SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழகத்தில் வீடு கட்டப் போகிறீர்களா? அரசு வெளியிட்ட சிமெண்ட், செங்கல், கம்பி விலை, ஆள் கூலி முழு விவரம்!

Tamil Nadu House Construction Cost : தமிழ்நாட்டில் கட்டப்படும் வீடுகளின் மதிப்புகளை அரசு எப்படி கணக்கிடும் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில், சிமெண்ட், செங்கல், கம்பி விலை, ஆள் கூலி முழு விவரம் இடம்பெற்றுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Nov 14, 2026, 12:07 PM IST | Updated: Nov 14, 2026, 12:13 PM IST
Image Credit: Tamil Nadu House Construction Cost
Join

Tamil Nadu House Construction Cost : தமிழ்நாட்டில் புதிதாக வீடு கட்டத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், கட்டிடப் பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு மிக முக்கியமான அறிவிப்பாக, தமிழக அரசின் பொதுப்பணித்துறை 2026-2027-ஆம் நிதியாண்டிற்கான புதிய 'செந்தர விலைப்பட்டியலை' அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. நவம்பர் 13, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்தப் புதிய விலைப்பட்டியலில், சிமெண்ட், இரும்புக் கம்பி, செங்கல் உள்ளிட்ட முக்கியக் கட்டுமானப் பொருட்களின் அடிப்படை விலைகள் மற்றும் மேஸ்திரி முதல் உதவியாளர்கள் வரையிலான தொழிலாளர்களின் தினசரி ஊதிய விவரங்கள் மிகத் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  

மேலும் படிக்க | ரேஷன் பொருட்கள் கடத்தல்! முதலமைச்சர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு

செந்தர விலைப்பட்டியல் என்றால் என்ன? 

அரசுத் துறைகள் மேற்கொள்ளும் சாலைகள், பாலங்கள் மற்றும் அரசுக் கட்டிடங்களுக்கான திட்ட மதிப்பீட்டை உருவாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறையால் தயாரிக்கப்படும் அதிகாரப்பூர்வ வழிகாட்டி ஆவணமே செந்தர விலைப்பட்டியல் ஆகும். கட்டுமானப் பொருட்களின் சந்தை நிலவரம், தொழிலாளர்களின் ஊதியம், இயந்திர வாடகை மற்றும் போக்குவரத்துச் செலவினங்களை அடிப்படையாகக் கொண்டு இது வடிவமைக்கப்படுகிறது. இது அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு மட்டுமின்றி, சாதாரண பொதுமக்களின் சொத்து மதிப்பீட்டிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, சொத்துக்களைப் பத்திரப் பதிவு செய்யும்போது பதிவுத்துறையினர் கட்டிடத்தின் மதிப்பைக் கணக்கிட்டு முத்திரைத் தாள் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இந்தப் பட்டியலையே ஆதாரமாகக் கொள்கின்றனர். அதேபோல், வருமானவரித் துறையினர் கட்டிடங்களின் தற்போதைய சந்தை மதிப்பை மதிப்பீடு செய்யவும் இந்தப் பட்டியலையே பயன்படுத்துகின்றனர்.

கட்டுமானப் பொருட்களின் புதிய அடிப்படை விலைகள்

பொதுப்பணித்துறையின் 2026-27-ஆம் ஆண்டிற்கான புதிய விலைப்பட்டியலில், முக்கியக் கட்டுமானப் பொருட்களுக்கான அடிப்படை விலைகள் (Basic Rates) வரி இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கட்டுமானத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் ஒரு மெட்ரிக் டன் (1 MT) சிமெண்ட் விலை ரூ.5,000.00 எனவும், ஒரு மெட்ரிக் டன் இரும்புக் கம்பி விலை ரூ.55,665.00 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செங்கல் வகைகளைப் பொறுத்தவரை, சாதாரண கட்டுமானத்திற்குப் பயன்படும் இரண்டாம் தர மேசை அச்சு செங்கற்கள்1,000 எண்ணிக்கை கொண்ட தொகுப்பு ரூ.7,887 எனவும், பிளை ஆஷ் செங்கற்கள் 1,000 எண்ணிக்கை ரூ.6,595 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், மொட்டை மாடி ஓடுகள் ரூ.989 எனவும், பாரம்பரியக் கட்டிடப் பணிகளுக்கான சிறப்புச் செங்கற்கள் (8x4x2) 1,000 எண்ணிக்கை ரூ.13,365 எனவும் பட்டியலிடப்பட்டுள்ளன.

பாரம்பரியக் கட்டிடப் பொருட்கள்

பழமையான கோயில்கள், அரண்மனைகள் மற்றும் பாரம்பரியச் சின்னங்களைப் புனரமைக்கும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் சிறப்புப் பொருட்களுக்கான விலைகளும் இந்தப் பட்டியலில் தனித்துவமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன்படி, 1,000 பாரம்பரிய மங்களூர் ஓடுகள் (Heritage Mangalore Tiles 10x16) ரூ.44,000 எனவும், பாரம்பரிய வடிவமைப்புத் தரை ஓடுகள் ஒரு சதுர மீட்டர் ரூ.4,520 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மர வேலைப்பாடுகளைப் பொறுத்தவரை, 4 மீட்டர் வரை நீளமுள்ள பதப்படுத்தப்பட்ட தேக்கு மரம் ஒரு கன மீட்டர் ரூ.1,85,200 ஆகவும், 4 முதல் 6 மீட்டர் நீளமுள்ள உயர்தர தேக்கு மரம் ஒரு கன மீட்டர் ரூ.2,97,500 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, சிறப்பு வண்ணப்பூச்சு ஒரு கிலோ ரூ.341 எனவும், நிறமிகள் ஒரு கிலோ ரூ.950 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்களுக்கான தினசரி ஊதிய விவரம்

கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் உயர் தொழில்நுட்பப் பொறியாளர்கள் முதல் உதவியாளர்கள் வரையிலான தினசரி ஊதியத்தை பொதுப்பணித்துறை மிகத் துல்லியமாக வகைப்படுத்தியுள்ளது. உயர் திறன் கொண்ட பிரிவில், பிஇ முடித்த தொழில்நுட்ப உதவியாளர் கிரேடு-1, கணினி ஆபரேட்டர் கிரேடு-1 மற்றும் கட்டிடக்கலை உதவியாளர் கிரேடு-1 ஆகியோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,430.00 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிப்ளமோ முடித்த கிரேடு-2 தொழில்நுட்ப உதவியாளர்களுக்கு ரூ.1,289.00 மற்றும் ஐ.டி.ஐ முடித்த கிரேடு-3 உதவியாளர்களுக்கு ரூ.1,089.00 தினக்கூலியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

திறன்மிக்க தொழிலாளர்கள் பிரிவில், சாதாரண செங்கல் மற்றும் கல் கட்டுமானப் பணிகளுக்கான முதல் தர மேஸ்திரிக்கு (Mason Class-I) நாள் ஒன்றுக்கு ரூ.1,174.00 வழங்கப்படும். பாரம்பரியக் கட்டிடப் பணிகளில் ஈடுபடும் முதல் தர மேஸ்திரிக்கு ரூ.1,657.00, இரண்டாம் தர மேஸ்திரிக்கு ரூ.1,449.00 மற்றும் சிறப்பு ஸ்தபதி மேஸ்திரிக்கு நாள் ஒன்றுக்கு ரூ.2,072.00 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், முதல் தர தச்சருக்கு ரூ.1,148.00, எலக்ட்ரிக்கல் மேஸ்திரிக்கு ரூ.1,113.00, முதல் தர ஃபிட்டருக்கு ரூ.1,036.00, கம்பி வளைப்பவர் (Bar Bending) மற்றும் பிளம்பருக்கு ரூ.1,018.00, முதல் தர எலக்ட்ரீஷியனுக்கு ரூ.971.00, ஓட்டுநருக்கு ரூ.965.00, பெயிண்டருக்கு ரூ.937.00, கொல்லர் மற்றும் மெக்கானிக்கிற்கு ரூ.904.00, வெல்டர் மற்றும் கல் உடைப்பவருக்கு ரூ.900.00, சாதாரண மேஸ்திரி மற்றும் சாலை ஆய்வாளருக்கு ரூ.870.90, லிப்ட் ஆபரேட்டருக்கு ரூ.870.00, கம்ப்ரசர் மற்றும் கல் நொறுக்கி ஆபரேட்டருக்கு ரூ.796.00 தினக்கூலியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஓரளவு திறன் கொண்ட பிரிவில், இரண்டாம் தர தச்சருக்கு ரூ.1,096.00, இரண்டாம் தர ஃபிட்டருக்கு ரூ.1,006.00, உதவியாளர்களுக்கு (Mazdoor) ரூ.714.00 முதல் ரூ.726.00 வரையிலும், தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.603.00 முதல் ரூ.609.00 வரையிலும் தினக்கூலி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

பகுதி வாரியான கூடுதல் சலுகைகள் 

தமிழகத்தின் நகர்ப்புற நெரிசல் மற்றும் மலைப்பகுதிகளின் கடினமான சூழலைக் கருத்தில் கொண்டு, அடிப்படை விலையுடன் கூடுதல் சதவீதத் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பழைய சென்னை மாநகராட்சி எல்லை மற்றும் அதனைச் சுற்றியுள்ள 32 கி.மீ சுற்றளவுப் பகுதிகள், மதுரை மற்றும் கோவை மாநகராட்சி எல்லைகள் மற்றும் ஓசூர் தாலுகா ஆகிய பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்குத் தொழிலாளர் கூலி, வேலை விகிதம் மற்றும் தலைச்சுமைக் கூலியில் 10 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும். திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, தூத்துக்குடி மற்றும் வேலூர் மாநகராட்சிப் பகுதிகளுக்கு 5 சதவீதம் கூடுதல் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது.  

மலைப்பகுதிகளைப் பொறுத்தவரை, நீலகிரி மாவட்டம், வால்பாறை மற்றும் முதுமலை சரணாலயப் பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்குத் தொழிலாளர் கூலி மற்றும் தலைச்சுமைக் கூலியில் 40 சதவீதமும், கட்டுமானப் பொருட்களின் விலையில் 25 சதவீதமும் கூடுதலாக வழங்கப்படும். சிறுவாணி, ஆனைமலை, பர்கூர் உள்ளிட்ட இதர மலைப்பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுக்கு 20 சதவீதம் கூடுதல் தொகையும், காப்புக்காடு பகுதிகளில் நடைபெறும் பணிகளுக்குப் பணியின் தன்மைக்கேற்ப 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரையும் கூடுதல் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விலைகளும் GST மற்றும் இதர வரிகள் சேர்க்கப்படாத அடிப்படை விலைகள் மட்டுமே என்பதும், மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் பாலம் போன்ற முக்கியப் பணிகள் இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டால் தொழிலாளர் கூலியில் 25 சதவீதம் கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என்பதும் பொதுப்பணித்துறையின் சிறப்புக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

ZEENEWS TRENDING STORIES