை அளிக்க வேண்டும்.  

சிறுபான்மை மொழிப் பள்ளிகள்: சிறுபான்மை மொழி, இருமொழி மற்றும் மும்மொழிப் பயிற்றுவிக்கும் பள்ளிகளுக்கு அதற்கெனத் தனித்துவமாக இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் மட்டுமே விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.  

அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள், உபரி பணியிடங்கள் ஆய்வு:

அளவைப் பதிவேடு சரிபார்ப்பு: பள்ளிகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களையும் பள்ளியின் நிகழ்நிலை அளவைப் பதிவேட்டுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்க வேண்டும்.  

சரண் செய்யப்பட்ட பணியிடங்கள்: கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்குச் சரண் செய்யப்பட்ட பணியிடங்களை, எக்காரணம் கொண்டும் மீண்டும் அனுமதிக்கப்பட்ட பணியிடமாகக் கருதிப் பதிவேற்றம் செய்யக் கூடாது.  

உபரி மற்றும் தேவை விவரங்கள்: ஆசிரியருடன் உபரி, ஆசிரியரின்றி உபரி மற்றும் கூடுதல் தேவைப்படும் பணியிடங்கள் ஆகியவை துல்லியமாகக் கணக்கிடப்பட்டுப் பட்டியலிடப்பட வேண்டும்.  

ஆசிரியர்கள் குறித்த விரிவான விவரங்கள்:

தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஆகியவற்றில், சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியருடன் உபரியாக உள்ள பணியிடங்களில் பணிபுரியும் ஆசிரியரின் பெயர், அவர் அப்பள்ளியில் சேர்ந்த நாள் மற்றும் ஓய்வுபெறும் நாள் ஆகியவற்றை எவ்விதத் தவறுமின்றிப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.  

மாணவர் எண்ணிக்கையில் ஏதேனும் சந்தேகம் எழும் பட்சத்தில், வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பள்ளியைப் பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.  

அதிகாரிகளின் பொறுப்பு:

ஒன்றிய அளவில் வட்டாரக் கல்வி அலுவலர்களால் பள்ளிகள் மற்றும் நிர்வாக வாரியாகத் தொகுக்கப்பட்டு கையொப்பமிட்ட பின்னர், சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரால் (தொடக்கக் கல்வி) அவை கூர்ந்தாய்வு செய்யப்பட்டு மேலொப்பமிடப்பட வேண்டும். வருவாய் மாவட்டத்தில் இரண்டு மாவட்டக் கல்வி அலுவலர்கள் உள்ள இடங்களில், தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்குத் தனித்தனியாகப் பணியிட நிர்ணய விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும். சமர்ப்பிக்கப்படும் படிவங்களில் தவறான தகவல்கள் ஏதேனும் இருந்தால் அதற்குச் சம்பந்தப்பட்ட அலுவலர்களே முழுப் பொறுப்பேற்க நேரிடும் என்றும் தொடக்கக் கல்வி இயக்ககம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது. 
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES