பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, தற்போது வீ தி லீடர்ஸ் என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பை விரைவில் அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக அமைப்பின் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த அமைப்பில் இதுவரை 25 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் அமைப்பை சேர்ந்தவர்கள் போட்டியிடுவார்கள் என்றும் அண்ணாமலை ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்காக தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகக் கூறினார். இந்தத் தேர்தலுக்கான பிரசாரம் தேசிய அளவிலான பிரசாரமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்பதன் மூலம் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்துவதுடன், புதிய தலைவர்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார். இதற்காக தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதே சரியான முடிவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். அப்போதுதான் தங்களது கொள்கைகள், சிந்தனைகள் மற்றும் திட்டங்களை மக்களிடம் நேரடியாகக் கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவித்தார்.
அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு அடிப்படை மாற்றங்களை உருவாக்குவதில் தெளிவாக இருப்பதாகவும் அண்ணாமலை கூறினார். அதேநேரத்தில், தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சியின் பெயர் அவசியம் என்றில்லை என்றும், தற்போதைக்கு கட்சியின் பெயரை வெளியிடும் திட்டம் இல்லை என்றும் அவர் விளக்கமளித்தார். ஓர் இயக்கமாகவும் உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்க முடியும் எனக் குறிப்பிட்டார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பு, அவரது மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகளை போட்டியிட செய்து தனது பலத்தை சோதித்தது. அந்த தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் பின்னர் விஜய்யை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.