திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவதில் என்ன சர்ச்சை? 100 ஆண்டுகால நிலப் பிரச்சினையின் பின்னணி என்ன?
Thiruparankundram Issue Explainer: மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீப்பத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவி எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், நவம்பர் 24 ஆம் தேதி தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதற்கிடையே தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. இதனால் திருப்பரங்குன்றத்தில் பாதுகாப்பௌ பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணி என்ன? 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் நில உரிமை பிரச்சினை என்ன? நீதிமன்றங்கள் பிறப்பித்த உத்தரவுகள் என்ன? என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
மதுரையில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடாக கருதப்படுகிறது. இங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இந்துக்களின் முக்கியமான வழிபாட்டு தலமாக விளங்குகிறது.
இதே மலையின் உச்சிப் பகுதியில் இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தலமான சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. ஒரே மலையில் இரு மத வழிபாட்டு தலங்கள் அமைந்துள்ளதால், நில உரிமை, வழித்தடம் மற்றும் மத சடங்குகள் தொடர்பாக அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் எழுந்து வருகின்றன.
தீபத்தூண் சர்ச்சையும் இரு தரப்பு வாதங்களும்
மலை உச்சியில் உள்ள கல் தூண் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டது என்றும், கோயில் நிர்வாகம் அங்கு தீபம் ஏற்ற் வேண்டும் இந்து பக்தர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே உள்ள தீப மண்டப்பத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவதுதான் காலம் காலமாக பின்பற்றப்படும் மரபு என்றும், சர்ச்சைக்குறிய தூணில் தீபம் ஏற்றும் வழக்கம் இதற்கு முன் இருந்ததில்லை என்றும் தமிழக அரசும், தர்கா நிர்வாகமும் வாதிட்டு வருகின்றன.
நூற்றாண்டு கால சட்ட போராட்டத்தின் வரலாறு
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான சட்டப் போராட்டம் 1920 ஆம் ஆண்டு தொடங்கியது. முழு மலையும் கோயிலுக்கு சொந்தமானது எனக் கோயில் நிர்வாகம் தொடர்ந்த உரிமையியல் வழக்கில், 1923ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், மலையின் பெரும்பகுதி மற்றும் பக்தர்கள் செல்லும் பாதையை கோயிலுக்கும்; மலையின் உச்சிப் பகுதி, தர்கா அமைந்துள்ள இடம், நெல்லித்தோப்பு மற்றும் தர்கா படிக்கட்டுகளை இஸ்லாமியர்களுக்கும் பிரித்து கொடுத்தது. தொடர்ந்து, 1994-ல் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கில், 1996-ல் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்ற உத்தரவிட்டது. அதன்படி தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது.
2025-ல் மீண்டும் வெடித்த சர்ச்சை
கடந்த 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் தர்கா சந்தனக்கூடு விழாவின் போது விலங்குகளை பலியிடுவது தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், இந்திய தொல்லியல் துறை விதிகளின்படி மலையில் விலங்குகளை பலியிடவும், அசைவ உணவு கொண்டு செல்லவும் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனைத் தொடர்ந்து, நவம்பர் 2025-ல் ராம ரவிக்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில், உச்சிப்பிள்ளையார் கோயிலுடன் சேர்த்து தீபத்தூணிலும் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் டிசம்பர் 1 ஆம் தேதி உத்தரவிட்டார். சட்டம்-ஒழுங்கு காரணங்களால் கடந்த ஆண்டு அது செயல்படுத்தப்படாத நிலையில், ஜனவரி 6, 2026 அன்று உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது. தூணில் எண்ணெய் மற்றும் திரி வைப்பதற்கான குழி செதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பொதுமக்கள் அனுமதியின்றி குறிப்பிட்ட நபர்கள் மட்டும் சென்று தீபம் ஏற்றலாம் என தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி
உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில், நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி அமர்வு நவம்பர் 24 ஆம் தேதி ஒருமுறை மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. அதன்படி, கோயில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மிகக் குறைந்த நபர்கள் மட்டுமே மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் தொல்லியல் துறை கண்காணிப்பில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், பொதுமக்கள் உடன் செல்லவோ, ஊர்வலம் நடத்தவோ முழு தடை விதித்த உச்ச நீதிமன்றம், இந்த தற்காலிக அனுமதி அந்த தூணின் மீதான உரிமையையோ அல்லது நிரந்தர வழக்கத்தையோ உறுதிப்படுத்தாது என்றும் தெளிவுபடுத்தியது.
அரசியல் களத்தில் வெடித்துள்ள விவாதம்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, உச்ச நீதிமன்ற உத்தரவை எதிர்த்து நவம்பர் 21-ஆம் தேதி சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. வழக்கமான இடமான தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றுவதுதான் மத நல்லிணக்கத்தை பாதுகாக்கும் என்றும், கோயில் சடங்குகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் கோயில் நிர்வாகத்திற்கே உள்ளது என்றும் அரசு வாதிட்டுள்ளது.
இதனிடையே, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், நீதிமன்ற உத்தரவை விஜய் அரசு செயல்படுத்த போகிறதா அல்லது மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் விமர்சனத்தை தவிர்க்க தடுத்து நிறுத்தப் போகிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் அரசின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசு இந்து விரோத போக்கை கடைப்பிடிப்பதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய கள நிலவரம் என்ன?
கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவம்பர் 24), திருப்பரங்குன்றம் மலையை சுற்றி சுமார் 5,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்புகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் மலை உச்சிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன, அதற்குள் தற்காலிக உத்தரவை அரசு செயல்படுத்துமா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த தூணின் வரலாறு மற்றும் உரிமை குறித்த வழக்கு 2027 ஜனவரியில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.