SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ஆவின் பால் தட்டுப்பாடு உண்மையா? விசிட் அடித்த CM விஜய் - அமைச்சர் சொன்ன விளக்கம்

ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாக தொடர் புகார் எழுந்த வந்த நிலையில், இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

Written By Sudharsan G
Published: Oct 07, 2026, 01:46 PM IST | Updated: Oct 07, 2026, 02:20 PM IST
Join

Aavin Milk Demand: தலைநகர் சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு நீடிப்பதாக தொடர்ந்து பல்வேறு தரப்பில் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்தச் சூழலில், மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு முதலமைச்சர் விஜய் இன்று (அக். 7) ஆய்வு மேற்கொண்டது பெரும் கவனத்தை ஈர்த்தது.

இந்தச் சூழலில், முதலமைச்சர் விஜய்யின் ஆய்வின் போது பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமியும் உடனிருந்தார். அப்போது ஆவின் பால் பண்ணை வளாகத்தில் அவரிடம் செய்தியாளர்கள் பால் தட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

2 லட்சம் லிட்டர் கூடுதல் உற்பத்தி

அதற்கு பதிலளித்த அவர், சென்னையில் பால் தட்டுப்பாடு இல்லை என்றும் தினமும் 15 லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது என்றும் அமைச்சர் விளக்கம் அளித்தார். இதற்கு முன் 13 லடசம் லிட்டர் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், ஆவின் பாலின் தேவை உயர்ந்தபோது, 2 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியை அதிகப்படுத்தியதாக தெரிவித்தார்.

ஆவின் பால் தேவை அதிகரித்தது ஏன்?

தனியார் பால் நிறுவனங்கள் கடந்த 4 மாதங்களில் மூன்று முறை பாலின் விலையை உயர்த்திவிட்டதாகவும்; தனியார் ஒரு லிட்டர் பாலை 80 ரூபாய் என்றால் ஆவினில் அதே 42 ரூபாயில்தான் விற்பனை மேற்கொள்கிறோம் என்றும் தெரிவித்தார். இதனால் மக்கள் ஆவினை நோக்கி வந்துள்ளதால், ஆவின் பாலின் தேவை அதிகரித்துள்ளதாக அவர் விளக்கம் அளித்தார்.

மேலும், தங்களுக்கு பால் கொடுப்பதை குறைத்துவிட்டு, ஆன்லைன் ஹோம் டெலிவரி நிறுவனங்களுக்கு அதிகம் பால் பாக்கெட்டுகளை வழங்குவதாக பால் முகவர்கள் புகார் தெரிவிப்பது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் விஜயலட்சுமியிடம் கேள்வி எழுப்பினர். அதை திட்டவட்டமாக அமைச்சர் மறுப்பு தெரிவித்தார்.

ஆவின் மாநில மத்திய ஆய்வகம்

முன்னதாக, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.2.23 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று காலையில் திறந்து வைத்தார்.

எதற்கு இந்த ஆய்வகம்...?

இந்திய தர நிர்ணய ஆணையம் (BSI), இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரநிலைகளின்படி குடிநீர் சோதனைகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி கழிவுநீர் சோதனைகள் செய்வதற்காக இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த ஆய்வகம், நவீன உபகரணங்களின் உதவியுடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் தேவைகளுக்கான அனைத்துத் தரப் பரிசோதனைகளைத் துல்லியமாகவும், விரைவாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதவரம் பால் பண்ணை

அதேபோல், மாதவரம் பால் பண்ணையையும், புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாதவரம் பால் பண்ணை 1963ஆம் ஆண்டு, அரசு மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.

மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறனுடன் நிறுவப்பட்ட நிலையில், இதன் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வந்தது. தற்போது நாளொன்றுக்கு சுமார் 4.50 லட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் திறன் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பால் பண்ணை

நுகர்வோரின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சராசரியாக 120 வாகனங்கள் மூலம் வடசென்னைப் பகுதிகளில் பால் விநியோகப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாதவரத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை 152 கோடியே 26 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இது முழுமையான வசதிகளுடன் தானியங்கி தொழில்நுட்பத்துடன்கூடிய நவீன பண்ணையாக அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை மக்களின் எதிர்கால தேவைக்காக...

சென்னை மாநகர மக்களின் எதிர்கால பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்த நவீன பால் பண்ணை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் முதலமைச்சர் விஜய் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

ZEENEWS TRENDING STORIES