காலை உணவுத் திட்டம்: பெயர் மாற்றம் ஏன்? கலைஞர் சொன்ன மேட்டர் - ராஜ்மோகன் விளக்கம்
TN Assembly Updates : மு.க.ஸ்டாலின் தலைமையிலான கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை, காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது என திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பதிலை இங்கு காணலாம்.
TN Assembly Updates, Breakfast Scheme : தமிழ்நாடு பட்ஜெட் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் நெடுஞ்சாலை, பொதுப்பணி, விளையாட்டு மேம்பாடு, மனிதவள மேலாண்மை உள்ளிட்ட துறைகள் மீதான மானியக் கோரிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தில் பல கட்சிகளின் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர். விவாதம் நிறைவடைந்த உடன் நெடுஞ்சாலை, பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மனிதவள மேலாண்மை அமைச்சர் சரத்குமார் ஆகியோர் பதிலுரை அளிப்பார்கள்.
காமராஜர் மீதான திமுகவின் பற்று
அந்த வகையில், மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு, "காமராஜர் மீது திமுக எப்போதும் தனி பாசம் கொண்டிருந்தது. காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து பிரதமர் நேருவை அழைத்து வந்து திறந்தோம். குடியாத்தம் தொகுதியில் காமராஜரை எதிர்த்து திமுக வேட்பாளரை நிறுத்தாதவர் அண்ணா.
காமராஜருக்கு சிலை அமைத்து, மணிமண்டபம் அமைத்தவர் கலைஞர் கருணாநிதிதான். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாகவும் கருணாநிதியே அறிவித்து பெருமை சேர்த்தார்.
எ.வ.வேலு எழுப்பிய கேள்வி
அப்படியிருக்க, முதல்வர் காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றியது ஏன்?. புதிதாக ஒரு திட்டத்தை உருவாக்கி காமராஜர் பெயரை வைக்க வேண்டியதுதானே? அதில் தவறில்லையே?. ஸ்டாலின் காலை உணவுத் திட்டம் எனப் பெயர் வைக்கலாம் எனக் கூறியபோது ஸ்டாலின் அதை மறுத்தார்.
முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் என பெயர் வைத்தால் யாரும் அந்த பெயரை மாற்ற மாட்டார்கள் என ஸ்டாலின் கூறினார். நாங்கள் உருவாக்கிய திட்டத்திற்கு நீங்கள் ஏன் பெயரை மாற்ற வேண்டும் என்பதே கேள்வி" என பேசியிருந்தார்.
அமைச்சர் கூறிய பதில்
கலைஞரே சொன்னது...
இதற்கு பிறகு பதிலளித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது, "திட்டத்தின் பெயர் மாற்றம் குறித்து பல உறுப்பினர்களும், பல முறையும் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள். அதற்காக, நான் வரலாற்றை சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறேன். 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு முன்னாள் முதல்வரான கலைஞர் கருணாநிதியின் ஆட்சி அமைந்த பிறகு, அவர் பேசியது, பெயர் மாற்றத்தை அவர் செய்தார்.
இது அவருடைய வார்த்தைகள்: ஜெ.ஜெ. திரைப்பட நகரின் பெயரை நாங்கள் ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு, பொருத்தமான பெயராக இருக்கும் என்று ஜெ.ஜெ. சினி சிட்டியை, எம்.ஜி.ஆர். திரைப்பட நகராக நான் மாற்றுகிறேன். இதை கலைஞரே அறிவித்திருக்கிறார். பெயர் மாற்றம் என்பது காலம் காலமாக நடப்பது.
பெயர் மாற்றப்பட்ட திட்டங்கள்
அதுமட்டுமல்ல, அம்மா பசுமை வீடு என்பது கலைஞர் கனவு இல்லமாக மாறுகிறது, அம்மா மருந்தகம் என்பது முதல்வர் மருந்தகமாக மாறி இருக்கிறது. அம்மா மினி கிளினிக் முதல்வர் கிளினிக்காக மாறி இருக்கிறது.
ஆனால் இங்கே 'நான் பத்தூருக்குப் போயாவது செல்வம் சேர்த்து வருவேன், நீ படிக்கின்ற வேலையை மட்டும் பாரு' என்று தமிழ்நாட்டின் கல்விக்கண் திறந்தவர் கர்மவீரர் காமராஜரின் பெயர்தான். அது 203 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
காமராஜர் பெயரே பொருத்தமானது...
ஒரு குறிப்பிட்ட வகுப்பில் இருந்து பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு காலை உணவு விரிவாக்கம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டிருக்கிறது. நான் சொல்வேன் இந்த திட்டத்திற்கு காமராஜர் பெயரை விட பொருத்தமான பெயர் உலகத்திலேயே கிடையாது என்பதை உறுப்பினருக்கு தெரிவிக்கிறேன்" என்றார்.