SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

முதலீட்டாளர்கள் மாநாடு: குமரி முதல் கொங்கு வரை புதிய தொழிற்சாலைகள்.. 66000 பேருக்கு வேலை

Vettri Investors Conclave 2026: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் சென்னையில் நடைபெற்ற 2வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 66,000 வேலைவாய்ப்புகளுக்கான 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

Written By R Balaji
Published: Nov 25, 2026, 16:02 IST | Updated: Nov 25, 2026, 16:09 IST
Join

தமிழ்நாட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல தவெக அரசு அவர்களின் 6 மாத கால ஆட்சியில் இரண்டாவது முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி உள்ளனர். சென்னையில் இன்று (நவம்பர் 25) புதன்கிழமை நடைபெற்ற 2வது முதலீட்டாளர்கள் மாநாட்டில் 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கையெழுத்தான இந்த ஒப்பந்தங்களின் மதிப்பீடு சுமார் ரூ. 58,214 கோடி ஆகும். இதன் மூலம் மாநில முழுவதும் சுமார் 66 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பது மட்டுமின்றி, ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிறுவனங்களின் திட்டங்களை விரைவாக செயல்படுத்தி உற்பத்தியை தொடங்குவதற்கும் அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய அரசின் கீழ் தமிழகத்திற்கு கிடைத்துள்ள ஒட்டுமொத்த முதலீட்டு உறுதிமொழிகளின் மதிப்பு ரூ. 1.73 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

அதிக முதலீடு செய்யும் முன்னணி நிறுவனங்கள்

இந்த மாநாட்டில் பசுமை எரிசக்தி, வாகன உற்பத்தி, விண்வெளி தொழில்நுட்பம், கப்பல் கட்டுமானம், ஜவுளி மற்றும் மின்னணு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.

இதில் சி.எஸ்.இ டெவலப்மென்ட் இந்தியா நிறுவனம் ரூ. 8,140 கோடி முதலீடு செய்து 2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க உள்ளது. ஜே.எம். பாக்ஸி நிறுவனம் ரூ. 5,200 கோடி முதலீட்டில் 7,500 வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல் அவிக்னா நிறுவனம் ரூ. 5,000 கோடியும், கிரீன்பேஸ் நிறுவனம் ரூ. 2,650 கோடியும், இ.எஸ்.ஆர் நிறுவனம் ரூ. 1,500 கோடியும் முதலீடு செய்ய உள்ளன.

வாகன உற்பத்தி துறையில் டி.வி.எஸ் மோட்டார்ஸ் ரூ. 2,000 கோடியும், பிரேசிலை சேர்ந்த வெக் நிறுவனம் ரூ. 2,000 கோடியும், அப்பல்லோ டயர்ஸ் ரூ. 1,100 கோடியும் முதலீடு செய்ய உள்ளன. ஈச்சர் மோட்டார்ஸ் மற்றும் தூத் ஆட்டோமோட்டிவ் நிறுவனங்கள் தலா ரூ. 1,000 கோடி முதலீடு செய்ய உள்ளன.

இதுதவிர, சன்மார் குழுமம் கப்பல் கட்டுமானத் துறையில் ரூ. 1,950 கோடியும், டைட்டன் நிறுவனம் மின்னணு உற்பத்தி துறையில் ரூ. 1,500 கோடியும், டான்பாக் நிறுவனம் ரூ. 1,000 கோடியும் முதலீடு செய்ய ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

மாவட்ட வாரியாக உருவாகும் புதிய தொழில் வாய்ப்புகள்!

இந்த முதலீட்டாளர் மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்று, தொழில் வளர்ச்சியை சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுடன் மட்டும் நிறுத்தாமல் பிற மாவட்டங்களுக்கு கவனம் செலுத்தி உள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் தொழில் துறையில் பின்தங்கிய பகுதிகளில் புதிய நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளன.

தென் மாவட்டங்களுக்கு முக்கியத்துவம்

தூத்துக்குடி: தென் தமிழகத்தின் முக்கிய தொழில் மையமாக உருவெடுத்து வரும் தூத்துக்குடியில் சன்மார் குழுமத்தின் கப்பல் கட்டுமானத் திட்டம் அமைய உள்ளது. மேலும், ஓம்ஸ்பேஸ், ஹாத்தோர், அபியோம், ஸ்பேஸ் ஜோன் உள்ளிட்ட விண்வெளி மற்றும் ராக்கெட் தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த முதலீடு செய்ய உள்ளன.

சிவகங்கை: இந்த மாவட்டத்தில் ஜே.கே. ஃபென்னர் நிறுவனம் ரூ. 900 கோடியும், பாலினெக்ஸ் ரூ. 500 கோடியும், சாக்ரோட்டர் டெக் ரூ. 500 கோடியும் முதலீடு செய்ய உள்ளன. மேலும், பிக் பேங் பூம் நிறுவனம் சென்னை மற்றும் காரைக்குடியில் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு மற்றும் விண்வெளி உபகரண உற்பத்தித் துறையில் புதிய வாய்ப்புகள் உருவாகலாம்.

விருதுநகர்: இம்மாவட்டத்தில் இமாமி அக்ரோடெக் ரூ. 1,380 கோடியும், ஜி.எச்.சி.எல் நிறுவனம் ரூ. 530 கோடியும் முதலீடு செய்ய உள்ளன. இதன் மூலம் 4000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வட மாவட்டங்கள்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு: கிரீன்பேஸ், ஈச்சர் மோட்டார்ஸ், மஹிந்திரா, ஹ்வாஷின் மற்றும் நோக்கியா ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட நிறுவனங்கள் இப்பகுதிகளில் முதலீடு செய்ய உள்ளன.

கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர்: டி.வி.எஸ், டைட்டன், தூத் ஆட்டோமோட்டிவ், அசென்ட் சர்க்யூட்ஸ், மிண்டா கார்ப்பரேஷன், போஸ்கோ உள்ளிட்ட நிறுவனங்களின் முதலீடுகளால் இந்த பகுதிகளில் தொழில் வளர்ச்சி அதிகரிக்க வாய்ப்புள்ளது.

கொங்கு மண்டலம் மற்றும் இதர மாவட்டங்கள்

கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கே.பி.ஆர் மில், எஸ்.சி.எம் கார்மென்ட்ஸ், எனெஸ் டெக்ஸ்டைல்ஸ், ரெஃபெக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளன. குறிப்பாக எல்.சி.எம் கார்மென்ட்ஸ் நிறுவனம் மூலம் 5000 வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன. இதுதவிர, ராணிப்பேட்டையில் அப்பல்லோ டயர்ஸ், கடலூரில் டான்பாக், திருவள்ளூரில் சுபம் பேப்பர்ஸ் மற்றும் சுமதுரா பூங்கா திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளன.

தமிழகத்தின் பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்படுமா?

இந்த முதலீடுகள் அனைத்தும் திட்டமிட்டபடி செயல்பாட்டுக்கு வந்தால் தமிழகத்தின் வேலைவாய்ப்பு சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக காரைக்குடி, தர்மபுரி, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் புதிய தொழிற்சாலைகள் உருவாவதால் அந்தந்தப் பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு உள்ளூரிலேயே வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

மேலும், தொழிற்சாலைகளின் வருகையால் அவற்றை சார்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கலாம். போக்குவரத்து, கட்டமைப்பு வசதிகள், உள்ளூர் வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் வளர்ச்சி பெறும் சூழல் உருவாகும்.

இதன் மூலம் வேலைவாய்ப்புக்காக்ல வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் செல்ல வேண்டிய நிலை குறைவதுடன், மாவட்டங்களுக்கு இடையிலான தொழில் வளர்ச்சியில் உள்ள இடைவெளியையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் எப்போது செயல்பாட்டுக்கு வருகின்றன என்பதும் அறிவிக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் எந்த அளவுக்கு உருவாகின்றன என்பதும் முக்கியமானதாக இருக்கும். 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

ZEENEWS TRENDING STORIES