தூத்துக்குடி: தாய் கொலை.. 2 சிறுமிகள் கடத்தப்பட்டது ஏன்? நள்ளிரவு 1 மணிக்கு நடந்தது என்ன?
Thoothukudi Murder: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் இருமகள்களை கடத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Thoothukudi Murder: தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பெண் உயிரிழந்துள்ளார். மேலும், கணவன் மற்றும் மகன் இருவரும் படுகாயமடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளத்தில் பெண் வீடு புகுந்து கொலை
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன். இவரது மனைவி மேரி ரெஜிலா. இந்த தம்பதியினருக்கு பிளஸ்ஸி, பிரின்ஸா பாப்பா, பிளஸெட் ராஜா ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இன்று அதிகாலை இவர்களது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், குடும்பத்தினரைச் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகன் பிளஸெட் ராஜா ஆகியோர் பலத்த காயமடைந்தனர். வீடு புகுந்து தாக்குதல் நடத்திய நபர் வீட்டிலிருந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் இரண்டு மகள்களை கடத்தி தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த முத்துக்கிருஷ்ணன் மற்றும் மகன் பிளஸெட் ராஜா ஆகியோரை சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அரசு மருத்துவமனைக்கு போலீசார் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: புழல் சிறையிலிருந்து 2 கைதிகள் எஸ்கேப்! போலீஸார் 7 பேர் சஸ்பெண்ட்..பின்னணி என்ன?
கடத்தப்பட்ட சிறுமிகள் மீட்பு
அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து குடும்பத்தினரை சராமாரியாக தாக்கி பெண்ணை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு புகுந்து தாக்குதல் நடத்திய நபர் வீட்டிலிருந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் இரண்டு மகள்களை கடத்தி சென்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது காவல்துறையினர் இரண்டு சிறுமிகளை மீட்டனர். ஆனந்தபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வரும் பழங்குளத்தை சேர்ந்த ஞான பிரகாஷ் (22) என்பவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளையும் மீட்டனர்.
சிறுமிகளை கடத்திச் சென்ற ஞானபிரகாஷ் என்பவரின் தாயையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும், பெண்ணை படுகொலை செய்த வழக்கில் குற்றவாளி ஞானபிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் ஒட்டுமொத்த தூத்துக்குடி மாவட்டத்தையும் உலுக்கி உள்ளது.
தூத்துக்குடி எஸ்பி விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி எஸ்பி கூறுகையில், "தட்டார்மடம் அருகே முதலூர் கிராமத்தில் இன்று (அக்டோபர் 23) 1 மணியளவில் மேரி ரெஜிலா - முத்துக்கிருஷ்ணன் என்பவரின் வீட்டிற்குள் ஞானபிரகாஷ் என்ற நபர் இரண்டு பேருடன் வீட்டிற்குள் புகுந்து அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். கத்தியால் தாக்கப்பட்டதில் மேரி ரெஜிலா உயிரிழந்தார். மேலும், முத்துக்கிருஷ்ணன் அவரது மகன் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், இரு மகள்களையும் அந்த கும்பல் கடத்தியது.
இரு சிறுமிகளை அவரது வீட்டிலேயே போலீசார் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த கொலைக்கான பின்னணியை பொறுத்தவரை, முத்துக்கிருஷ்ணனின் மூத்த மகளுக்கும் கைதானவருக்கும் கடந்த சில நாட்களாக பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனை பெற்றோர் முத்துக்கிருஷ்ணன் - மேரி ரெஜிலா கண்டித்த நிலையில், சிறுமி அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால், ஆத்திரத்தில் சிறுமியின் தாய், தந்தை, அண்ணனை வெட்டி, இரு சிறுமிகளையும் கடத்தியுள்ளனர்” என்றார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் வாக்குமூலத்தை பெற்று, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இரண்டு பேரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: செஞ்சி: சிறுமி காணாமல் போன முன்பு நடந்தது என்ன? கடைசி வீடியோ இதுதான்!