SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

Preventive Detention : முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் என்றால் என்ன? Explained

What is Preventive Detention? : முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் என்றால் என்ன?, BNSS பிரிவு 163 சொல்வது என்பது குறித்து முழுமையான விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written By Karthikeyan Sekar
Published: Oct 16, 2026, 10:05 AM IST | Updated: Oct 16, 2026, 10:14 AM IST
Join

What is Preventive Detention? : நாடு முழுவதும் தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்யக்கோரி போராட்டம் மிகப்பெரிய அளவில் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் 2 முக்கிய கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. தலைமை தேர்தல் ஆணையரின் பதவி விலகல் மற்றும் SIR திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். இதற்காக தில்லியில் ஜந்தர் மந்தர் நோக்கி பேரணி செல்ல முயன்ற அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 5,000-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை தில்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.

இதையடுத்து, அக்டோபர் 11 அன்று உச்ச நீதிமன்றம் அவசர அமர்வாகக் கூடி, சட்டம் ஒழுங்குக்கு உட்பட்டு பொதுமக்களின் சுதந்திரத்தை உறுதி செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபடுவோர் என கருதப்படும் பலர் முன்னெச்சரிக்கை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். அரசின் இந்த நடவடிக்கை நாட்டின் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள், முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் சட்டங்கள் மற்றும் தடை உத்தரவுகள் (Prohibitory Orders) ஆகியவற்றுக்கு இடையேயான அதிகார சமநிலையை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது. இந்த சூழலில், முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் என்றால் என்ன? என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

2. முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் என்றால் என்ன?

நீதிமன்ற விசாரணை அல்லது முறையான குற்றத்தீர்ப்பு இன்றியே ஒரு நபரைச் சிறையிலோ அல்லது காவலில் வைப்பது 'முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல்' எனப்படும். இந்த சட்டத்தின் முதன்மை நோக்கமே ஒரு நபரால் எதிர்காலத்தில் பொது அமைதி, நாட்டின் பாதுகாப்பு அல்லது சட்ட ஒழுங்கிற்கு ஊறு விளைவிக்கும் குற்றங்களைச் செய்வதைத் தடுத்து நிறுத்துவதே ஆகும்.

எப்போதெல்லாம் இந்த சட்டம் பயன்படுத்தப்படும்?

பொது அமைதி, அரசு மற்றும் நாட்டின் பாதுகாப்பு, மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழலில் நிர்வாக அதிகார அமைப்புகளால் இது பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, தேசியப் பாதுகாப்புச் சட்டம், 1980 (National Security Act - NSA) நாட்டின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடனான நல்லுறவு அல்லது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் நபர்களை முன்னெச்சரிக்கையாகக் காவலில் வைக்க வழிவகை செய்கிறது.

3. BNSS பிரிவு 163 (பழைய CrPC பிரிவு 144) என்பதன் விளக்கம்

பாரதிய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம், 2023-ன் பிரிவு 163 (Section 163 of BNSS), முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் (CrPC Section 144) அதிகாரங்களையும் நெறிமுறைகளையும் அப்படியே உள்ளடக்கியுள்ளது. மாவட்ட நடுவர், துணைப் பிரிவு நடுவர், அல்லது மாநில அரசால் அதிகாரமளிக்கப்படும் சிறப்பு நிர்வாக நடுவர் ஆகியோர் அவசரச் சூழலில் உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம். மனித உயிருக்கு ஆபத்து, பொது அமைதிக்குக் குந்தகம், கலவரம் ஏற்படுதல் அல்லது சட்டப்படி கடமையாற்றும் பணியாளர்களுக்குத் தடை ஏற்படுதல் ஆகியவற்றை உடனடியாகத் தடுக்கும் தடுப்பு நடவடிக்கையாக இது உள்ளது.

வழக்கமான சட்ட நடைமுறைகள் தாமதமாகும் சூழலில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முன்கூட்டியே அறிவிப்பு கூட வழங்காமல் நிர்வாக நடுவரால் உத்தரவு பிறப்பிக்கப்படலாம். எனினும், உத்தரவில் அதற்கான உண்மைத் தகவல்கள் மற்றும் காரணங்கள் வெளிப்படையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அதேநேரத்தில், BNSS பிரிவு 163-ன் கீழ் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் உயர் நீதிமன்றத்தின் சீராய்வு விசாரணைக்கு (Judicial Review / Revisional Jurisdiction) உட்பட்டவை ஆகும்.

4. இந்தியாவில் முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் வரலாறு

இந்தியாவில் அரசியல் எதிர்ப்புகளை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இத்தடுப்புக் காவல் நடைமுறை, சுதந்திரத்திற்குப் பின் நாட்டின் பாதுகாப்பிற்கான சட்டப் பாதுகாப்பாக உருமாற்றம் பெற்றது:

காலனித்துவ காலம்: ரௌலட் சட்டம், 1919 மற்றும் இந்தியப் பாதுகாப்புச் சட்டம், 1939 ஆகியவை விசாரணையின்றி சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சிறையிலடைக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டன.

சுதந்திரத்திற்குப் பின்: முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் சட்டம், 1950 (Preventive Detention Act, 1950) கொண்டுவரப்பட்டு 1969 வரை நீடித்தது.

உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம் (MISA, 1971) அவசரநிலைக் காலத்தில் அரசியல் எதிர்ப்பாளர்களை ஒடுக்கப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் 1978ல் ரத்து செய்யப்பட்டது.

தேசியப் பாதுகாப்புச் சட்டம், 1980 (NSA), வெளிநாட்டுச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம், 1974 (COFEPOSA) மற்றும் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA, 1967) திருத்தங்கள் மூலம் பயங்கரவாதம் மற்றும் பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிராக இவ்வகை அதிகாரங்கள் தொடர்ந்து வருகின்றன.

5. அரசமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்புகள்

தன்னிச்சையான மற்றும் அத்துமீறிய தடுப்புக் காவலுக்கு எதிராக இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 22ன் கீழ் தெளிவான பாதுகாப்புகளை வழங்கியுள்ளது:

1. பிரிவு 22(4) – 3 மாத வரம்பு மற்றும் ஆலோசனைக் குழு (Advisory Board): உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஆலோசனைக் குழுவின் ஒப்புதல் இன்றி, ஒரு நபரை 3 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து முன்னெச்சரிக்கை காவலில் வைக்க முடியாது.

2. பிரிவு 22(5) – காரணங்களைத் தெரிவித்தல், முறையீடு:காவலில் வைக்கப்பட்ட நபருக்கு அதற்கான காரணங்களை இயன்றவரை விரைவாகத் தெரிவிக்க வேண்டும். மேலும், அந்த உத்தரவுக்கு எதிராக முறையீடு (representation) செய்வதற்கு அவருக்கு முழுமையான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.

3. நீதித்துறை மறுஆய்வு (Judicial Review): அதிகாரிகள் சட்ட நெறிமுறைகளைப் பின்பற்றினார்களா, உரிய ஆதாரங்கள் கணக்கில் கொள்ளப்பட்டதா என்பதை ஆய்வு செய்யும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு.

6. உச்ச நீதிமன்றத்தின் முக்கியத் தீர்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்

உச்ச நீதிமன்றம் தனது பல்வேறு வரலாற்றுத் தீர்ப்புகளில் தடுப்புக் காவல் மற்றும் 144 தடை உத்தரவுகள் எதேச்சதிகாரமாகப் பயன்படுத்தப்படக் கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது:

பாபுலால் பரதே எதிர் மகாராஷ்டிரா அரசு (1961), மது லிமாயே வழக்கு (1971): CrPC 144-ன் கீழ் நிர்வாக நடுவருக்கு உள்ள அதிகாரம் எல்லையற்றது அல்ல; சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு, பொது அமைதிக்கு உடனடி அச்சுறுத்தல் உள்ள அரிதான தருணங்களில் மட்டுமே விகிதாசார அடிப்படையில் (proportionate) பயன்படுத்தப்பட வேண்டும்.

குதிராம் தாஸ் எதிர் மேற்கு வங்க அரசு (1975): காவலில் வைப்பதற்கான காரணங்களைத் தெரிவிப்பது என்பது அதிகார அத்துமீறலைத் தடுக்கும் கவசமாகும்; காரணங்கள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே கைதான நபர் நீதிமன்ற மறுஆய்வை நாட முடியும்.

ராம்லீலா மைதான வழக்கு (2012): தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது நள்ளிரவில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துக் கலைத்த நடவடிக்கையைக் கண்டித்த நீதிமன்றம், பொது அமைதிக்குத் திடீர் ஆபத்து ஏற்படும் அசாதாரணமான சூழ்நிலைகளில் மட்டுமே இதனைப் பிரயோகிக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டியது.

மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் வழக்கு (2018): ஜந்தர் மந்தர் பகுதியில் அனைத்துப் போராட்டங்களுக்கும் ஒட்டுமொத்தமாகத் தடை விதிப்பது ஜனநாயக உரிமையை மறுப்பதாகும்; போராட்டங்களைத் தடை செய்வதற்குப் பதிலாக, அவற்றுக்கு உரிய அனுமதி அளித்து முறைப்படுத்துவதே தீர்வு எனத் தீர்ப்பளித்தது.

ஷேக் நஸ்னீன் vs தெலங்கானா அரசு (2022), அமீனா பேகம் வழக்கு (2023): முன்னெச்சரிக்கை தடுப்புக் காவல் என்பது ஒரு வழக்கமான நிர்வாக நடைமுறை (routine manner) அல்ல, அது சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதால், அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள "பொன் முக்கோணப் பாதுகாப்பு" (Golden Triangle - சரத்துகள் 14, 19 மற்றும் 21) மிகக் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

ஆகிய வழக்குகளில் இத்தகைய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.

ZEENEWS TRENDING STORIES