• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /உலகம்
  • /Explainer: சூப்பர் எல் நினோ என்றால் என்ன? இந்தியாவில் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்?

Explainer: சூப்பர் எல் நினோ என்றால் என்ன? இந்தியாவில் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்?

2026-27 காலகட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தீவிரமடையும் என கணிக்கப்படும் 'சூப்பர் எல் நினோ' உலக வானிலையிலும், இந்தியாவின் வெப்பநிலை மற்றும் பருவமழையிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

Reported ByR BalajiEdited ByR Balaji
Published: Aug 20, 2026, 07:59 PM IST|Updated: Aug 21, 2026, 04:29 PM IST
joinshare
Explainer: சூப்பர் எல் நினோ என்றால் என்ன? இந்தியாவில் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்?

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

ரேஷன் கார்டு இருக்கா? இந்த வசதி இருப்பதை மறக்காதீங்க.. ONORC மூலம் கிடைக்கும் முக்கிய நன்மை

2

அமெரிக்காவின் திடீர் தடை... இந்திய ஊழியர்களுக்கு இனி கிரீன் கார்டு கிடைக்காதா? Explained

3

NZ ஒருநாள் தொடர்: 2 இந்திய அணிகள்.. புவி, ஷமிக்கு வாய்ப்பு? முழு விவரம்

4

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்ஆர் காங்கிரஸ் அசோக் ஆனந்த் 8,501 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

5

அக்டோபர் 31ல் குரு - கேது சேர்க்கை.. இந்த 4 ராசிகளுக்கு பணம் கொட்டும்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

காலநிலை மாற்றத்தால், உலகில் இயற்கை நிகழ்வுகளின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயிலின் தாக்கம், மழையின் அளவு என வானிலை மாற்றங்கள் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகின்றன. இதற்கிடையில், ‘எல் நினோ’ என்ற வானிலை நிகழ்வு மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் இந்த மாற்றம் உலகின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவை மாற்றும் சக்தி கொண்டது. குறிப்பாக, 2026-27 காலகட்டத்தில் உருவாகி வரும் எல் நினோ இதுவரை பதிவானதை வைத்து பார்க்கையில் மிகவும் வலுவானதாக இருக்கலாம் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் ‘சூப்பர் எல் நினோ’ என்ற வார்த்தையும் தற்போது பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், எல் நினோ என்றால் என்ன? இது உலக வானிலையை எப்படி மாற்றுகிறது? இந்தியாவுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்? என்பது குறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்.

எல் நினோ என்றால் என்ன?

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலையில் ஏற்படும் இயற்கையான மாற்றத்தால் உருவாகும் ஒரு காலநிலை நிகழ்வு. குறிப்பாக, பூமத்திய ரேகையை ஒட்டிய மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதியில் கடல் மேற்பரப்பு வழக்கத்தைவிட அதிகமாக வெப்பமடைவதே இதன் முக்கிய அறிகுறியாகும். இந்த மாற்றம் கடலில் மட்டும் ஏற்படுவதில்லை. வளிமண்டலத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தி உலகின் பல்வேறு பகுதிகளின் வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவு முறையை மாற்றுகிறது.

பொதுவாக, பசிபிக் பெருங்கடலில் கிழக்கிலிருந்து மேற்காக வீசும் காற்றுகள், சூடான கடல் நீரை ஆசியாவை நோக்கி தள்ளுகின்றன. இதனால் தென் அமெரிக்க கடற்கரை பகுதியில் ஆழ்கடலில் இருக்கும் குளிர்ந்த நீர் மேலே வரும். இதனை ‘Upwelling’ என்று அழைக்கின்றனர். ஆனால் எல் நினோ உருவாகும்போது இந்த காற்றின் வேகம் குறைகிறது. இதனால் சூடான கடல் நீர் கிழக்கு நோக்கி நகர்ந்து, தென் அமெரிக்காவை ஒட்டிய பசிபிக் கடல் பகுதியிலும் வெப்பநிலை அதிகரிக்கிறது.

கடல் வெப்பநிலையில் ஏற்படும் இந்த மாற்றம் மழைப்பொழிவு முறையையும் மாற்றுகிறது. வழக்கமாக மேற்கு பசிபிக் பகுதியில் அதிக மழையை உருவாக்கும் சூடான கடல் நீர் கிழக்கு நோக்கி நகர்வதால், தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் வறண்ட வானிலை ஏற்படலாம். அதேநேரத்தில் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்யும் சூழல் உருவாகலாம். இதன் தாக்கம் பசிபிக் பெருங்கடலை தாண்டி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படலாம்.

உலக வானிலையில் என்ன மாற்றம் ஏற்படும்?

எல் நினோ உருவாகும்போது பசிபிக் பெருங்கடலில் மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு பகுதிகளிலும் வானிலை மாற்றம் ஏற்படும். கடல் மற்றும் வளிமண்டலத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் வானிலை நிகழ்வுகளின் தன்மையையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக தென்கிழக்கு ஆசியா மற்றும் தென் அமெரிக்கா போன்ற பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் எல் நினோ காலங்களில் வழக்கத்தைவிட வறண்ட வானிலை நிலவக்கூடும். இதனால் வறட்சி மற்றும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் உள்ளதாம். அதே நேரத்தில் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டு வெள்ளம் போன்ற பாதிப்புகள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. கொலம்பியா, வெனிசுலா மற்றும் வடக்கு பிரேசில் போன்ற பகுதிகளில் வறட்சி மற்றும் காட்டுத்தீ அபாயமும், தெற்கு பிரேசில், மத்திய சிலி மற்றும் வடக்கு அர்ஜென்டினாவில் வெள்ள அபாயமும் அதிகரிக்கலாம்.

எல் நினோ உலக வெப்பநிலையிலும் தற்காலிகமான உயர்வை ஏற்படுத்தும். வர்த்தகக் காற்றுகள் பலவீனமடைவதால் பசிபிக் கடலில் உள்ள வெப்பமான நீர் பரவி, கடலில் சேமிக்கப்பட்டுள்ள வெப்பம் வளிமண்டலத்துக்கு வெளியிடப்படுகிறது. இதன் காரணமாக உலக சராசரி வெப்பநிலை உயரக்கூடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட வலுவான எல் நினோ நிகழ்வுகளும் உலகளாவிய வெப்பநிலை சாதனைகள் பதிவாகுவதற்கு பங்களித்துள்ளன. இருப்பினும், நீண்டகால உலக வெப்பநிலை உயர்வுக்கு முக்கிய காரணம் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் காலநிலை மாற்றமே என Carbon Brief குறிப்பிடுகிறது.

புயல்களின் உருவாக்கம் மற்றும் நகர்விலும் எல் நினோ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். பசிபிக் பகுதியில் காற்று மற்றும் கடல் வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்கள் வெப்பமண்டல புயல்கள் உருவாகும் இடத்தையும் அவற்றின் நகரும் பாதையையும் மாற்றலாம். ஆசியாவில் சில புயல்கள் பிலிப்பைன்ஸ் நோக்கி செல்வதற்கு பதிலாக சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா பகுதிகளை நோக்கி செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால் சில புயல்கள் நிலத்தை அடைவதற்கு முன்பு அதிக நேரம் கடலில் பயணித்து, அதிக வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் பெற்று வலுப்பெறும் சூழலும் உருவாகலாம்.

இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

எல் நினோவின் தாக்கம் இந்தியாவில் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கக்கூடும். எல் நினோவின் தாக்கம் இந்தியாவிலும் உணரப்படலாம். குறிப்பாக, ஆண்டின் தொடக்கத்தில் வெப்பநிலை அதிகரிப்பதற்கும், அதன்பிறகு தென்மேற்கு பருவமழை பலவீனமடைவதன் மூலம் வறட்சி அபாயம் அதிகரிப்பதற்கும் எல் நினோ காரணமாக இருக்கலாம். இருப்பினும், எல் நினோ உருவான ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மழை குறையும் என்று உறுதியாக கூற முடியாது. இந்திய பருவமழையை தீர்மானிக்கும் பல்வேறு கடல் மற்றும் வளிமண்டல காரணிகளில் எல் நினோவும் ஒன்று.

2026 ஆம் ஆண்டை பொறுத்தவரை, இந்த தாக்கம் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உலக வானிலை அமைப்பான WMO-வின் ஜூலை 2026 கணிப்பின்படி, ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் எல் நினோ மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலையும், சில பகுதிகளில் அதிக மழையும், சில பகுதிகளில் வறட்சி ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை, எல் நினோவுடன் சேர்ந்து இந்திய பெருங்கடல் இருமுனை நிலை என்பதும் முக்கியமான காரணமாக இருக்கும். 2026ல் நேர்மறை IOD உருவாகும் என WMO கணித்துள்ளது. இதுபோன்ற கடல் வெப்பநிலை மாற்றங்கள் எல் நினோவின் தாக்கத்துடன் இணைந்து இந்திய பெருங்கடல் பகுதியின் மழைப்பொழிவு மற்றும் வானிலை நிலைகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இதனால், 2026-27 எல் நினோ காலகட்டத்தில் இந்தியாவில் வெப்பநிலை, பருவமழை மற்றும் வறட்சி நிலவரத்தை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம். குறிப்பாக விவசாயம், நீர்வளம் மற்றும் வெப்பத்தை சார்ந்துள்ள துறைகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கக்கூடும்.

2026-27 எல் நினோ ஏன் மிகவும் வலுவானதாக பார்க்கப்படுகிறது?

தற்போது உருவாகி வரும் எல் நினோ உலக அளவில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. Carbon Brief மேற்கொண்ட ஆய்வில், எல் நினோவை கண்காணிக்கும் 14 வெவ்வேறு காலநிலை மாதிரி குழுக்களின் கணிப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 96 சதவீத கணிப்புகள், 2026-27 எல் நினோ நவீன கால வானிலை பதிவுகளில் இதுவரை ஏற்பட்டதைவிட மிகவும் வலுவானதாக இருக்கலாம் என தெரிவிக்கின்றன.

எல் நினோவின் தீவிரத்தை கணக்கிடுவதற்கு பசிபிக் பெருங்கடலின் மத்திய பகுதியில் உள்ள Niño3.4 எனப்படும் பகுதியின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை முக்கியமான அளவீடாக பயன்படுத்தப்படுகிறது. இந்த பகுதியில் பதிவாகும் வெப்பநிலை, நீண்டகால சராசரியை விட எவ்வளவு அதிகமாக இருக்கிறது என்பதே ‘temperature anomaly’ எனப்படுகிறது. தற்போதைய கணிப்புகளைப் பார்த்தால், 2026-27 எல் நினோவின் உச்சக்கட்டத்தில் பசிபிக் கடல் வெப்பநிலை, 2015-16ல் பதிவான 2.75°C உயர்வையும் தாண்டும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே இந்த எல் நினோவை காலநிலை ஆய்வாளர்கள் ‘சூப்பர் எல் நினோ’ என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ‘சூப்பர் எல் நினோ’ என்பது அதிகாரப்பூர்வமான அறிவியல் சொல் கிடையாது. தற்போதைய நிகழ்வு மிகவும் வலுவாக இருக்கலாம் என்பதை விளக்குவதற்காகவே இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.

காலநிலை மாற்றத்துக்கும் எல் நினோவுக்கும் தொடர்பு உள்ளதா?

எல் நினோ மற்றும் காலநிலை மாற்றம் இடையேயான தொடர்பு குறித்து விஞ்ஞானிகளிடையே இன்னும் ஆய்வு மற்றும் விவாதம் நடைபெற்று வருகிறது. IPCC-ன் 2021 மதிப்பீட்டின்படி, 1950க்குப் பிறகு அதிக வலிமை கொண்ட El Niño நிகழ்வுகளின் தீவிரம் அதிகரித்திருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன. ஆனால் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் climate proxy பதிவுகளை பார்க்கும்போது El Niño-வின் தீவிரமும் நிகழ்வு எண்ணிக்கையும் இயற்கையாகவே பெரிய அளவில் மாறுபட்டுள்ளன. எனவே, சமீபத்திய வலுவான El Niño நிகழ்வுகளுக்கு மனிதனால் ஏற்படும் global warming மட்டுமே காரணம் என்று உறுதியாக கூற முடியாது.

எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் ஒரு மாற்றம் மட்டுமல்ல, அதன் தாக்கம் உலகின் பல்வேறு பகுதிகளின் வெப்பநிலை, மழைப்பொழிவு மற்றும் வானிலை நிலைகளிலும் எதிரொலிக்கக்கூடும். 2026-27ல் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் எல் நினோ, இந்த தாக்கங்களை மீண்டும் கவனம் செலுத்த வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது. இருப்பினும், எல் நினோவின் தாக்கம் ஒவ்வொரு நாட்டிலும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை பருவமழை, வெப்பநிலை, நீர்வளம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளில் ஏற்படும் மாற்றங்களை தொடர்ந்து கண்காணிப்பது முக்கியம். அதேநேரத்தில், ‘சூப்பர் எல் நினோ’ என்ற பெயர் அதிக கவனத்தை ஈர்த்தாலும், அதன் உண்மையான தாக்கத்தை வரும் மாதங்களில் கிடைக்கும் வானிலை தரவுகள் மற்றும் புதிய கணிப்புகளின் அடிப்படையிலேயே தெளிவாக மதிப்பிட முடியும்.
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Explainer