PM SYM: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்... பெறுவது எப்படி?
PM SYM: 'இ-ஷ்ரம்' இணையதளத்தில் பதிவு செய்வது தொழிலாளர்களைப் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுடன் இணைக்க உதவும் என்றாலும், மாதம் ₹3,000 ஓய்வூதியம் பெறும் பலனானது 'பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன்' திட்டத்தின் விதிகளின்படியே வழங்கப்படுகிறது.
PM SYM: பெண்கள், விவசாயிகள், மூத்த குடிமக்கள், தொழிலாளர்கள் என நாட்டில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்காக மத்திய அரசு பல வித திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம்.
அமைப்புசாரா துறை தொழிலாளர்களுக்கு நிதி உதவி
இந்த திட்டத்தின் மூலம், தெருவோர வியாபாரிகள், வீட்டுப் பணியாளர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களுக்கு, அவர்களின் முதுமைக் காலத்தில் நிதி பாதுகாப்பைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. மத்திய அரசின் 'பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன்' (PM-SYM) திட்டத்தின் கீழ், தகுதியுடைய தொழிலாளர்கள் 60 வயதை எட்டிய பிறகு மாதம் ₹3,000 ஓய்வூதியத்தைப் பெறலாம்.
இருப்பினும், 'இ-ஷ்ரம்' (e-Shram) அட்டையைப் பெற்றிருப்பதால் மட்டும் தானாகவே இந்த ₹3,000 ஓய்வூதியம் கிடைக்காது என்பதை பயனாளிகள் தெரிந்துகொள்ள வேண்டும். இதற்காகத் தனித்தனியாக ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்து, அதற்குரிய பங்களிப்பைச் செலுத்த வேண்டும்.
மாத ஓய்வூதியம் வழங்குவதே நோக்கம்
முறையான துறையில் பணிபுரிபவர்களுக்குக் கிடைப்பது போன்ற ஓய்வூதியப் பலன்கள் கிடைக்கப்பெறாத தனிநபர்களுக்கு, முதுமைக் காலத்தில் வழக்கமான வருமானத்தை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 'இ-ஷ்ரம்' இணையதளத்தில் பதிவு செய்வது தொழிலாளர்களைப் பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுடன் இணைக்க உதவும் என்றாலும், மாதம் ₹3,000 ஓய்வூதியம் பெறும் பலனானது 'பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன்' திட்டத்தின் விதிகளின்படியே வழங்கப்படுகிறது.
₹3,000 ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க யாருக்கெல்லாம் தகுதி உள்ளது?
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ 'இ-ஷ்ரம்' இணையதளத்தின்படி, 'பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன்' திட்டத்தின் பலன்களைப் பெற பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:
வயது: விண்ணப்பிக்கும் நேரத்தில் விண்ணப்பதாரரின் வயது 18 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.
தொழில்: விண்ணப்பதாரர் அமைப்புசாரா துறையில் பணிபுரிபவராக இருக்க வேண்டும். உதாரணமாக, கட்டுமானத் தொழிலாளி, வீட்டுப் பணியாளர், ரிக்ஷா இழுப்பவர், தெருவோர வியாபாரி அல்லது இது போன்ற பிற தகுதியுடைய தொழிலாளராக இருக்க வேண்டும்.
மாத வருமானம்: ₹15,000 அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
பிற நிபந்தனைகள்: விண்ணப்பதாரர் EPFO, ESIC அல்லது அரசு நிதியுதவி பெறும் NPS ஆகியவற்றில் உறுப்பினராக இருக்கக்கூடாது. மேலும், வருமான வரி செலுத்துபவராகவும் இருக்கக்கூடாது.
குடியுரிமை: விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | PF ரிட்டர்ன் தாக்கல் காலக்கெடு நீட்டிக்கப்படுமா? EPF குறித்து முக்கிய அம்சங்கள்!
PM SYM: வயதிற்கு ஏற்ப எவ்வளவு பங்களிப்பு செலுத்த வேண்டும்?
PM SYM திட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் 60 வயது அடையும் வரை குறிப்பிட்ட மாதாந்திர பங்களிப்பைச் செலுத்த வேண்டும். அரசாங்கமும் அதற்கு இணையான பங்களிப்பை வழங்குகிறது. திட்டத்தில் சேரும் வயதைப் பொறுத்து, செலுத்த வேண்டிய மாதாந்திர பங்களிப்பு மாறுபடும். அதற்கான விவரம் பின்வருமாறு:
| வயது | பங்களிப்பு |
| 18 வயது | ₹55 |
| 20 வயது | ₹61 |
| 25 வயது | ₹80 |
| 30 வயது | ₹105 |
| 35 வயது | ₹150 |
| 40 வயது | ₹200 |
அதாவது, ஒருவர் 18 வயதில் இந்தத் திட்டத்தில் சேர்ந்தால், அவர் மாதம் ₹55 செலுத்த வேண்டும். அரசாங்கமும் அதே அளவு ₹55-ஐ வழங்கும். அதே சமயம், 40 வயதில் இணையும் ஒருவர் மாதம் ₹200, 30 வயதில் சேரும் நபர் ₹105 செலுத்த வேண்டியிருக்கும்.
ரூ.3,000 ஓய்வூதியத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கான செயல்முறையை இங்கே காணலாம்:
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.
- அதன் பின்னர் இந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த தகவல்களைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
- 'பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்' (PMSYM) திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் திறக்கவும்.
- திட்டத்தில் சேருவதற்கான விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, கேட்கப்படும் தனிப்பட்ட விவரங்களை உள்ளிடவும்.
- உங்கள் ஆதார் எண், வங்கிக் கணக்கு மற்றும் வயது தொடர்பான விவரங்களை வழங்கவும்
- அதன் பிறகும் சரிபார்ப்புச் செயல்முறையை நிறைவு செய்யவும்.
- உங்கள் வயதிற்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர பங்களிப்பை அமைத்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து தானாகவே பணம் கழிக்கப்படும் (auto-debit) வசதிக்கு அனுமதி அளிக்கவும்.
- விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பிறகு, பதிவு ரசீது மற்றும் உங்கள் ஓய்வூதியக் கணக்கு தொடர்பான விவரங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டால், உங்கள் அருகிலுள்ள பொதுச் சேவை மையத்திற்கு (Common Service Centre - CSC) சென்று, விண்ணப்பிக்கும் செயல்முறைக்கு உதவி பெறலாம்.