Explained: விழுப்புரத்தில் 7 வயது சிறுமி மாயம்.. 6 நாட்களாக தேடும் போலீஸ்.. என்ன நடக்கிறது?
Villupuram Girl Missing Case: விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 7 வயது சிறுமி காணாமல் போன நிலையில், சிறுமியை போலீசார் 6வது நாளாக தேடி வருகின்றனர். ஒரு வாரமாகியும் சிறுமி கிடைக்காததால், போலீசார் திணறி வருகின்றனர். எனவே, இந்த சம்பவம் குறித்து முழுமையாக இந்த தொகுப்பில் பார்ப்போம்.
Villupuram Girl Missing Case: தமிழகத்தில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக குற்றச் சம்பவங்கள் நடந்து வருகிறது. வன்கொடுமை, கொலை என ஏராளமான சம்பவங்கள் மாநில முழுவதும் அரங்கேறி வருகிறது. பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில 7 வயது சிறுமி காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் சிறுமி காணாமல் போன நிலையில், சிறுமி போலீசார் 6 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்காமல் இருக்கின்றனர்.
7 வயது சிறுமி மாயம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமம் குளக்கரை தெருவில் வசித்து வருபவர் வடிவேலு. கூலி தொழிலாளியான இவருக்கு பவானி என்ற மனைவியும் 18 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகளும் என இரு மகள் உள்ளனர். இதில் இளைய மகளான 7 வயதுள்ள ஹேமாவதி, ஆலம்பூண்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி சிறுமி ஹேமாவதிக்கு பிறந்த நாள் என்பதால் அன்றைய தினம் இரவு வீட்டிலேயே குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடி விட்டு சிறுமி ஹேமாவதி, வழக்கம் போல் பெற்றோருடன் படுத்து தூங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து காலை எழுந்து பார்த்த போது சிறுமி ஹேமாவதி காணாமல் போய் இருப்பதைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி ஹேமாவதி கிடைக்காததால் தனது மகள் ஹேமாவதி காணவில்லை என தந்தை வடிவேல், சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
மேலும் படிக்க: டாஸ்மாக்கில் 4 புதிய பீர் வகைகள்.. தீபாவளிக்கு விற்பனை? விலை எவ்வளவு?
சிறுமியை தேடும் பணியில் 100 போலீசார்
இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையிலான போலீசார், சிறுமி மாயமான ஆலம்பூண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலும் சிறுமியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர். ட்ரோன் கேமிரா மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சிறுமியை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போதும் மாயமான சிறுமி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் 8 தனிப்படைகளை அமைத்து 100க்கும் மேற்பட்ட போலீசார், காணாமல் போன சிறுமியை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
ஆலம்பூண்டி கிராமத்தைச் சுற்றியுள்ள ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள், மலைப்பகுதிகள், கரும்பு தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் போலீசார் தேடினர். சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், அக்கம், பக்கத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் தீவிர விசாரணை நடத்தியும் இதுவரை மாயமான சிறுமி குறித்து எந்தவிதமான சிறு தடயமும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
அக்டோபர் 11 ஆம் தேதி இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை மூன்று கைபேசி கோபுரங்களில் பதிவான சுமார் 600 அழைப்புகளை காவல்துறை ஆய்வு செய்தது. மேலும், ஆலம்பூண்டியிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில் உள்ள இரண்டு சிசிடிவி கேமராக்களிலும், நடுப்பட்டு சாலைக்கு அருகில் உள்ள மற்றொரு கேமராவிலும் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பதிவான காட்சிகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர்.
கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான ஐந்து சிறப்புப் படைகளும், மூன்று சிறப்புப் புலனாய்வுக் குழுக்களும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன. சிறுமியின் புகைப்படம் அடங்கிய அறிவிப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
தாயிடம் உண்மை கண்டறியும்
இந்நிலையில் சிறுமியின் தாய் பவானியிடம் நேற்று 3 மணி நேரத்திற்கும் மேலாக பெண் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். இதில் சிறுமியின் தாய் பவானி ஒரு சில தகவல்களை மறைப்பதாக போலீசாருக்கு சந்தேகம் வலுத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மாயமான சிறுமியின் தாய் பவானியிடம் அறிவியல் ரீதியிலான உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக சிறப்பு மருத்துவக் குழுவை வரவழைத்து சிறுமியின் தாய் பவானியிடம் அறிவியல் பூர்வமாக உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக ஏற்பாடுகளை போலீசார் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உண்மை கண்டறியும் சோதனையில் மாயமான சிறுமி குறித்து ஏதேனும் ஒரு தகவல் கிடைத்தால் அதனை வைத்து மாயமான சிறுமியை எப்படியாவது கண்டுபிடித்துவிடலாம் என போலீசார் திட்டமிட்டுள்ளனர். எனவே இந்த உண்மை கண்டறியும் சோதனையை மட்டுமே சிறுமியை கண்டுபிடிக்கும் ஒரே ஆயுதமாக தற்போது போலீசார் நம்பியுள்ளனர்.
மேலும் படிக்க: மக்களே உஷார்! அக். 23 வரை தொடரும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை?
மேலும், தினமும் சிறுமியின் தந்தை நள்ளிரவு 2 மணி வரை தொலைக்காட்சி பார்க்கும் நிலையில் சம்பவம் நடந்த அன்று சிறுமியின் தந்தை நேரத்திலேயே உறங்கி விட்டது. ஒரு பக்க கதவை திறந்து வைத்தது முதலில் சிறுமி காலை 3.30 மணிக்கு காணாமல் போனால் என்றும் பிறகு காலை 5:30 மணிக்கு காணாமல் போனால் என்றும் முன்னுக்கு பின் முரணாக சிறுமியின் தாய் பவானி வாக்குமூலம் கூறியதில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக தெரிகிறது.
சாமியாரிடம் விசாரணை
சிறுமி மாயமாகி 5 நாட்கள் ஆன நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சாமியார் சரவணன் மற்றும் அவரது மனைவியை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 7 வயது சிறுமி மாயமான சம்பவத்தில் சிறுமியின் வீட்டின் அருகே சிவன் கோவிலில் 15 நாட்களாக தங்கியிருந்த சாமியார் சரவணன், அவரது மனைவியிடம் போலீசார் விசாரணை. சாமியார் சரவணன் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ததால் போலீசார் சந்தேகம் அடைந்து விசாரணை நடத்துகின்றனர். மகாளய அமாவாசை அன்று சிறுமி காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால், சிறுமியை குடும்பத்தினரே நரம்பலி கொடுத்துள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.
ரூ.2 லட்சம் பரிசு
சிறுமி காணாமல் போன நிலையில், 7 நாட்கள் ஆகியும் சிறுமி கிடைக்கவில்லை. சிறுமி காணமல் போன வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இந்த நிலையில், சிறுமி குறித்து ஏதேனும் தகவல் வழங்கினால் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் தவெக வடக்கு மாவட்ட செயலாளர் குணசரவணன் அறிவித்துள்ளார். நேற்று தவெக மாவட்ட செயலாளர் குணசரவணன் சிறுமியின் வீட்டிற்கு சென்று, குடும்பத்தாரை அமைச்சர் ஆனந்திடம் தொலைபேசி வாயிலாக பேச வைத்து இருந்தார். எப்படியாவது அந்த சிறுமி உயிருடன் கிடைக்கவேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமே பிரார்த்தனை செய்து வருகிறது.
மேலும் படிக்க: Breaking Bad கட்சி தவெக... 135 கிலோ மெத்... முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் தாக்கு