SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

வடகிழக்கு பருவமழை: கனமழையில் சிக்கப்போகும் தென் மாவட்டங்கள்.. அப்போ சென்னை கதி? Explained

Northeast Monsoon Explained: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எந்தளவுக்கு எதிர்பார்க்கலாம் என்பது தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், எல் நினோ தாக்கம் இருக்கும் நிலையில், தமிழகத்தில் பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து கணித்திருக்கிறார்.

Written By Umabarkavi K
Published: Oct 20, 2026, 07:07 PM IST | Updated: Oct 20, 2026, 07:32 PM IST
Join

Northeast Monsoon Explained: தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) மற்றும் வடகிழக்கு பருவமழை (Northeast Monsoon) இரண்டும் இந்தியாவின் முக்கிய பருவமழைக் காலங்களாகும். குறிப்பாக, தமிழ்நாட்டின் மழைப்பொழிவுக்கு வடகிழக்கு பருவமழையே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தென்மேற்கு பருவமழை  ஜூன் முதல்  செப்டம்பர் மாதம் வரை இருக்கும். தென்மேற்கு பருவமழையின்போது, தமிழகத்தில் குறைந்த அளவிலான மழைப்பொழிவே இருக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை நீடிக்கும். தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவின் தெற்குப் பகுதிகள் மற்றும் கேரளாவின் சில மாவட்டங்கள் இக்காலத்தில்தான் தங்களுக்குத் தேவையான மழையை இக்காலத்தில் பெறுகின்றனர். சென்னை மற்றும் கடலோர மாவட்டங்கள் பலத்த மழையையும் புயல் தாக்கங்களையும் இக்காலத்தில் சந்திக்கின்றன.

தென்மேற்கு பருவமழை

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை சில தினங்களுக்கு முன் விலகியது. தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையான மழை, வறட்சி ஆகியவற்றுடன் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது.  எல் நினோவின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழையில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, 2026 ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 759 மி.மீ மழை பதிவாகி உள்ளது. இது நீண்டகால சராசரியாக 868.6 மி.மீ மழையை விட 109.2 மி.மீ குறைவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எல் நினோ தாக்கத்தால் மழைப்பொழிவு குறைவுக்கு காரணம் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இப்படியான சூழலில், தமிழகத்தில் நீர் தேவையை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ஆம் தேதி துவங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து, சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கிய வருகிறது. கடந்த  வாரம் சென்னை மட்டும் ஒரே நாளில் அதிகபட்சமாக 354 மி.மீ மழை பதிவாகி இருந்தது.  இது வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தை காட்டுகிறது. இன்னும் வரும் நாட்களில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர மழையை கொடுக்கும் என கூறி வருகின்றனர்.

2026 வடகிழக்கு பருவமழை குறித்து பேசிய தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், "எல் நினோ (El Nino) ஒரு முக்கியமான காரணியாக இருந்தாலும், அது வடகிழக்கு பருவமழையின் முடிவைத் தீர்மானிப்பதில்லை. பருவமழை அதன் போக்கில் நிகழ்கிறது. பல சமயங்களில் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தி, ஒவ்வொரு பருவத்திற்கும் ஒரு தனி கதை உண்டு என்பதை நமக்கு உணர்த்துகிறது. வடகிழக்கு பருவமழையின் சராசரி அளவு சென்னையில் 855 மி.மீ மற்றும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் 445 மி.மீ ஆகும். எல் நினோ நிலவும் ஆண்டுகளில் சுமார் 85–90%, வடகிழக்கு பருவமழை சராசரியை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.

2015ஆம் ஆண்டு: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் சென்னையில் சுமார் 1,664 மி.மீ மழை பதிவானது. இந்தப் பருவமழை காலத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

1997ஆம் ஆண்டு: தமிழ்நாட்டில் சுமார் 810 மி.மீ மழை பதிவானது. இது 1946-ஆம் ஆண்டின் முந்தைய அளவை அதிமான மழைப்பொழிவு ஏற்பட்டது.

1982ஆம் ஆண்டு: இது முற்றிலும் மாறுபட்ட ஒரு ஆண்டாகும்.அந்த ஆண்டில் சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் மழைப்பொழிவு கணிசமாகக் குறைவாக இருந்தது. 1997, 2015 ஆகிய ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், அப்போதைய அதிகப்படியான மழைப்பொழிவுக்குக் காரணம் வெறும் புயல்கள் மட்டும்தான் என்று கூற முடியாது.

குறிப்பாக, 1997-ஆம் ஆண்டில் தமிழகத்தில் வழக்கத்தை விடக் குறைவான புயல்களே வீசின. ஆனால், அதையும் தாண்டி மாநிலம் முழுவதும் பெருமளவில் மழை பெய்தது.

2026 வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்காலம் இயல்பான அளவான 445 மி.மீட்டரை விட அதிகமாக, சுமார் 470–520 மி.மீ என்ற அளவில் முடிவடைவதற்கான வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை 855 மி.மீ என்ற இயல்பான அளவோடு ஒப்பிடுகையில், இந்நகரத்தில் இதுவரை சுமார் 230 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில், கடைசி வாரத்தில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி எவ்வாறு அமைகிறது என்பதைப் பொறுத்து, பருவமழையின் மொத்த அளவு 300 மி.மீ-ஐ எட்டவோ அல்லது அதைத் தாண்டவோ வாய்ப்புள்ளது. ஒருவேளை அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு ஆந்திரா அல்லது ஒடிசா நோக்கி நகர்ந்தால், நமக்குக் கிடைக்க வேண்டிய முக்கியமான மழைப்பொழிவு இருக்காது.

1. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2026-ஆம் ஆண்டில் பெய்யும் மழையின் அளவு 2015-ஆம் ஆண்டின் அசாதாரணமான அளவை எட்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. தற்போதைய நிலவரப்படி, மழையின் அளவு சுமார் 500 மி.மீ-ஐ எட்டுவது சாத்தியமான ஒன்றாகத் தோன்றுகிறது.

2. சென்னை - தீவிரமான, சரியான இடங்களில் பெய்யும் சில பலத்த மழைகள், பருவமழையின் மொத்த அளவை வியத்தகு முறையில் மாற்றக்கூடும். சாதகமான சூழல் தொடர்ந்து நீடித்து, குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்தால், மொத்த மழைப்பொழிவு 1,000 மி.மீ-ஐ கடக்க வாய்ப்புள்ளது. ஆனால், 2015 மற்றும் 1997 போன்ற ஆண்டுகளில் பதிவான 1,500 மி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான அசாதாரண மழையை எட்டுவது மிகவும் கடினமான சவாலாக இருக்கும்.

3. தென் தமிழக மாவட்டங்கள் - எல் நினோ (El Nino) ஆண்டுகளில், தென் தமிழ்நாட்டின் செயல்பாடு வேற லெவலில் இருக்கும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி, மதுரை மற்றும் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் எல் நினோ ஆண்டுகளில் மிகச் சிறப்பான மழைப்பொழிவு கிடைக்க வாய்ப்புள்ளது. பல பகுதிகளில் வழக்கத்தை விட மிக அதிக அளவிலான மழை பதிவாகக்கூடும். இந்த பருவமழைக் காலத்தில், நான் அதிக நம்பிக்கை வைத்திருக்கும் பகுதிகளில் தெற்கு தமிழ்நாடும் ஒன்று.

4. மேற்குத் தமிழ்நாடு - கொங்கு மண்டலம் மட்டுமே எனது முதன்மையான கவலைக்குரிய பகுதியாகும். கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் கொங்கு மண்டலத்தின் பிற பகுதிகள், வங்காள விரிகுடாவிலிருந்து தீபகற்பத்தைக் கடந்து அரபிக்கடல் நோக்கி நகரும் குறைந்த காற்றழுத்தப் பகுதிகள் மற்றும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சிகளை (UACs) பெருமளவில் சார்ந்துள்ளன. இந்த மாவட்டங்களில் அக்டோபர் மாதம் நல்ல தொடக்கத்துடன் தொடங்கியுள்ளது. அக்டோபர் 20 முதல் 24 வரையிலான காலகட்டத்திலும் இங்கு நல்ல மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் பகுதியில் இயல்பான அல்லது இயல்பை விடச் சற்று அதிகமான மழை பொழிவது என்பது எதிர்பார்ப்பாகும்.

5. தமிழகத்தின் உட்புற மாவட்டங்கள் - வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் (UACs) முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் முதல் வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் பிற உட்புற மாவட்டங்களில், மழைப்பொழிவு பெரும்பாலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் அல்லது பலவீனமான சுழற்சிகள் உருவாவதையும், அவை நகர்வதையும் பொறுத்தே அமைகிறது. சாதகமான வளிமண்டல சுழற்சிகள் உருவாகும் பட்சத்தில், 2026-ஆம் ஆண்டின் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், இந்த உட்புற மாவட்டங்களில் பெரும்பாலானவை இயல்பான அல்லது இயல்பை விட அதிகமான மழையைப் பெறும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

6.டெல்டா மற்றும் கடலூர்–புதுச்சேரி பகுதி - வடகிழக்கு பருவமழையின் மிக அதிக மழைப்பொழிவு பெறும் மண்டலம் இதுவே ஆகும். கடலூரிலிருந்து டெல்டா மாவட்டங்கள் வழியாக புதுச்சேரி வரையிலான இந்தப் பகுதி, வடகிழக்கு பருவமழைக் காலத்தில் அதிக மழையைப் பருவகால இயல்பு அளவை விட, குறைந்தது 20% கூடுதல் மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும். குறிப்பாக, நவம்பர் மாதம் மிக முக்கியமானதாக அமையக்கூடும். நவம்பர் மாதத்திற்கான முன்னறிவிப்பு சாதகமாகத் தெரிகிறது. எப்போதும் போல, இவை மாறிவரும் காலநிலை மற்றும் வானிலை அமைப்புகளின் அடிப்படையில் நான் கொண்டுள்ள தற்போதைய எதிர்பார்ப்புகளே தவிர, உறுதியானவை அல்ல; வடகிழக்கு பருவமழை அவ்வப்போது சில ஆச்சரியங்களை ஏற்படுத்தக்கூடும் என பதிவிட்டுள்ளார்.

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I am Uma Barkavi as a journalist with 5 years of experience across various media platforms, including TV and digital media. Since 2021, she has covered Tamil Nadu, lifestyle, national, political, and astrology news. She focuses on delivering engaging digital news content in a reader-friendly and informative format.

ZEENEWS TRENDING STORIES