கொலஸ்ட்ரால் இருக்கா? தென்படும் 6 அறிகுறிகள். அலட்சியம் செய்யாதீங்க!
கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதன் மூலம் நமது தோல்களில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் இதற்கு 6 முக்கியமான அறிகுறிகளை கவனிக்க வேண்டும் என்றும் மருத்துவரை எந்த Stage-ல் பார்க்க வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.
ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்போது, ஆரம்பத்தில் எந்தவித பிரச்சனைகளும் இருக்காது. அதாவது கடுமையான வலியோ அல்லது உபாதைகளோ ஏற்படாது. இதன் காரணமாக மருத்துவர்கள் இதனை Silent Killer என்று கூறுகின்றனர்.
அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, ரத்தத்தில் உள்ள கொழுப்பை கண்டறிய பரிசோதனை மட்டுமே முதன்மையானது. இருப்பினும், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள் தீவிரமாக அதிகரிக்கும் போது, கண்கள், தோல் மற்றும் கால்கள் போன்ற உறுப்புகளில் சில அறிகுறிகள் தோன்றும்.
1. கண் இமைகளில் மஞ்சள் திட்டுகள் (Xanthelasma)
கண் இமைகளை சுற்றி அல்லது கண்களின் மூலையில் மெல்லிய மஞ்சள் நிறத்தில் கொழுப்பு படிவுகள் தோன்றலாம். ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு வழக்கத்திற்கு மாறாக தேங்கும் போது, அது தோலுக்கு அடியில் படிந்து இத்தகைய தட்டையான திட்டுகளை உருவாக்குகிறது.
2. கருவிழியை சுற்றிய வளையம் (Arcus Senilis)
- கண்ணின் கருவிழி பகுதியை சுற்றி சாம்பல், வெள்ளை அல்லது நீல நிறத்தில் ஒரு மெல்லிய வளையம் தென்படலாம்.
- 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது இயல்பான வயது முதிர்ச்சியின் அறிகுறி.
- ஆனால், 45 வயதுக்குட்பட்டோருக்கு இது தென்பட்டால், அது மரபணு சார்ந்த அதீத கொலஸ்ட்ரால் மற்றும் இளம் வயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுவதற்கான தீவிர எச்சரிக்கையாகும்.
3. தோலில் மெழுகு போன்ற கட்டிகள் (Xanthomas)
முழங்கை, முழங்கால், கைகள், பாதங்கள் உள்ளிட்ட பகுதியில் மஞ்சள்-ஆரஞ்சு நிறத்தில் சிறிய கொப்பளங்கள் அல்லது கட்டிகள் தோன்றும். குறிப்பாக, டிரைகிளிசரைடுகள் ஆபத்தான அளவுக்கு உயரும் போது, உடலில் திடீரென பல கட்டிகள் தோன்றக்கூடும். கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்நிலை அதிகம் காணப்படுகிறது.
4. குதிகால் தசைநார் வீக்கம் (Tendon Xanthoma)
காலின் பின்பகுதி குதிகாலுடன் இணையும் அகில்லெஸ் தசைநார் அல்லது கைகளின் விரல் நரம்புகளில் கொழுப்பு படிந்து வீக்கம் உண்டாகலாம். காலணிகள் அணியும்போது அல்லது தொடும்போது இந்தத் தசைநார்கள் தடிமனாக உணர்வது பரம்பரை கொலஸ்ட்ராலின் முக்கிய அறிகுறியாகும்.
5. நடக்கும்போது கால்களில் தசைப்பிடிப்பு (Peripheral Artery Disease)
ரத்தத்தில் கொலஸ்ட்ரால் படிவதால் கால்களுக்கு செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் சிறிது தூரம் நடக்கும்போது அல்லது மாடிப்படிகளில் ஏறும்போதும் தொடை மற்றும் கெண்டைக்கால் பகுதியில் தாங்க முடியாத வலி, பாரம் அல்லது பிடிப்பு ஏற்படும். ஓய்வெடுத்தால் வலி குறையும். இது இதய ரத்த நாளங்களிலும் அடைப்பு இருப்பதற்கான மறைமுக சமிக்ஞையாகும்.
6. குளிர்ந்த பாதங்கள் மற்றும் ஆறாத காயங்கள்
வெப்பநிலை சாதாரணமாக இருந்தாலும் பாதங்கள் எப்போதும் ஐஸ் போன்று குளிர்ந்து இருப்பது.
காலில் ஏற்படும் சிறிய வெட்டுக்காயங்கள் அல்லது கீறல்கள் நீண்ட நாட்களாக ஆறாமல் இருப்பது.
கால்களின் தோல் வெளிறி, முடி உதிர்ந்து பளபளப்பாக மாறுவது.
யாரெல்லாம் உடனடி பரிசோதனை செய்ய வேண்டும்?
- குடும்பத்தில் இளம் வயதிலேயே யாருக்காவது மாரடைப்பு அல்லது அதிக கொலஸ்ட்ரால் வரலாறு இருந்தால்
- சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள்
- உடற்பயிற்சியற்ற வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள்
- புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள்
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் வழிகள்
டிரான்ஸ் கொழுப்பு மற்றும் பொரித்த உணவுகளை தவிர்த்து, நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸ், நட்ஸ், காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தல் மற்றும் மருத்துவரின் பரிந்துரைப்படி மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வதன் மூலம் இதய பாதிப்பை தடுக்கலாம்.