TNHB Explained: வெறும் ரூ.3 லட்சத்தில் சொந்த வீடு! வீட்டு வசதி வாரியத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
TNHB Explained: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் வீடுகள், மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் பெற இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன. எனவே, எப்படி விண்ணப்பிக்கலாம், தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
TNHB Explained: வீட்டு வசதி வாரிய வீடு வாங்க இன்று முதல் ஆன்லைன் பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே, எப்படி விண்ணப்பிக்கலாம், தேவையான ஆவணங்கள் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டு வசதி வாரிய வீடுகள்
சொந்தமாக வீடு, நிலம் வாங்கு வேண்டும் என்பது நடுத்தர, ஏழை, எளிய மக்களின் கனவாக இருக்கிறது. ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் வீடு, மனை வாங்குவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இன்று கட்டுமான செலவுகள் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், வீடு, மனை வாங்குவது என்பது நடுத்தர மக்களுக்கு எட்டாங்கனியாக மாறியுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு, நடுத்தர, ஏழை, எளிய மக்களுக்காக தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் (TNHB) மூலம் மாநிலம் முழுவதும் குறைந்த விலையில் எளித தவணை மற்றும் குறைந்த முன்பணத்தில் வீடுகள் மற்றும் மனைகளை வழங்கி வருகிறது.
இடைதரகர்கள் இன்றி ஆன்லைன் மூலமாகவே நேரடியாக விண்ணப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
19 மாவட்டங்களில் காலி மனை, வீடுகள்
தமிழகம் முழுவதும் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் உள்ள 6,775 வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளை வெளிப்படையான முறையில் ஆன்லைன் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்ற ஆண்டு வெறும் 2,630 அலகுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில், இந்த முறை அதைவிட இரண்டரை மடங்கு அதிகமாக அலகுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
19 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள வீட்டு வசதி வாரிய வீட்டை பெற விண்ணப்பிக்கலாம். சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, திருப்பூர், நெல்லை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஓசூர், திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில மலிவு விலை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், காலி மனைகள் உள்ளன.
மூன்று விதமான விற்பனை
குலுக்கள் முறையில் 2,842 வீடுகளும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் 2,184 வீடுகளும், பொது ஒதுக்கிடு முறையில் 1,749 அலகுகள் என மூன்று வகையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் குலுக்கள் முறையில் வீடு, மனையின் விலையை பொறுத்தவரை ரூ.3 லட்சம் முதல் ரூ.2.98 கோடி வரையிலான சொத்துக்கள் உள்ளன.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை அலகு விலையை பொறுத்தவரை, ரூ.5 லட்சம் முதல் ரூ.1.31 கோடி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது ஒதுக்கிடு முறையில் உள்ள அலகுகள் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ.1.46 கோடி வரை உள்ளது.
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்
- ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் மொத்தம் 2,842 அலகுகளுக்கு வழக்கமான குலுக்கல் (Lottery) முறையில் விண்ணப்பங்கள் தொடங்குகின்றன.
- இரண்டாவதாக, ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் 2,184 அலகுகளுக்கு இடஒதுக்கீட்டு விகிதாச்சாரத்துடன் கூடிய ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ (FCFS) முறையில் விண்ணப்பிக்கலாம்.
- மூன்றாவதாக, ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் எவ்வித இடஒதுக்கீட்டு வரம்பும் இல்லாத ‘காமன் பூல்’ (Common Pool) பொது ஒதுக்கீட்டு முறையில் 1,749 அலகுகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
- குலுக்கல் (Lottery) முறையில் விண்ணப்பங்கள் தொடங்கும் நிலையில், எப்படி இதன்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
- தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வலைத்தளத்தைப் பார்வையிடவும்: https://tnhb.tn.gov.in-ல் உள்ள அதிகாரப்பூர்வ தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வலைத்தளத்திற்குச் சென்று, இணையதளத்தில் "இப்போது முன்பதிவு செய்" (Book now) பகுதியைத் தேடுங்கள்.
- இப்போது முன்பதிவு செய்" பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
- தொடர்புடைய பகுதிக்குச் சென்று, "வெற்றியாளர் - இப்போதே முன்பதிவு செய்" (Winner Book Now) பொத்தானைக் சொடுக்குவதன் மூலம் உங்களுக்கு விருப்பமான வெற்றியாளர் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் "LOT-வாடிக்கையாளர்" (LOT-Customer) உள்நுழைவு பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள்.
- உங்கள் தற்போதைய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும்.
- கிடைக்கக்கூடிய அலகுகளிலிருந்து உங்களுக்கு விருப்பமான அடுக்குமாடி குடியிருப்பு / மனை / வீட்டை தேர்ந்தெடுக்கவும்
- தேர்ந்தெடுக்கப்பட்ட அலகு விவரங்களை மதிப்பாய்வு செய்து உறுதிப்படுத்தவும்.
- அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்கள் வங்கிக் கணக்கில் தேவையான நிதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் அவர்களின் பற்று அட்டைகள் (Debit Card) மற்றும் இணைய வங்கிச் சேவைகளில் தேவையான தொகைக்கு தேவையான பரிவர்த்தனை வரம்பை உயர்த்தி வைத்திருக்க வேண்டும்.
- உங்கள் முன்பதிவு கோரிக்கையை உறுதிசெய்து சமர்ப்பிக்கவும்.
- உங்களுக்கு விருப்பமான அலகை வெற்றிகரமாக முன்பதிவு செய்ய இந்த நடைமுறைகளை கடைபிடிக்கவும்.
இணையவழியில் பதிவேற்ற வேண்டிய ஆவணங்கள்
| வ.எண் | ஆவணங்கள் விவரம் |
| 1. | கடவுச்சீட்டுக்குரிய அளவிலான சமீபத்திய புகைப்படம் |
| 2. | வயதுச் சான்று சான்றிதழ் (PDF) |
| 3. | பூர்வீக சான்றிதழ் (PDF) |
| 4. | வருமானச் சான்றிதழ் (PDF) |
| 5. | நிரந்தர கணக்கு எண் - PAN (PDF) (விருப்பத்தேர்வு) |
| 6. | ஆதார் அடையாள அட்டை (PDF) |
| 7. | விண்ணப்பதாரர் மற்றும் இணை விண்ணப்பதாரரின் ஊடுகதிர் (Scan) செய்யப்பட்ட கையொப்பங்கள் |
| 8. | இட ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் ஏதேனும் இருந்தால் (PDF) |
| 9. | சாதிச் சான்றிதழ் ஏதேனும் இருந்தால் (PDF) |
அதிகாரியிடம் பெற வேண்டிய ஆவணங்கள்
உள்ளாட்சி அமைப்புகள், சம்மந்தப்பட்ட வட்டாட்சியர், துணைப் பதிவாளர் மற்றும் பதிவாளர் (பிறப்பு (ம) இறப்பு) அவர்களிடமிருந்து பிறப்புச் சான்றிதழ், பள்ளி இறுதிச் சான்றிதழ் அல்லது கல்வி நிறுவனத்தால் பள்ளி மாற்று சான்றிதழ்.
படிக்காத நபராக இருந்தால், உதவி சிவில் சர்ஜன் பதவிக்குக் குறையாத பதிவுசெய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளரால் வழங்கப்படும் வயதுச் சான்றிதழ் விண்ணப்பதாரர் உள்ளூர் வட்டாட்சியரிடமிருந்து வழக்கமான படிவத்தில் பெறப்பட்ட பூர்விக சான்றிதழைப் பதிவேற்ற வேண்டும்.
அரசு / பொது நிறுவனங்கள் / தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரியும் மாதாந்திர சம்பளம் பெறும் நபர்கள், அந்தந்த துறை / அதிகாரிகளிடமிருந்து முறையாகப் பெறப்பட்ட வருமானச் சான்றிதழைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.