'அண்ணன் சீர்' திட்டம்: விண்ணப்பிப்பது எப்படி? தகுதிகள், முழு விவரங்களை வெளியிட்ட தமிழக அரசு
Annan Seer scheme : அண்ணன் சீர் திட்டத்தில் தகுதிகள், யார் விண்ணப்பிக்கலாம், எப்போது முதல் விண்ணப்பிக்கலாம் என்ற முழு விவரங்களை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.
Annan Seer scheme : தமிழக அரசின் 'அண்ணன் சீர்' திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை சமூக நலத்துறை வெளியிட்டுள்ளது. இதில் விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை மற்றும் செயல்முறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி! துறைத் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் பணி நீக்கம்
திட்டத்திற்கான தகுதிகள் என்ன?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மணப்பெண், திருமணத்தின் போது சட்டப்படியான குறைந்தபட்ச வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும், பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் செயல்பாட்டில் உள்ள குடும்ப அட்டையில் மணப்பெண்ணின் பெயர் இடம்பெற்றிருப்பது அவசியம். பொருளாதாரத் தகுதியைப் பொறுத்தவரை, மணப்பெண்ணின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியாது?
ரூ.2.5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி வருமான வரி அல்லது தொழில் வரி செலுத்துவோர், சொந்தப் பயன்பாட்டிற்கு நான்கு சக்கர வாகனம் வைத்திருப்போர், 5 ஏக்கருக்கு மேல் நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு மேல் புன்செய் நிலம் வைத்திருப்போர் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது. அதேபோல், ஆண்டுக்கு 3,600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோர், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள், மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தவிர்த்து) மற்றும் ரூ.50 லட்சத்திற்கு மேல் விற்பனை செய்து ஜிஎஸ்டி (GST) செலுத்தும் நிறுவனத்தினர் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களும் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள். பிற அரசுத் துறைகள் மூலம் ஏற்கனவே திருமண நிதியுதவி பெற்றவர்களும் இத்திட்டத்தில் இணைய முடியாது.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கால அவகாசம்
வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் அரசு இ-சேவை மையம் மூலமாகவோ அல்லது [http://www.tnesevai.tn.gov.in](http://www.tnesevai.tn.gov.in) என்ற இணையதளம் வழியாகவோ விண்ணப்பிக்கலாம். பயனாளிகள் தங்களது திருமணத் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பிருந்து, திருமண நாள் வரை விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். 05.10.2026 முதல் 15.01.2027 வரை நடைபெறும் திருமணங்களுக்கு, 15.01.2027 வரை விண்ணப்பிக்க சிறப்புக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை மற்றும் மேல்முறையீடு
விண்ணப்பதாரர் தனது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண்ணைச் சமர்ப்பித்தவுடன், மென்பொருள் மூலம் தானியங்கி முறையில் தகுதிகள் சரிபார்க்கப்படும். தகுதியுடையவராக இருப்பின், திருமணப் பத்திரிகையைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ந்து, தகுதிபெற்ற விண்ணப்பங்களுக்கு தனித்துவ அடையாள எண் உருவாக்கப்பட்டு, அது குறித்த தகவல் பயனாளிகளின் கைபேசிக்கு குறுஞ்செய்தி (SMS), வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும். பயனாளிகள் திருமணம் நடைபெற்ற 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டில் திருமணத்தைப் பதிவு செய்வது கட்டாயமாகும்.
ஒருவேளை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படும். தவறாக நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால், இணையதளத்திலேயே மேல்முறையீடு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் கள விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தகுதியிருப்பின் பலன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுச் செயலாளர் ம. பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.