TN Weather: மழைக்கு லீவ்! நவம்பர் 1 வரை வறண்ட வானிலை.. தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்
Tamil Nadu Weather Latest Update: வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி தெற்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் மழையின் தாக்கம் குறைந்து, நாளை முதல் நவம்பர் 1 வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில், நாளை முதல் மாநிலம் முழுவதும் மழையின் தாக்கம் கணிசமாக குறைந்து வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த பகுதி தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதால், சென்னையில் எதிர்பார்க்கப்பட்ட மழை கிடைக்காமல் போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகும் மழை
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இருப்பினும், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலியின் சில பகுதிகள், கடலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருந்தாலும், மாலை நேரத்தில் இருந்து மழையின் தீவிரம் படிப்படியாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வடக்கு இலங்கையில் இன்று மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு ஏமாற்றம்.. தெற்கு நோக்கி நகர்ந்த காற்றழுத்த பகுதி!
முன்னதாக, சென்னை - புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு அருகே குறைந்த காற்றழுத்தப் பகுதி நிலைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், இந்த காற்றழுத்த பகுதி தெற்கு நோக்கி நகர்ந்து டெல்டா மாவட்டங்கள் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளுக்கு அருகே சென்றுள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, டெல்டா மற்றும் இலங்கையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும் சூழல் உருவாகியுள்ள நிலையில், சென்னையில் எதிர்பார்க்கபப்ட்ட மழை கிடைக்காமல் போயுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 1 வரை வறண்ட வானிலை
தமிழகத்தில் நாளை மதியத்தில் இருந்து மழையின் தாக்கம் முற்றிலுமாக குறைந்து, மாநிலம் முழுவதும் வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அர்னாப் கிழக்கு திசையில் இருந்து வீசும் காற்றை தன்னுடன் இழுத்து செல்லும் சூழலில், தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு குறையக்கூடும் என அவர் விளக்கி உள்ளார்.
இதனால் நாளை முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அவரது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக தொடந்து மழை பெய்து வரும் நிலையில், நாளை முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலக்கூடும் என்ற தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானின் இந்த முன்னறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.