ஷாம்பு போட்ட பிறகு எண்ணெய் தேய்க்கலாமா? முடி உதிர்வை தவிர்க்க என்ன செய்யலாம்? ஹேர் கேர் டிப்ஸ்
ஷாம்பு போட்டு குளித்த பிறகு எண்ணெய் தேய்க்கலாமா? அதன் நன்மைகள் மற்றும் சிக்கல்கள்.. அதேபோல் நமது தலைமுடியை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்வது எப்படி? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்.
நம்மில் பலர் தலைமுடியை ஆரோக்கியமாக பராமரிக்க பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறோம். இதில் குறிப்பாக தலைமுடிக்கு ஷாம்பு போட்டுக் குளித்த கையோடு எண்ணெய் தடவுவதுதான். ஆனால், ஷாம்பு போட்ட உடனே எண்ணெய் வைப்பது உண்மையில் நல்லதா? அல்லது முடி உதிர்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்குமா? என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.
ஷாம்பு போட்ட உடன் எண்ணெய் வைப்பதன் நன்மைகள்
ஷாம்பு பயன்படுத்தும்போது தலையில் உள்ள அழுக்கு, வியர்வை மற்றும் இயற்கையான எண்ணெய் பசைகள் நீக்கப்பட்டு கூந்தல் சுத்தமாகிறது. எனினும், இதனால் கூந்தல் வறட்சியடைவதைத் தடுக்கச் சிறிதளவு எண்ணெய் தடவும்போது சில உடனடி நன்மைகள் கிடைக்கின்றன.
- தொடுவதற்கு மென்மையாகவும், பார்க்கப் பளபளப்பாகவும் மாறும்.
- கூந்தலின் கரடுமுரடான தன்மை குறைந்து, சீவுவதற்கு ஏதுவாக இருக்கும்.
- முடியின் நடுப்பகுதி முதல் நுனி வரை மட்டும் சிறிதளவு எண்ணெய் தடவுவது கூந்தலுக்கு நல்ல பாதுகாப்பை தரும்.
எண்ணெய் தடுவுவதால் ஏற்படும் சிக்கல்கள்
ஒவ்வொரு முறையும் குளித்த பிறகு எண்ணெய் தடவுவது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. சிலருக்கு அது பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
- குறிப்பாக மெல்லிய கூந்தல் உள்ளவர்களுக்கு, அடுத்த நாளே முடி பிசுபிசுப்பாக மாறிவிடும்.
- எண்ணெய் மற்றும் தூசிகள் ஒன்றிணைந்து தலையில் படிவங்களாக படிவதால் அரிப்பு மற்றும் வெள்ளை துகள்கள் தோன்றும்.
- ஏற்கனவே எண்ணெய் பசை அதிகம் உள்ள உச்சந்தலையில் மீண்டும் எண்ணெய் தடவும்போது, துளைகள் அடைபட்டு எரிச்சல் உண்டாகும்.
ஆராய்ச்சி முடிவுகள் கூறுவது என்ன?
Scientific Reports இதழில் வெளியான ஆய்வின்படி, தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்கள் உச்சந்தலையின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும் பொடுகு தொல்லையை கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இருப்பினும், "ஒவ்வொரு முறை ஷாம்பு பயன்படுத்திய பிறகும் கட்டாயம் எண்ணெய் தடவ வேண்டும்" என்று அந்த ஆய்வு பரிந்துரைக்கவில்லை. கூந்தலின் தன்மைக்கு ஏற்பவே இதன் தேவை மாறுபடும்.
எண்ணெய் தடவலாமா?
- குளித்த பிறகு எண்ணெய் தடவுவதை விட, வாரத்திற்கு 1 அல்லது 2 முறை ஷாம்பு போடுவதற்கு முன்பு தலைமுடியில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதே மிக சிறந்த பலனைத் தரும்.
- ஈரமுடியில் எண்ணெய் தடவாமல், முடி சற்று உலர்ந்த பிறகு 2 முதல் 4 துளிகள் மட்டும் நுனிமுடியில் தடவலாம்.
- யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்? பொடுகு, தோல் அழற்சி, தலையில் பருக்கள் உள்ளவர்கள் மற்றும் மெலிதான முடி கொண்டவர்கள் ஷாம்புவுக்கு பின் எண்ணெய் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சரியான வழி எது?
- குளித்த பிறகு எண்ணெய் தடவுவதால் மட்டுமே முடி உதிர்வு முழுமையாக நின்றுவிடாது. புதிய முடி வளர்ச்சியும் இதனால் உடனடியாக சாத்தியமாகாது.
- மரபணு அமைப்பு, ஹார்மோன் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு, மனஅழுத்தம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளே முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களாகும்.
- உங்கள் உச்சந்தலையின் தன்மைக்கு ஏற்ப எண்ணெயை பயன்படுத்துவதும், வாரத்திற்கு 1–2 முறை ஷாம்புவுக்கு முன் 'ஆயில் மசாஜ்' செய்வதுமே ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்புக்கு சிறந்த வழியாகும்.