உங்க வீட்டில் முதியோர் இருக்காங்களா? தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள சூப்பர் அப்டேட்
Tamil Nadu Senior Citizen Health Insurance : தமிழகத்தில் மூத்த குடிமக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவது தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Tamil Nadu Senior Citizen Health Insurance : தமிழ்நாட்டில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு எவ்வித வருமான உச்ச வரம்பும் இன்றி, கட்டணமில்லா மருத்துவ சிகிச்சைகள் வழங்கும் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. 2026-2027 சட்டமன்றக் கூட்டத்தொடரில் சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பிற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வகையில், தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணையை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க | திருச்சி மக்களே! உங்களுக்கான பொன்னான வாய்ப்பு - மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு
முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம் யாருக்கெல்லாம் கிடைக்கும்?
மத்திய அரசின் 'ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா' திட்டத்தின் பலன்களை 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும், அவர்களின் சமூகப் பொருளாதார நிலையைப் பார்க்காமல் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஏற்கனவே ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்களில் உள்ள முதியவர்கள் மட்டுமல்லாமல், இதுவரை எந்தக் காப்பீட்டுத் திட்டத்திலும் இல்லாத புதிய குடும்பங்களைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த இலவச மருத்துவக் காப்பீடு பொருந்தும்.
இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்?
தேசிய சுகாதார ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி, இந்தத் திட்டம் Hybrid முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, ஏற்கனவே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு Assurance முறையிலும், புதிதாக இத்திட்டத்தில் இணையும் பயனாளிகளுக்கு Insurance முறையிலும் சிகிச்சைகள் வழங்கப்படும்.
திட்டத்தில் எங்கே, எப்படிப் பதிவு செய்வது?
முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டத்தில் சேர விரும்பும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், தங்கள் அருகிலுள்ள இசேவை மையங்கள் மூலமாகவோ அல்லது தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம் ஏற்பாடு செய்யும் பிற அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் மூலமாகவோ எளிதாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
காப்பீட்டு பிரீமியம் தொகை எவ்வளவு? யார் செலுத்துவார்கள்?
இந்தத் திட்டத்தில் புதிதாக இணையும் 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் குடும்பங்களுக்கு, ஒரு குடும்பத்திற்கு ரூ.849 என்ற விகிதத்தில் பிரீமியம் தொகையை தமிழக அரசே 'யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்' நிறுவனத்திற்கு செலுத்தும். எனவே, பொதுமக்கள் இதற்காக ஒரு ரூபாய் கூடச் செலுத்த வேண்டியதில்லை. இந்த பிரீமியம் தொகை தற்போதைய ஒப்பந்தக் காலத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும், 2027-ஆம் ஆண்டில் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்போது இதில் மாற்றம் இருக்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்னென்ன சிகிச்சைகள் கிடைக்கும்? முக்கிய நிபந்தனை என்ன?
தற்போது நடைமுறையில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவ சிகிச்சைத் தொகுப்புகளும் இந்த முதியோர் காப்பீட்டுத் திட்டத்திற்கும் பொருந்தும்.
முக்கிய நிபந்தனை: ஒரே நபர் இரண்டு வெவ்வேறு அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் பலன் பெறுவதைத் தவிர்க்கும் வகையில், பதிவு செய்வதற்கு முன்பு பயனாளிகளின் விவரங்கள் முறையாகச் சரிபார்க்கப்படும். ஏற்கனவே உள்ள காப்பீட்டுத் திட்டங்களில் பெயர் விடுபடாமல் அல்லது இரட்டிப்பாகாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்ட இயக்குநருக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
குடும்பங்களுக்கு இதனால் என்ன நன்மை?
முதுமைக் காலத்தில் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகள், அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவமனைச் செலவுகள் நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்குப் பெரும் பொருளாதாரச் சுமையாக உள்ளன. தற்போது வருமான வரம்பின்றி 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டணமில்லா மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவதால், வீட்டில் உள்ள வயதான பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிகளுக்குத் தரமான மருத்துவ சிகிச்சையைக் கட்டணமின்றிப் பெற முடியும்.
மேலும் படிக்க | இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜாக்பாட்: அடிப்படைச் சம்பளம் ரூ.88,000 வரை உயர்வு