SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

லேட் நைட்டில் பிரியாணி சாப்பிடுறீங்களா? பெரிய ஆபத்து.. பிரச்சனைகள் & தீர்வுகள்!

இரவு நேரத்தில் தாமதமாக பிரியாணி சாப்பிடுவது அஜீரணம், தூக்கமின்மை மற்றும் உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Reported By R Balaji Written By R Balaji
Published: Aug 08, 2026, 08:22 PM IST | Updated: Aug 08, 2026, 08:26 PM IST
Join

உங்களுக்கு பிடித்த உணவு எது என கேட்டால், பலரும் பிரியாணியை கூறுவார்கள். வார இறுதி நாட்களிலோ அல்லது லேட் நைட்டில் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது பிரியாணி சாப்பிடும் பழக்கம் இங்கு பலருக்கும் இருக்கிறது. ஆனால் லேட் நைட்டில் பிரியாணி சாப்பிடுவது நல்லதா? அதனை அறியாமலேயே பலரும் இந்த பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், இரவு நேரத்தில் தாமதமாக பிரியாணி சாப்பிடுவது நம் செரிமான மண்டலத்தையும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து பெங்களூரு Aster CMI மருத்துவமனையின் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறை தலைவர் திருமதி. எட்வினா ராஜ் விளக்கி உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், எப்போதாவது ஒருமுறை இரவில் பிரியாணி சாப்பிடுவதால் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படாது. ஆனால் பிரியாணியில் பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை அரிசி, அதிகப்படியான நெய், எண்ணெய், காரசாரமான மசாலா பொருட்கள் மற்றும் இறைச்சி ஆகியவை அதனை செரிமானத்திற்கு கடினமான உணவாக மாற்றுகின்றன.

தூங்குவதற்கு முன்பாக இத்தகைய கனமான உணவுகளை உட்கொள்ளும்போது உடலில் சில உபாதைகள் ஏற்படக்கூடும்.

இரவில் செரிமானம் தாமதமாவது ஏன்?

பகல் நேரத்தில் நம் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதால் வளர்சிதை மாற்றமும் செரிமானமும் விரைவாக நடைபெறும். ஆனால் இரவு நேரத்தில் நம் உடலின் உறுப்புகள் ஓய்வு நிலைக்கு செல்ல தொடங்கும். அந்நேரத்தில் அதிக கொழுப்பும் மசாலாவும் நிறைந்த உணவுகள் வயிற்றில் நீண்ட நேரம் தங்கி மெதுவாகவே செரிமானமாகும். இதனால் சிலருக்கு நள்ளிரவில் கடுமையான தாகமும் வயிறு அசௌகரியமும் ஏற்படுகிறது.

லேட் நைட் பிரியாணி - உடல் எடையை அதிகரிக்குமா? 

ஒரே ஒரு நாள் சாப்பிடுவதால் உடனடியாக எடை கூடிவிடாது. ஆனால், இரவு நேரத்தில் தொடர்ந்து பிரியாணி போன்ற மசாலா நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடல் எடையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

இரவில் தேவையை விட அதிக கலோரிகள் சேரும்போது, அவை கொழுப்பாக பதிந்து உடல் பருமன் மற்றும் ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். மேலும், தூக்கம் பாதிக்கப்படுவதால் மறுநாள் ஹார்மோன் சமனின்மை ஏற்பட்டு, அதிக பசி எடுக்கும் நிலைக்கு வழிவகுக்கும்.

யாரெல்லாம் இரவு நேரப் பிரியாணியைத் தவிர்க்க வேண்டும்?

  1. நீரிழிவு நோய் (Diabetes)
  2. உடல் பருமன் (Obesity)
  3. தீவிர அமிலத்தன்மை அல்லது நெஞ்செரிச்சல்
  4. கொழுப்பு கல்லீரல் (Fatty Liver)
  5. உயர் கொலஸ்ட்ரால் உள்ளிட்ட ஆரோக்கிய பிரச்சனைகள் உள்ளவர்கள் இரவு நேரத்தில் பிரியாணியை தவிர்ப்பது நல்லது.

கூடுதல் மருத்துவ ஆலோசனைகள் & தப்பிக்கும் வழிகள்

இரவில் பிரியாணி சாப்பிட நேர்ந்தால், உடலுக்கு பாதிப்பு குறைய இந்த எளிய வழிகளைப் பின்பற்றுங்கள்.

அளவைக் குறைக்கவும்: பெரிய பிளேட் பிரியாணிக்கு பதிலாக சிறிய அளவில் சாப்பிடுங்கள்.

3 மணி நேர இடைவெளி: சாப்பிட்ட பிறகு குறைந்தபட்சம் 2 முதல் 3 மணி நேரம் கழித்தே தூங்க செல்ல வேண்டும்.

தயிர் பச்சடி: பிரியாணியுடன் தயிர் அல்லது காய்கறி சாலட் சேர்த்துக்கொள்வது செரிமானத்தை விரைவுப்படுத்த உதவும்.

கூடுதல் கலோரிகளை தவிர்க்கவும்: பிரியாணியுடன் குளிர்பானங்கள் மற்றும் இனிப்புகளை தவிர்க்கவும்.

மிதமான நடைப்பயிற்சி: சாப்பிட்டு முடித்ததும் 10 முதல் 15 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது செரிமானத்தை எளிதாக்கும்.

வெதுவெதுப்பான நீர்: சாப்பிட்ட பிறகு போதுமான அளவு வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது அஜீரணத்தை கட்டுப்படுத்தும் என மருத்துவர் எட்வினா ராஜ் கூறுகிறார்.

மேலும், பிரியாணியில் உள்ள காரமும் எண்ணெயும் வயிற்றுப் படலத்தை பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, இரவு நேரப் பிரியாணிக்கு மாற்றாக, மதிய உணவில் பிரியாணி சாப்பிடுவதே உடல் ஆரோக்கியத்திற்குச் சிறந்தது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.

ZEENEWS TRENDING STORIES