Senior Citizen FD: முதியவர்களுக்கு எந்த வங்கியில் அதிக FD வட்டி? 2026 டாப் வங்கிகள் பட்டியல்!
Senior Citizen FD: மூத்த குடிமக்களுக்கான ஃபிக்சட் டெபாசிட் வட்டி நிலையாக இருக்கும் நிலையில், அதிக வட்டி தரும் வங்கிகள் மற்றும் பாதுகாப்பான முதலீட்டு குறிப்புகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
ஃபிக்சட் டெபாசிட் மூலம் நிலையான வட்டி வருமானம் பெறும் மூத்த குடிமக்களுக்கு ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு பெரிய நிம்மதியை அளித்துள்ளது. ஆகஸ்ட் மாத நாணய கொள்கை அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகவே ரிசர்வ் வங்கி தக்கவைத்துள்ளது. தொடர்ந்து 4வது முறையாக வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லாததால், வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கான வட்டி வருமானத்தில் பெரிய அளவில் சரிவு ஏற்படாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
எந்தெந்த வங்கிளில் அதிக வட்டி கிடைக்கிறது?
- 2026, ஆகஸ்ட் மாத நிலவரப்படி, மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதத்தை ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தருகிறது. இந்த வங்கி 2 முதல் 3 ஆண்டுகள் வரை 8.30% வட்டியை வழங்குகிறது.
- இதையடுத்து ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 888 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்புத்தொகைகளுக்கு 8.25% வட்டி வழங்குகிறது.
- ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 30 மாதங்கள் 1 நாள் முதல் 36 மாதங்கள் வரை 7.90% வட்டியை வழங்குகிறது.
தனியார் துறை வங்கிகள் (Private Banks)
- இண்டஸ்இண்ட் வங்கி: 2 முதல் 3 ஆண்டுகள் – 7.75%
- கோடக் மஹிந்திரா வங்கி: 7.30%
- ஆக்சிஸ் வங்கி: 7.25%
- ஐசிஐசிஐ வங்கி: 7.10%
- ஹெச்டிஎஃப்சி வங்கி: 7.00%
பொதுத்துறை வங்கிகள் (Public Sector Banks)
- பேங்க் ஆஃப் பரோடா (BoB கோல்டன் கோல் டெபாசிட் - 555 நாட்கள்): 7.25%
- பஞ்சாப் நேஷனல் வங்கி & கனரா வங்கி: 7.10%
- ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) & யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 7.05%
முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டியவை
ரூ. 5 லட்சம் வரையிலான காப்பீடு: ஒரு வைப்பாளருக்கு ஒரு வங்கி அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வரை அசல் மற்றும் வட்டி சேர்த்து ஆர்பிஐ-யின் DICGC காப்பீடு வழங்குகிறது. எனவே, உங்களிடம் பெரிய தொகையை ஒரே வங்கியில் போடாமல், வெவ்வேறு வங்கிகளில் பிரித்து முதலீடு செய்வது முழு பாதுகாப்பை தரும்.
வங்கியின் நம்பகத்தன்மை & சேவை
அதிக வட்டி கிடைக்கிறது என்பதற்காக மட்டும் முதலீடு செய்யாமல், வங்கியின் நிதி நிலைத்தன்மை, வாடிக்கையாளர் சேவை மற்றும் உங்களின் வசதிக்கேற்ப கிளைகள் உள்ளதா என்பதையும் கவனத்தில் கொள்ளவது நல்லது.
முன்கூட்டியே பணத்தை எடுக்கும் விதிகள்
அவசர தேவைகளுக்காக முதிர்வு காலத்திற்கு முன்பே பணத்தை எடுக்கும் போது, பெரும்பாலான வங்கிகள் 0.5% முதல் 1% வரை அபராதம் பிடிக்கும் என்பதால், அதற்கான விதிகளையும் முதலீடு செய்யும் போதே தெரிந்து கொள்ளுங்கள்.
Form 15H மூலம் TDS வரியை தவிர்க்கலாம்
மூத்த குடிமக்களுக்கு ஒரு நிதியாண்டில் ஃபிக்சட் டெபாசிட் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம் ரூ. 50,000-ஐ தாண்டினால் வங்கி TDS வரியை பிடிக்கும். ஆனால், உங்களின் மொத்த ஆண்டு வருமானம் வரி வரம்பிற்குள் வரவில்லை என்றால், நிதியாண்டின் தொடக்கத்திலேயே Form 15H படிவத்தை வங்கியில் சமர்ப்பித்து வரிப்பிடித்தம் இன்றி முழு வட்டியையும் பெறலாம்.
'FD லேடரிங்' (FD Laddering)
மொத்த தொகையையும் ஒரே முதிர்வு காலத்தில் போடாமல், 1 ஆண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் எனப் பிரித்து முதலீடு செய்யுங்கள். இது ஒவ்வொரு ஆண்டும் உங்களுக்கு தேவைப்படும் போது பணத்தை மறுமுதலீடு செய்யவோ அல்லது அவசர தேவைகளுக்குப் பயன்படுத்தவோ பெரிதும் உதவும்.