SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

புறம்போக்கில் வீடா? NOC இல்லாமல் கனெக்ஷன்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு Explained

Tamil Nadu Government : புறம்போக்கு நில வீடுகளுக்கு தடையில்லா சான்றிதழ் இன்றி மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக தமிழக அரசின் விரிவான வழிகாட்டுதல்கள் மற்றும் விளக்கக் கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

Written By Karthikeyan Sekar
Published: Oct 19, 2026, 06:55 AM IST | Updated: Oct 19, 2026, 07:03 AM IST
Join

Tamil Nadu Government : தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் சிறிய வீடுகள் மற்றும் குடிசைகள் அமைத்து வசிக்கும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்துவந்தது மின் இணைப்பு வசதி. நில உரிமை அல்லது பட்டா இல்லாத காரணத்தால், அரசு அதிகாரிகளிடம் இருந்து 'தடையில்லா சான்றிதழ்' பெறுவது மிகவும் கடினமாக இருந்தது.  

இதனைப் போக்கும் வகையில், தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் அதைத் தொடர்ந்து தமிழ்நாடு பவர் டிஸ்ட்ரிபியூஷன் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்ட செயல்முறை உத்தரவின்படி குறிப்பிட்ட வகை புறம்போக்கு நிலங்களில் உள்ள 250 சதுர அடிக்கு மிகாத வீடுகளுக்கு NOC இல்லாமலேயே வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்

பரப்பளவு வரம்பு: புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்ட வீட்டின் பரப்பளவு 250 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.  

தடையில்லா சான்றிதழ் தேவையில்லை: வருவாய்த்துறை அல்லது பிற அரசு அதிகாரிகளிடம் இருந்து NOC பெற வேண்டிய கட்டாயம் இனி கிடையாது.  

புதிய மின்கட்டணப் பிரிவு: இதற்காக தனியாக Low Tension Tariff IA (3) - Poromboke என்ற புதிய வகைப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.  

சாதாரண வீட்டுக் கட்டணமே வசூல்: புதிய பிரிவு ஒதுக்கப்பட்டாலும், இதற்கான மின் கட்டணம் தற்போதைய சாதாரண வீட்டு மின் இணைப்பிற்குரிய (LT Tariff IA - Domestic) அதே கட்டண விகிதத்திலேயே வசூலிக்கப்படும். இதற்கேற்ப TNPDCL பில்லிங் மென்பொருளிலும் (LT Billing Software) மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  

யாருக்கெல்லாம் இந்த மின் இணைப்பு கிடைக்காது?

அரசின் வருவாய்த்துறை ஆவணங்களின்படி, அதிகாரப்பூர்வ ‘தமிழ் நிலம்’ (Tamil Nilam) இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பின்வரும் 7 வகையான தடைசெய்யப்பட்ட புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள வீடுகளுக்கு இந்த சலுகை பொருந்தாது:  

1. நீர்நிலை புறம்போக்கு நிலங்கள்: குளம், குட்டை, ஏரி, ஆறு, கால்வாய் மற்றும் நீர்வழிப்பாதைகள்.  

2. மேய்க்கால் நிலங்கள்: மேய்க்கால் புறம்போக்கு.  

3. பொதுப் பயன்பாட்டு நிலங்கள்: மந்தைவெளி, மேய்ச்சல் தரை மற்றும் மயான தரை.  

4. வனத்துறை நிலங்கள்: காப்புக்காடு என அறிவிக்கப்படாத வனத்துறை புறம்போக்கு நிலங்கள் உட்பட.  

5. கன்டோன்மென்ட் பகுதிகள்: ராணுவத்திற்குரிய கன்டோன்மென்ட் இடங்கள்.  

6. மத்திய அரசு, ரயில்வே நிலங்கள்: ரயில்வே மற்றும் ஒன்றிய அரசுக்குச் சொந்தமான நிலங்கள்.  

7. மத நிறுவன நிலங்கள்: கோயில், தேவாலயம், மசூதி உள்ளிட்ட அனைத்து மத நிறுவனங்களின் பெயரிலுள்ள பட்டா நிலங்கள் மற்றும் கோயில் புறம்போக்கு நிலங்கள்.  

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 7 வகை நிலங்கள் தவிர்த்து, ஆவணங்களில் ஆட்சேபனையற்ற வகையில் உள்ள பிற வகை புறம்போக்கு நிலங்களில் உள்ள வீடுகளுக்கு மட்டுமே இந்த மின் இணைப்பு வழங்கப்படும்.  

புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்ப நடைமுறைகள்

விண்ணப்பதாரர்கள் புதிய மின் இணைப்பு பெற கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:

விண்ணப்பப் படிவம் - தமிழ்நாடு மின்பகிர்மான விதிகளின்படி உள்ள FORM-I விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.  

முத்திரைத்தாளில் உறுதிமொழி - விண்ணப்பதாரர் நீதிமன்ற சாரா முத்திரைத்தாளில் கீழ்க்கண்ட 3 முக்கிய அம்சங்களைக் கொண்ட உறுதிமொழியை அளிக்க வேண்டும்:  

1. அரசுக்கு எப்போது நிலம் தேவைப்பட்டாலும் அல்லது எதிர்காலத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால், வீட்டை காலி செய்வதற்கும் மின் இணைப்பைத் துண்டிப்பதற்கும் சம்மதிக்கிறேன்.  

2. இந்த மின் இணைப்பு வழங்கப்படுவதால், அந்த நிலத்தின் மீது எனக்கு எந்தவிதமான உரிமையோ, பட்டாவோ அல்லது முழு உரிமையோ கிடைக்காது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.  

3. எனது வீடு தடைசெய்யப்பட்ட 7 வகையான புறம்போக்கு நிலங்களில் (நீர்நிலை, மேய்க்கால், வனத்துறை, ரயில்வே, கோயில் போன்றவை) அமையவில்லை என உறுதியளிக்கிறேன்.  

நஷ்டஈட்டுப் பத்திரம் - தமிழ்நாடு மின்பகிர்மான விதிகளின் இணைப்பு-III-ல் உள்ள FORM-6 நஷ்டஈட்டுப் பத்திரத்தை (Indemnity Bond) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.  

பாதுகாப்புக் கட்டணம் - சாதாரண வீடுகளுக்கு வசூலிக்கப்படும் பாதுகாப்பு வைப்புத்தொகையை விட இரண்டு மடங்கு (Twice the normal rate) கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதர நடைமுறைக் கட்டணங்கள் விதிகளின்படி வழக்கம்போல் வசூலிக்கப்படும்.  

அதிகாரிகளின் சரிபார்ப்பு நடைமுறை

நில வகை சரிபார்ப்பு:

விண்ணப்பம் பெறப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட மின்வாரிய உதவிப் பொறியாளர்/பிரிவு அலுவலர் (Section Officer), வருவாய்த்துறை கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் இருந்து, அந்த நிலம் ‘தமிழ் நிலம்’ போர்ட்டலின்படி தடை செய்யப்பட்ட பிரிவில் வரவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.  

இணையதள இணைப்பு: தற்போது தமிழ்நாடு மின்வாரிய போர்ட்டலும், வருவாய்த்துறையின் ‘தமிழ் நிலம்’ இணையதளமும் API தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்த இணையதள இணைப்பு முழுமையாகச் செயல்படும் வரை, பிரிவு அலுவலர்கள் நேரடியாக வருவாய்த்துறை மூலம் சரிபார்த்து இணைப்புகளை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

கண்காணிப்பு மற்றும் காலாண்டு அறிக்கை சமர்ப்பித்தல்

அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களும் ங்கள் பகுதி வாரியாக (வட்டம் மற்றும் மாவட்டம் வாரியாக) பெறப்பட்ட விண்ணப்பங்கள், வழங்கப்பட்ட இணைப்புகள் மற்றும் நிலுவையில் உள்ளவை குறித்த விரிவான அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்.  

இந்த அறிக்கையை ஒவ்வொரு காலாண்டிலும் அடுத்த காலாண்டின் 5-ஆம் தேதிக்குள் முதன்மை தலைமைப் பொறியாளர்/வணிகப் பிரிவு அவர்களுக்குத் தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.  

அடிப்படை உரிமையான மின்சாரம் கிடைக்காமல் இருளில் தவித்து வந்த ஏழை எளிய குடும்பங்களுக்கு இந்த உத்தரவு மிகப்பெரிய நிவாரணத்தை வழங்கியுள்ளது. அதே சமயம், அரசு நில ஆக்கிரமிப்பு மற்றும் நீர்நிலைப் பகுதிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் கடுமையான நிபந்தனைகளுடனும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.  

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES