SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

தமிழகத்தின் இந்த 3 பகுதிகளில் நிலச்சரிவு அபாயம்.. வெதர்மேன் எச்சரிக்கை!

தமிழகத்தில் உள்ள சில மலைப்பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இதனால் நிலச்சரிவு மற்றும் மலைச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Written By R Balaji
Published: Oct 24, 2026, 09:42 AM IST | Updated: Oct 24, 2026, 09:46 AM IST
Join

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல், வால்பாறை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதை நாம் செய்திகளில் பார்த்திருப்போம். கொடைக்கானல் வெள்ளி அருவியிலும் நீர் பெருக்கெடுத்து ஓடும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில், கொடைக்கானல், குன்னூர், மாஞ்சோலை பகுதிகளில் அடுத்த சில நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், இதனால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரளாவுக்கு அருகே அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் சூழலில், அதற்கு சாதகமான வானிலை நிலவினால் தமிழகத்தின் சில மலைப்பகுதிகளில் மிக கனமழை பெய்யக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, பள்ளத்தாக்குகள் வழியாக மழைநீர் வெளியேறும் அமைப்பை கொண்ட மலைப்பகுதிகளில் அதிக கவனம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எந்தெந்த மலைப்பகுதிகளுக்கு எச்சரிக்கை?

தமிழ்நாடு வெதர்மேன் தனது எக்ஸ் தளப் பதிவில், கனமழை மற்றும் நிலச்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளாக மூன்று இடங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

1. குன்னூர் மற்றும் நீலகிரி மலைப்பகுதிகள்: நீலகிரி மாவட்டத்தின் குன்னூர் மற்றும் அதை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் கனமழை பெய்தால் மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

2. கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்யும் பட்சத்தில், மலைச்சரிவுகள் மற்றும் நிலச்சரிவு தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

3. மாஞ்சோலை மலைப்பகுதி: திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள மாஞ்சோலை மலைப்பகுதியிலும் கனமழை பெய்யக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்தல்

மேற்கண்ட மலைப்பகுதிகளில் மழை தீவிரமடைந்தால் நிலச்சரிவு மற்றும் மலைச்சரிவு போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, கனமழை தொடரும் சூழலில் செவ்வாய்க்கிழமை வரை இந்த பகுதிகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.

மலைப்பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடுபவர்கள் வானிலை நிலவரம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும். மழை அதிகரிக்கும் நேரங்களில் மலைப்பாதைகளில் பயணம் செய்வதை தவிர்ப்பதும் பாதுகாப்பானது.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES